அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 02

بسم الله الرحمن الرحيم

11. நாங்கள் (அல்லாஹ்வாகிய) அவனைப் போன்று எதுவும் இல்லை, அவன் செவியேற்பவனும் (கண்களால்) பார்ப்பவனுமாவான் என்ற நம்புகிறோம்.

அவனுக்கே வானங்கள், இப்பூமியின் திறவுகோல் (அதிகாரம்) உரியன.அவன் தான் நாடியவர்களுக்கு உணவைத் தாராளமாகவும் அளவோடும் வழங்குகிறான். “நிச்சயம் அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்” என்றும் ஈமான் கொள்வோம். (ஸூரதுஷ் ஷூரா 42: 11, 12)

நாங்கள் அல்லாஹ் பற்றிய விடயங்களுக்கு “அவனைப் போன்று எதுவும் இல்லை அவன் யாவற்றையும் பார்ப்பவனும் செவியேற்பவனும் ஆவான்” என்ற குர்ஆனிய  வசனத்தை ஒரு கோட்பாடாக எடுத்து, அதன் மூலம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு  விளக்கம் கூறுவோம். (ஸூரதுஷ் ஷூரா  42:11)

உ+ம்: அல்லாஹ்வுக்கு இரு கண்கள் இருப்பதாகக் குர்ஆன் கூறுகிறது. படைப்புக்கும் இரு கண்கள் இருக்கின்றன. இப்படி இருக்கும் போது அஹ்லுஸ்ஸுன்னாவாகிய நாம் கண் என்று வரும் வசனங்களுக்கு வேறு விளக்கம் கொடுக்காமல் அது கண் தான் என்று கூறி, அக்கண் படைப்புகளுக்கு இருக்கும் கண் போன்று இல்லாமல் அவ்விரண்டும் அவனின் அந்தஸ்துக்கு ஏற்ற விதத்தில் பூரணமானதாக, குறையற்ற கண்ணாக இருக்கிறது என்பதை அக்கோட்பாட்டின் மூலம் விளக்கம் கூறுவோம்.

12. நாங்கள் பூமியில் உள்ள எந்த உயிரினமாயினும் அவைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீது மாத்திரமே உள்ளது. அவைகளின் வாழ்விடத்தையும் அவை சென்றடையுமிடத்தையும் அவன் நன்கறிந்தவன், இவையனைத்தும் தெளிவான பதிவேட்டில் இருக்கின்றன” என்றும் விசுவாசம் கொள்கிறோம். (ஸூரதுல் ஹூத்: 06ம் வசனம்)

13. நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்விடம் மட்டுமே மறுமை பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையை இறக்குகிறான். இன்னும், அவன் கருவறையில் உள்ளவற்றை அறிவான். எந்தவோர் ஆத்மாவும் தான் நாளை எதைச் சம்பாதிக்கும் என்பதை அறிய மாட்டாது. மேலும், எந்த ஆத்மாவும் தான் எந்தப் பூமியில் மரணிக்கும் என்பதை அறியமாட்டாது. “நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் மிக நுட்பமானவனுமாவான்” என்று விசுவாசம் கொள்வோம். (ஸூரது லுக்மான்: 34ம் வசனம்)

14. நாங்கள் அல்லாஹ் எதைப் பேச நாடுகிறானோ, எப்போது எப்படி யாருடன் பேச நாடுகிறானோ அப்போது அவன் செவிமடுக்க முடியுமான வார்த்தைகள் மூலம் பேசுகிறான், பேசுவான்.

இன்னும், “அல்லாஹ் மூஸாவுடன்  உறுதியாகப் பேசினான்.” என்றும் ஈமான் கொள்வோம் (ஸூரதுன் நிஸா: 164)

இன்னும் அல்லாஹ் “நாம் குறிப்பிட்ட நேரத்திற்கு மூஸா வந்து அவருடன் அவரின் றப்பு பேசினான்.” (ஸூரதுல் அஃராப்: 143)

இன்னும், “தூர்ஸினா மலையின் வலது புறத்திலிருந்து நாம் (மூஸாவாகிய) அவரை சப்தமிட்டு அழைத்தோம். இரகசியமாகப் பேச நாம் அவரை நெருங்கிவரச் செய்தோம். (ஸூரது மர்யம்: 54) இப்படி அல்லாஹ் தான் நாடிய போது பேசுகிறான் என்று  ஸலபிகளாகிய நாம் நம்புவோம்.

15. எனது ரப்பின் வார்த்தைகளை எழுத கடல் நீர் மையாக இருந்தாலும் எனது ரப்பின் வார்த்தைகள் எழுதி முடிவதற்கு முன் கடல் நீர் முடிந்து விடும். அது போன்ற ஒன்றை மீண்டும் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரியே! அவைகளும் முடிந்துவிடும். (ஸூரதுல் கஹ்ப்: 109) என்று வெற்றி பெற்ற கூட்டமாகிய நாம் நம்புகிறோம்.

