அழைப்புப் பணியைப் பாதிக்கும் ரவுடித்தனம்!

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா அல்குர்அனில் கூறுகின்றான்: “நிச்சயமாக நாமே இந்த திக்ரை - குர்ஆனை - இறக்கி வைத்தோம். நாமே அதைப் பாதுகாப்போம்.” (அல்ஹிஜ்ர்: 09)

குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாக இவ்வசனத்தில் வாக்களித்திருக்கின்றான். குர்ஆனையும் சுன்னாவையும் சுமந்த ஆலிம்களைக் கொண்டே அல்லாஹ் இம்மார்க்கத்தையும் அதன் மூலாதாரங்களாகிய குர்ஆனையும் சுன்னாவையும் பாதுகாப்பான். ஆகவே, ஆலிம்கள் அல்லாஹ்வுடைய மிகப் பெரிய ஒரு பொறுப்பைச் சுமந்திருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும், அவர்கள் மேற்கொள்கின்ற பணி நபிமார்கள் மேற்கொண்ட பணியாகும் என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

குர்ஆனையும் சுன்னாவையும் சுமந்தவராக ஓர் ஆலிம் அழைப்புப் பணியை மேற்கொள்ள முற்படுவாரானால் அவர் அவ்வழைப்புப் பணியை மேற்கொள்வதற்குக் கையாள வேண்டிய நற்பண்புகளையும் அழைப்புப் பணியின் முறைகளையும் நன்கறிந்தவராக இருக்க வேண்டும். நபிமார்கள் மற்றும் ஸஹாபாக்கள் ஆகியோர் அழைப்புப் பணியில் எவ்வாறான நற்பண்புகளை கையாண்டார்கள்? மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? என்பதை அறிந்து கொள்வது அழைப்புப் பணியில் ஈடுபடக்கூடியவர்கள் அவசியம் தெரிந்தாக வேண்டும்.

அழைப்புப் பணியை எவ்வாறு மேற்கொள்வது? மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது? அவர்களுக்கு மார்க்கத்தை எவ்வாறு எத்திவைப்பது? என்பது பற்றிய அறிவு இல்லாததன் காரணமாக இன்று அழைப்பாளர்களுக்கும் பொது மக்களுக்குமிடையே பல்வேறுபட்ட சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன. பொது மக்களிடமிருந்து எழுகின்ற கேள்விகளுக்கு விடையளிக்கத் திணறும் போது ஆலிம்கள் ரவுடித்தனத்தை வெளிக்காட்டக்கூடிய காட்சிகள் எம் நாட்டில் அன்மையில் பதிவாகியுள்ளன. மேலும், தங்களது சொந்த இடங்களில் சுவரொட்டிகள் காணப்படுமாயின் அதனை அகற்றுவதற்குப் பொது மக்கள் முயற்சிக்கும் நேரங்களிலெல்லாம் அந்த சுவரொட்டியை ஒட்டிய சகோதரர்களும் அவர்களுடைய ஆலிம்களும் ரவுடித்தனத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு காட்சியையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து காணப்படுமாயின் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் கொள்பவர்கள் குறைந்து செல்வார்கள். மட்டுமின்றி, இஸ்லாத்தின் செல்வாக்கையும் இது அசிங்கமாக்கிவிடும். ஓர் ஆலிம் தனக்கு விடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் தெரியாது என்று வெளிரங்கமாகவே கூறுவதற்கு அவர் தயங்கக்கூடாது. அல்லது நான் பார்த்துவிட்டுக் கூறுகின்றேன் எனக் கூறுவது அவருக்கு மிகப் பொருத்தமானதாகும்.

