அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 7

விதி பற்றிய விளக்கம்

وَالإيْمَانُ بِالقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ

விளக்கம்:

இது ஈமானின் கடமைகளில் இறுதிப்பகுதியைத் தெளிவுபடுத்தும் வாசகமாகும். அதன்படி விதியைப்பற்றிய நம்பிக்கை, ஈமான் கொள்ள வேண்டியவற்றில் இறுதியானதும் மிக முக்கியமானதுமாக இருக்கின்றது. விதி எனும் பதத்திற்கு ‘கத்ர்’ என்று அறபு மொழியில் வழங்கப்படும். இப்பதத்தின் மூலம் அல்லாஹுத்தஆலாவினால் அனைத்து வஸ்துக்கள் மீதும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு நாடப்படுகின்றது.

அல்லாஹுத்தஆலா அந்நிர்ணயத்தை வானங்கள் மற்றும் பூமையைப் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக எழுதியுள்ளான். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமறையில் அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:

‘நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) ஏட்டில் உள்ளது. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.’ (அல் ஹஜ்: 70)

நபியவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக படைப்பினங்களுக்கான விதியை எழுதிவிட்டான்.’ (முஸ்லிம்: 2653)

(خَيْرِهِ وَشَرِّهِ)

இது கத்ரினுடைய பண்புகளைப் பற்றிப் பேசும் வாசகமாகும். அதனடிப்படையில் கத்ரானது, நல்லதைக் கொண்டும் தீயதைக் கொண்டும் வர்ணிக்கப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் விளக்கங்கள் சற்று வேறுபடுகின்றன. கத்ரானது நல்லதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கம் பட்டவர்த்தனமானது. ஆயினும், அது தீயதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

அல்லாஹுத்தஆலா நிர்ணயம் செய்த கத்ரின் தீய பண்பானது, அல்லாஹ்வின் நாட்டப்படி இடம்பெற்ற செயலில் உள்ள தீய தன்மையை பற்றிக் குறிப்பிடுகிறது. மாற்றமாக, அவனது செயலாகவுள்ள கத்ரின் தீங்கைப் பற்றிக் குறிப்பிடமாட்டாது. ஏனெனில், அல்லாஹ்வின் செயலில் தீயது கிடையாது. அவனது அனைத்துக் காரியங்களும் சிறப்புமிக்கதாகவும், ஞானமுடையாதாகவும் இருக்கின்றன. எனவே, இங்கு தீயதானது, இடம்பெற்ற செயலின் தன்மையைக் கருத்திற் கொண்டேயன்றி அவனின் செயலைக் கருத்திற் கொண்டல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வடிப்படையைக் கருத்திற் கொண்டு தான் நபியவர்கள்: ‘இறைவா! தீங்கு உனக்குறியதன்று’ என்று தனது பிரார்த்தனையில் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 771) மேலும், இவ்விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள பின்வரும் விளக்கத்தைக் கூர்ந்து கவனியுங்கள்…..

நாம் அல்லாஹுத்தஆலாவின் படைப்புக்களில் மற்றும் நிர்ணயித்த அம்சங்களில் மனிதனுக்குத் தீங்கிழைக்கக்கூடிய பலவற்றை அவதானித்து வருகின்றோம். அந்தவிதத்தில் அவனது படைப்புக்களில் பாம்புகள், தேள்கள், வேட்டை மிருகங்கள், நோய்கள், ஏள்மை, வறுமை போன்ற பல அம்சங்களை இனங்காட்டலாம். இவை அனைத்தும் மனிதனுக்குக்கு உகந்ததாக அமையாததினால் தீயதாகக் கருதப்படுகின்றன. அதே போன்று பாவமான காரியங்கள், இறை நிராகரிப்பை எற்படுத்தக் கூடியவைகள், கொலை, கொள்ளை போன்றனவும் மேற்கூறப்பட்ட அடிப்படையைச் சாரும். எனவே, இவையனைத்தும் மனிதனுக்குத் தீயதாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன. ஏனெனில், அல்லாஹுத்தஆலா இவற்றை மேலான ஞானத்தைக் கொண்டே நிர்ணயித்துள்ளான். அதனைப் புரியக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள், புரியாதவர்கள் மடமையில் சிக்கித்தவிர்ப்பார்கள்.

விதி பற்றிய நம்பிக்கை

மேலும், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சம் சில சமயங்களில் தன்னிலே தீங்குடையதாக இருந்தாலும், வேறு ஒர் கோணத்தில் நோக்குகையில் அது நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும். இவ்வடிப்படையை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் ஒப்புவைக்கின்றது.

‘மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டுவிட்டன, அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதித்தான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பிவிடலாம்’. (அர்ரூம்: 41)

எனவே, இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பிரகாரம் கரையிலும் கடலிலும் வெளிப்பட்டிருக்கும் அழிவு, மற்றும் குழப்பம் ஆகியன ஒரு விதத்தில் தீங்கானவையாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சத்தில் காணப்படும் தீங்கானது, அதனுடன் இணைக்கப்பட்ட ஓன்றாக அன்றி எதார்த்தமான தீங்காக இருக்காது என்ற முடிவுக்கு வரலாம். இதற்கான சில எடுத்துக்காட்டுகளாவன,

திருமணம் செய்யாத ஒருவர் விபச்சாரம் செய்யும்போது அவருக்கு வழங்கப்படும் தண்டனையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் அத்தண்டனையானது குறித்த அந்நபருக்கு தீங்குடையாதாக இருந்தாலும் அவருக்கும், அத்தண்டனையை கண்ணுறக்கூடியவர்களுக்கும் அதில் பல நலவுகள் உள்ளன. அந்நலவுகளாவன,

1. விபச்சாரம் செய்தவனுக்கு குறித்த அத்தண்டனை குற்றப்பரிகாரமாக அமைகின்றது.

2. விபச்சாரத்திற்கு மறுமையில் வழங்கப்படவிருக்கும் தண்டனையைவிட உலகில் வழங்கப்படும் தண்டனை மிக இலகுவானது.

3. குறித்த அத்தண்டனையைக் கண்ணுறக்கூடியவர்களுக்கு சிறந்த படிப்பினை கிடைக்கின்றது. அதனால் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் தூரமாவதற்கு வழியமைக்கின்றது.

4. விபச்சாரம் செய்தவர் கூட இனிவரும் காலங்களில் தன்னால் இவ்வீனச் செயல் நடைபெறாதவிதத்தில் தற்காத்துக் கொள்வார்.

மேலும், எமக்கேற்படக்கூடிய நோய்களை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். உண்மையில் அந்நோய்கள் எமக்கு தீங்களிக்கக்கூடியனவாக இருந்தாலும், அவை தம்மிலே பல நலவுகளை கொண்டனவாகத் திகழுகின்றன. அந்நலவுகளாவன,

1. எமது சிறுபாவங்களுக்கான குற்றப்பரிகாரமாக அமையும்.

2. அல்லாஹ் எமக்களித்த ‘ஆரோக்கியம்’ என்ற அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொள்ளலாம்.

3. எமது உடம்பில் காணப்படுகின்ற சில வகையான கிருமிகளை அழிப்பதற்கு அந்நோய்கள் உறுதுணையாக இருக்கின்றன. இக்கருத்தை மருத்துவர்களின் ஆய்வுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

விதிபற்றிய மேலும் பல விளக்கங்கள் இருக்கின்றன. இமாமவர்கள் அடுத்து கூற இருக்கின்ற விடயம் விதியைப்பற்றியதாகவுள்ளதால் அதனைத் தெளிவுபடுத்தும் போது மேலதிக விளக்கங்களைக் காண்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM