அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிலிருந்து – 01

بسم الله الرحمن الرحيم

01. நாங்கள் அல்லாஹ்வையும் அவனின் மலக்குகளையும் அவனின் வேதங்களையும் அவனின் தூதர்களையும் மறுமை நாளையும் அவன் ஏற்படுத்திய விதியின் நல்லதையும் தீயதையும் விசுவாசம் கொள்கிறோம்.

02. நாங்கள் அனைத்து விடயங்களையும் செயல்களையும் படைப்பவனும் ஆட்சி செய்பவனும் அடக்கி ஆள்பவனும் அல்லாஹ் மாத்திரம் தான் என்று (குறைஷிக் காபிர்கள் ஏற்றுக்கொண்ட) ருபூபிய்யத்தை ஈமான் கொள்கிறோம்.

03. நாங்கள் (குறைஷிக் காபிர்கள் மறுத்த தவ்ஹீதுல் உலூஹியாவான) வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதை ஈமான் கொள்கிறோம். அவன் தவிர்ந்த மற்றைய வணங்கப்படுபவைகள் பிழையானவை மறுக்கப்பட வேண்டியவை என்ற தவ்ஹீதுல்  உலூஹிய்யாவை  நம்புவோம்.

04. ஸலபிகளான நாங்கள் அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன என்றும் உயர்ந்த பூரணமான பண்புகள் இருக்கின்றன என்றும் தவ்ஹீதின் மூன்றாவது வகையான அஸ்மாஉ வஸ்ஸிபாத்தை ஈமான் கொள்கிறோம்.

05. அல்லாஹுத்ஆலா பரிபாலிக்கும் விடயத்திலும் வணங்கப்படும் விடயத்திலும் அவனுக்குரிய அழகான பெயர், பண்பு விடயத்திலும் அவன் தனித்தவன் அவனுக்கு நிகராக, இணையாக அவனைப் போன்று  யாரும் எதுவும் கிடையாது என்று நாங்கள் நம்புவோம்.

இவைகளுக்கு  ஆதாரம் ஸூரா மரியமின் 65ஆம் வசனமாகும். இவ்வசனத்தில் "வானங்கள், பூமி, அவ்விரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றின் "றப்" - படைத்தவன், பரிபாலிப்பவன் -  அவன் தான்  என்று கூறுகின்றான். இதன் மூலம் ருபூபிய்யத்தை உறுதிப்படுத்துகிறான்.

மேலும், "அவனை வணங்கி அவ்வணக்கத்தில் பொறுமையாக இருப்பிராக" என்ற வசனம் மூலம் உலூஹிய்யத்தை உறுதிப்படுத்துகிறான்.

"அவனுக்கு நிகரான எதையும் நீர் அறிவீரா” என்ற வசனம் மூலம்  அஸ்மாஉ வஸ்ஸிபாத்தை உறுதிப்படுத்துகின்றான்.

06. நாங்கள் குர்ஆனிய வசனங்களில் மிக மகத்தான வசனமாகிய ஆயதுல் குர்ஷியில் உள்ளடங்கியுள்ள விடயங்களை விசுவாசம் கொள்கிறோம்.

அவ்வசனத்தின் பொருளாவது: "அல்லாஹ் அவனைத் தவிர வணங்கப்படுபவன் வேறுயாரும் இல்லை. அவன் என்றும்  உயிருள்ளவன், .நிலைத்திருப்பவன். அவனை சிறு தூக்கமோ  பெருந்தூக்கமோ ஆட்கொள்ளாது அவனுக்கே வானங்கள், பூமியில் உள்ளவை சொந்தமானது. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்பவன் யார் தான் இருக்கிறார்? அவன் அவர்களுக்கு முன் இருப்பதையும் அவர்களுக்கு பின் இருப்பதையும் நன்கறிவான். அவன் நாடியவற்றைத்தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவனின் (பாதத்தை வைத்திருக்கும் அந்த) குர்ஷி வானங்கள், பூமியை வியாபித்திருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமில்லை. அவன் மிக உயர்ந்தவன். மகத்துவம் மிக்கவன்." (ஸூரதுல் பகரா: 255)

07. நாங்கள் அவன் தான் அல்லாஹ், உண்மையில் வணங்கப்படுபவன் அவனைத்தவிர வேறு யாரும் இல்லை, அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிபவன், அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்று ஈமான் கொள்கிறோம். (ஸூரதுல் ஹஷ்ர் 59:22 )

08. நாங்கள் அவன்தான் அல்லாஹ், உண்மையாக வணங்கப்படுபவன் அவனைத்தவிர வேறுயாரும் இல்லை, (அவன் மாத்திரம் தான் தனிமையாக) ஆட்சி செய்பவனும், பரிசுத்தமானவனும், சாந்தியானவனும், பாதுகாப்பவனும், கண்காணிப்பவனும், அனைத்தையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெறுமைக்குரியவனும் ஆவான் (என்றும்), அவர்கள் - காபிர்கள் - இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன், அவன் தான் படைப்பவனும், இல்லாமையிலிருந்து உருவாக்குபவனும், உருவமைப்பவனுமாவான். அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்கள், பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாவான் என்றும் ஈமான் கொள்கிறோம். (ஸூரதுல் ஹஷ்ர் 59:23,24 ஆம் வசனங்கள்)

09. வெற்றி பெற்ற கூட்டத்தினர் வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குச் செந்தமானது என்றும் அவன் நாடியதைப் படைப்பான், அவன் நாடியவனுக்கு பெண் குழந்தையை வழங்குவான், அவன் நாடியவனுக்கு ஆண் குழந்தையை வழங்குவான், அல்லது ஆண் பெண் இருவரையும் சோடியாக  கொடுப்பான், அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்குவான், அவன் நன்கறிந்தவனும் ஒவ்வோரு பொருளின் மீதும் சக்தி பெற்றவனுமாவான் என்றும் ஈமான் கொண்டிருக்கின்றனர். (ஸூரதுஷ் ஷூரா 42:49,50ம் வசனங்கள்)

10. நாங்கள் அல்லாஹ்வை அவனின் அனைத்து செயல்களிலும்  ஒருமைப்படுத்துகிறோம். அதாவது அல்லாஹ்வும் பார்க்கிறான் அவனின்  படைப்புக்களும் பார்க்கின்றன இப்படி இருக்கும் போது இதில் எப்படி அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது என்றால், அல்லாஹ்வின் பார்வை குறைகளை விட்டும் நீங்கியது என்றும் படைப்புக்களின் பார்வையில் பற்பல குறைகள் இருக்கின்றன என்றும் அதேபோல் அஹ்லுஸ்ஸுன்னாக்களாகிய நாங்கள் அல்லாஹ்வின் பார்வையை படைப்பினங்களில் எந்தப்படைப்புக்கும் ஒப்பிடாமல் அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு ஏற்ற விதத்தில் அவன் பார்க்கிறான் என்றும் அவனின் பார்வையை விட்டும் எதுவும் மறைந்து விடமாட்டாது என்றும் இது போன்று ஏனைய அல்லாஹ்வின் செயலிலும் பண்புகளிலும் மற்றும் அவனின் பெயர்களிலும் அல்லாஹ்வை  ஒருமைப்படுத்துகிறோம்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- தொகுப்பு: அஹ்ஸன் இப்னு அபீபக்கர்