இவ்வாறான வழிமுறைகளைக் கையாளாமல் அவர்களுடன் சண்டைக்குச் செல்வது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது இஸ்லாமிய அழைப்பாளர்கள் ரவுடித்தனமுடையவர்கள் என்பதையே பிறருக்கு எடுத்துக்காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

உண்மையில் தமக்கு சரியான அறிவு காணப்படாத காரணத்தினாலேயே சில ஆலிம்கள் ரவுடித்தனங்களை மேற்கொள்கின்றார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிர்த்தரப்புவாதிகளுக்கு அறிவைக் கொண்டு நாம் பதிலளிக்க வேண்டுமே தவிர பதில் தெரியாத போது ரவுடித்தனத்தை மேற்கொள்வது எமக்குப் போதிய அறிவு இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. ஏனென்றால், நாம் நன்றாகச் சிக்கிவிட்டோம், இனிமேல் இவர்களிடமிருந்து தப்புவதாயின் ரவுடித்தனத்தையே நாம் மேற்கொள்ள வேண்டும் என்றே அறிவற்ற அழைப்பாளர்கள் சிந்திக்கின்றார்கள். ஆகவே, இவ்வாறான மோசமான பண்புகள் அழைப்பாளர்களிடம் ஒருபோதும் காணப்படக்கூடாது.

அல்லாஹ்வின் தீனைச் சுமந்த நபிமார்கள் ஸஹாபாக்கள் ஆகியோர் இவ்வழைப்புப் பணி விடயத்தில் நமக்கு முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இது விடயத்தில் எம்மனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை அவருடைய வரலாற்றை அல்குர்ஆனில் படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். பனூ இஸ்ரவேலர்களால் அவர்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். அவசியமற்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை நோவினைப்படுத்தினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அனைவரையும் யுத்தம் புரிய அழைப்பு விடுத்தபோது மறுத்தார்கள். இன்னும் பல இன்னல்களையும் அவர்கள் அழைப்புப் பணியில் சந்தித்தார்கள். விரிவாக அறிந்து கொள்ள விரும்புவர்கள் சூரா அல்பகறா, சூரா அல்மாஇதா, சூரா தாஹா ஆகியவற்றை வாசித்துப் பார்க்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரக்கம் காட்டுவானாக! அவர் இதைவிட அதிகமாக நோவினைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் காரணமாக அவர் பொறுமையாக இருந்தார்.” (புஹாரி)

இவ்வாறான இன்னல்களை அவர்கள் தாங்கியிருந்தும் ரவுடித்தனத்தை மேற்கொள்ளக் கூடியவர்களாகவோ, மனிதர்களுடன் வாக்குவாதப்படக் கூடியவர்களாகவோ காணப்படவில்லை.

நபி இப்ஹாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டார்கள். தன் தந்தையால் ஒதுக்கப்பட்டார்கள். பல துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். ஆனால், அவர்களோ ரவுடித்தனத்தை விட்டும் ஒதுங்கியே இருந்தார்கள்.

எமது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூட பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அவருடைய வரலாற்றைப் படித்தவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். தாஇப் நகரில் கற்களால் எரியப்பட்டார்கள். மக்காவில் தொழும்போது பல நோவினைகளைத் தாங்கிக் கொண்டார்கள். அவர்களோ அவரது சமுதாயத்துடன் இரக்கத் தன்மையுடனே நடந்து கொண்டார்கள்.

இவ்வாறு பல நபிமார்களின் வரலாற்றுச் சம்பவங்கள் எங்களுக்கு அழைப்புப் பணியை எவ்வாறு நடாத்திச் செல்ல வேண்டும் என்பதற்கு முன்மாதிரிகளாக அமைந்திருக்கின்றன. எமது அழைப்பாளர்களுக்கு நேரிடாத துன்பங்களை அவர்கள் சந்தித்தும் அதற்காக வேண்டி அவர்கள் ரவுடித்தனங்களை மேற்கொள்ளவில்லை.

அழைப்புப் பணியை மேற்கொள்கின்ற வேளையில் மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹுத்தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்வருமாறு கற்றுக்கொடுத்துள்ளான். “(நபியே!) நீங்கள் (மனிதர்களை) ஞானத்துடனும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி அவர்களுடன் (தர்க்கம் புரிய நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்தும் தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன் தான் நன்கறிவான். நேரான வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் அவன் தான் அறிவான்.” (அந்நஹ்ல்: 25)