இன்னும், “பூமியில் உள்ள மரங்கள் எழுதுகோலாகவும் கடலும் அதனுடன் சேர்ந்து இன்னும் ஏழுகடல்கள் மையாக இருந்த போதிலும் அல்லாஹ்வின் வார்த்தைகள் எழுதி முடிந்து விடமாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாவான்” என்றும் நாம் நம்புவோம். (ஸூரது லுக்மான்: 27)

16. நாம் அல்லாஹ்வின் வார்த்தைகள், வார்த்தைகளிலே மிகவும் பூரணமானது என்றும் செய்திகளிலே மிகவும் உண்மையானது என்றும் சட்டங்களிலே மிக நீதமானது என்றும் பேச்சில் மிக அழகானது என்றும் ஈமான் கொள்கிறோம். ஏனெனில், அல்லாஹ் ஸூரதுல் அன்ஆம் 06: 155  “இல் உமது றப்பின் வார்த்தைகள் உண்மையிலும் நீதத்திலும் மிகப் பூரணமானது” என்று கூறுகிறான். அதேபோல், ஸூரதுந் நிஸா 04: 87 இல் “பேச்சில் அல்லாஹ்வைவிட உண்மை கூறுபவன் யார் இருக்கிறான் என்று கேட்கிறான் என்பதற்காகவும் இப்படி ஈமான் கொள்கிறோம்.

17. அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, அது படைக்கப்பட்ட ஒன்றல்ல. அக்குர்ஆன் மூலம் அல்லாஹ் உண்மையாகச் செவிமடுக்க முடியுமான சொற்களைக் கொண்டு பேசினான். இன்னும், அதை அவன் ஜிப்ரீலின் மீது போட்டான். பின் அதை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்  முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறக்கினார். என்று குர்ஆன் விடயத்தில் இப்படியான நம்பிக்கையில் இருக்கிறோம். ஏனெனில், அல்லாஹ் ஸூரதுந் நஹ்லில் 27:102 இல் “உமது றப்பிடமிருந்து உண்மையாக யதார்த்தமாக ரூஹுல் அமீன் ஆகிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் (குர்ஆனாகிய) அதை இறக்கி வைத்தான்” என்று கூறியிருப்பதற்காக வேண்டியும். (ஸூரதுஷ் ஷுஅராவில் 27: 192,195) “நிச்சயமாக அக்(குர்ஆனை) அகிலத்தில் வணங்கப்படுபவனாகிய அவன் இறக்கி வைத்தான். தெளிவான அரபு மொழியில் இருக்கும் அக்(குர்ஆனுடன்) ரூஹுல் அமீனாகிய ஜிப்ரீல் (நபியாகிய) உம் உள்ளத்தில் நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரில் இருப்பதற்காக வேண்டி இறக்கினார்” என்றும் கூறியிருப்பதற்காகவும் இப்படி ஈமான் கொள்கிறோம்.

18. நாங்கள் அல்லாஹ்வாகிய அவன் தன் தோற்றத்திலும் தன் பண்புகளிலும் படைப்புகளை  விட உயர்ந்தவனும்  மேலே உயரத்தில் இருக்கிறான் என்று நம்புகிறோம். ஏனெனில், நாங்கள் இப்படி நம்புவது  அல்லாஹ் பின்வருமாறு கூறியிருக்கிறான் என்பதற்காகவேயாகும்.

ஸூரதுல் பகாறா: 255 ம் “அவன் மிக மேலானவனும் மகத்துவம் மிக்கவனுமாவான்.”

ஸூரதுல் அன்ஆம் 06: 18 ம் வசனத்தில் “அவன் அவனின் அடியார்களுக்கு மேல் இருந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள்கிறான். இன்னும், அவன் மிக்க ஞானமுள்ளவனும் தீர்க்கமான அறிவுடையவனுமாவான்” என்று கூறுகிறான்.

19. நாங்கள் (அல்லாஹ்வாகிய) “அவன் வானங்களையும்  பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்பு அவன் (ஏழு வானங்களுக்கு மேலால் இருக்கும் சிம்மாசனமாகிய அந்த) அர்ஷின் மீது உயர்ந்தான். அவன் இப்படி அர்ஷில் இருந்து கொண்டு கவனிப்பு, கண்காணிப்பு விடயத்தில் பிடறி நரம்பைவிடச் சமீபமாக இருக்கிறான்” என்று ஈமான் கொள்கிறோம்.

(ஸூரது யூனுஸ் 10:03)ம் வசனத்தில் அவன் அர்ஷின் மீது உயர்வதென்பது, அவனின் (தாத் - ذات) தோற்றத்துடன்  அவனின் அந்தஸ்துக்குத் தக்க விதத்திலும் அவனின் கண்ணியத்திற்குத் தக்க விதத்திலும் உயர்வதாகும். அவன் எப்படி உயர்ந்தான் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்றும் ஈமான் கொள்கிறோம். இன்னும், இமாம் மாலிக் رحمه الله கூறிய கூற்றான: “அல்லாஹ் உயர்ந்தான் என்பது அறியப்பட்ட விடயம், எப்படி உயர்ந்தான் என்பது அறியப்படாத ஒரு விடயம், அதுபற்றி (அறிந்து பிடிவாதமாகக்) கேள்வி கேட்பது பித்அத்தாகும். உயர்ந்தான் என்பதை ஈமான் கொள்வது கட்டாயமாகும்” என்ற இக்கூற்றை அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகள் விடயத்தில் கொட்பாடாக எடுத்துள்ளோம்.

20. அல்லாஹுத்ஆலா தன் தோற்றத்தில் அர்ஷில் இருந்து கொண்டு, அறிவுடனும் கண்காணிப்பு விடயத்தில் படைப்புக்களுடன் பிடறி நரம்பைவிட சமீபமாக இருக்கிறான் என்று நாங்கள் ஈமான் கொள்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்: “(அல்லாஹ்வாகிய) ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான்.” (ஸூரது தாஹா: 05 )

மேலும் கூறுகிறான்: “நாங்கள் அந்த (மனிதனுக்கு) பிடறி நரம்பைவிட மிக சமீபமாக இருக்கிறோம்.” (ஸூரது காப்: 16 ) ஆக எமது நம்பிக்கை இருக்கிறது.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்