அழைப்புப் பணியை மேற்கொள்ள உலமாக்களின் நற்சான்று – தஸ்கியா – அவசியமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: அல்லாஹ்வின் பாதையில் அழைப்புப் பணியை மேற்கொள்ள நாடுபவர் உலமாக்களிடத்தில் அவசியம் தஸ்கியா பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளதா?

பதில்: மக்களிடத்தில் (மார்க்க) விளக்கங்களை முன்வைப்பதற்கு அவர் அறிவுள்ளவராக இருந்தால் மாத்திரம் போதுமானதாகும். அவருக்குத் தஸ்கியா அவசியமன்று. என்றாலும், ஒருவருடைய விடயம் குறித்து அறிமுகமில்லாத நிலை காணப்படுமிடத்து, மக்கள் அவர் விடயத்தில் அறிமுகமானோரின் சான்றை எதிர்பார்க்கக் கூடிய நிலை காணப்பட்டால், அவர் உண்மையில் தகுதியானவர்தான் என்பதை நீரூபிக்கும் முகமாக தஸ்கியாவை எதிர்பார்ப்பதில் தவறில்லை.

மாற்றமாக, எவரிடத்தில் அழைப்புப் பணியை மேற்கொள்ளத் தகுதியும் அந்தஸ்தும் காணப்படுகின்றனவோ அத்தோடு, எச்சரிக்கப்பட்ட அம்சங்கள் அவரிடத்தில் காணப்படாமல் இருக்கின்றனவோ அப்போது அவருக்குத் தஸ்கியா இன்றித் தனது பணியை மேற்கொள்ள முடியும். எனவே, எவரிடத்தில் அறிவில் நின்றும் ஒரு சிறு பகுதி காணப்பட்டாலும் அவர் அதனை முன்வைப்பார். ஏனெனில், நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: 'என்னைத் தொட்டும் ஒரு (சிறிய) வசனத்தை நீங்கள் அடைந்து கொண்டாலும் அதனை எத்திவையுங்கள்!”

கேள்வி: ஒருவர் எந்த ஆலிமிடத்திலும் கல்வி பயிலாது இருக்கும் நிலையில் அவர் அழைப்புப் பணிக்குத் தகுதியானவரா என்பதை தஸ்கியா இன்றி எப்படி அறிந்து கொள்ள முடியும்?

பதில்: அவர் அறிமுகமில்லாதவராக இருந்தால் அவருடைய விடயத்தில் சற்றுத் தாமதிக்க வேண்டும். மாற்றமாக, அவர் பிரயோசனம் அளிக்கக் கூடியவராகவும் தொடர்ந்தேர்ச்சியாக மக்களுக்குப் போதனை செய்யக் கூடியவராகவும் மேற்படிப்புக்களை நிறைவு செய்தவராகவும் மற்றும் பல தகுதிகளைப் பெற்றவராகவும் இருக்கும் போது, அவரிடத்தில் ஒரு பீடத்தில் கற்ற சான்றிதழ் காணப்படாவிடினும் அழைப்புப் பணியை மேற்கொள்ள முடியும். அல்லது, அவர் ஓர் ஆலிமிடத்தில் நீண்ட காலம் தரித்திருந்து அவரிடத்தில் ஒரு பிரயோசனத்தை மாத்திரம் பெற்றிருந்தாலும் அவர் அதனை மாற்றாருக்கு எத்திவைப்பார்.

வழங்கியவர்: அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் ஹபிழஹுல்லாஹ்

குறிப்பு: இக்கேள்வி பதில் நிகழ்ச்சி ஷேய்க் அவர்களின் இப்னுமாஜா எனும் கிரந்தத்திற்கான விளக்கவுரை வகுப்பின் போது இடம்பெற்றது. (ஒலிப்பதிவு நாடா இல: 248)

தமிழில்: அபூஹுனைப்