ஓர் அழைப்பாளர் மென்மையான முறையில் நளினத்துடன் அழைப்பு விடுப்பாரெனின் அவருடைய அழைப்பை பலரும் ஏற்றுக்கொள்வார்கள். அதனைப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் உணர்த்துகின்றது. அல்லாஹுத்தஆலா மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் பின்வருமாறு கூறுகின்றான்: “நீங்கள் இருவரும் அவனுக்கு - பிர்அவ்னுக்கு - மென்மையான வார்த்தையை கூறுங்கள்! அதன் காரணமாக அவன் நினைவு கூறலாம் அல்லது அஞ்சிக் கொள்ளலாம்.” (தாஹா: 44)

பிர்அவ்னிடம் கூட அழகான முறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் அவ்விருவருக்கும் உபதேசித்திருக்கின்றான். அழைப்புப் பணியில் மென்மையான போக்கை மேற்கொள்வதன் அவசியத்தையும் பயனையும் இவ்வசனம் எங்களுக்கு அழகாக எடுத்துரைக்கின்றது.

எவர்களெல்லாம் தங்களது அழைப்புப் பிரச்சாரத்தின்போது கடும்போக்கினையும் கடுமையான வார்த்தைகளையும் உபயோகிக்கின்றார்களோ நிச்சயமாக அவர்களைவிட்டும் மனிதர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள். இன்னும், அவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் வழங்கமாட்டார்கள். இதனைப் பின்வரும் வசனம் எங்களுக்கு உணர்த்துகின்றது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் விரண்டோடியிருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக.!” (ஆலுஇம்ரான்: 159)

ஒவ்வோர் அழைப்பாளனும் இவ்வசனத்தை சிந்தித்து நல்லுணர்வு பெறுவது கடமையாகும். கடும்போக்கை கையாளுவது மனிதர்களை விரண்டோடச் செய்யும் என்பதை அழகாக இவ்வசனம் குறித்துக் காட்டியுள்ளது. மேலும், மனிதர்களால் ஏற்படக்கூடிய துன்பங்களை சகித்துக்கொண்டு அவர்களை மன்னிக்குமாறும் அல்லாஹ் கட்டளையிட்டிருக்கின்றான். சில அழைப்பாளர்கள் இவ்வசனத்திற்கு முரணாக நடந்துகொள்வது கவலையை தோற்றுவிக்கின்றது.

ஆகவே, இஸ்லாமிய அழைப்பாளர்களே! உங்களுக்கு முன்னால் நபிமார்களின் வழிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றை உங்கள் அழைப்புப் பணியின் வழிமுறையாக எடுத்துக் கொள்ளுங்கள்! பொதுமக்களால் ஏற்படக்கூடிய துன்பங்களுக்காகவும் அதிகமான கேள்விகளுக்காகவும் ரவுடித்தனங்களை மேற்கொள்ளாதீர்கள்! இது உண்மையான அழைப்பாளர்களிடம் இருக்கக்கூடாத மோசமான பண்பாகும்.

உங்களுக்கு பதிலளிக்க முடியாவிட்டால் அவர்களுடன் நிதானமாகவும் “தெரியாது” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லது, அதுபற்றித் தெரிந்த இன்னொருவரிடம் அம்மனிதரை சாட்டிவிடுங்கள்! உங்களுடைய அசத்தியங்கள் வெளிப்படும்போது அதை மறைக்க ரவுடித்தனங்களை மேற்கொள்ளாதீர்கள்! எச்சிக்கலையும் மார்க்க அறிவின் மூலம் தீர்க்க முயற்சியெடுங்கள்!

உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதில் ஏனையவர்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாகத் திகழுங்கள்! உங்கள் பெயரோ உங்கள் இயக்கத்தின் பெயரோ இணையதளங்களிலும் உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்ற தீய எண்ணத்தை விட்டுவிடுங்கள்! என் மூலம் பலர் பயனடைந்து அதன் நன்மைகளை நான் எனது கப்ரிலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயற்படுங்கள்!

இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் கொள்கைகள் பரவும்போது அதைப் பார்த்து மௌனிக்காது உங்களால் முடியுமான எதிர்ப்பபை பேச்சுக்களாலும் மார்க்கம் அனுமதித்த செயற்பாடுகளினாலும் வெளிப்படுத்துங்கள்! அசத்தியத்தை ஒழிப்பதற்காக உங்களால் முடியுமானவற்றில் ஈடுபடுங்கள்! அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள்பாலிப்பானாக! அல்ஹம்துலில்லாஹ்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்