அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 14

وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن . حيث يقول :  قل هو الله أحد , الله الصمد , لم يلد ولم يولد , ولم يكن له كفوا أحد

விளக்கம்:

அல்லாஹ்வின் பெயர்களையும் அவனது பண்புகளையும் அல்குர்ஆனில் இருந்து உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள்

1. அல்லாஹ் தொடர்பான வர்ணனையில் உறுதிப்படுத்துவதற்கும் மறுப்பதற்குமிடையிலான கூட்டுச் சேர்வு

இதற்கு முன்னர் நாம் பார்த்த விளக்கத்தில் இருந்து அல்லாஹ்வின் பெயர்களும் அவனது பண்புகளும் உறுதிப்படுத்தல் மற்றும் மறுத்தல் ஆகியவற்றிக்கிடையில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அதனை அடுத்து இக்கூற்றை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை இமாமவர்கள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து முன்வைத்துள்ளார்கள். அதன் முதற்கட்டமான அல்குர்ஆனில் இருந்து சில ஆதாரங்களை முன்வைத்து தனது விளக்கத்தைத் துவங்கியுள்ளார்கள். வாசகர்களின் பூரண தெளிவை நாடி அவ்விளக்கத்தை ஒவ்வொரு தொகுதியாகப் பிரித்து உபதலைப்புக்களில் இலகுபடுத்தியுள்ளோம்.

இமாமவர்கள் தனது விளக்கத்தின் முதல் கட்டத்தை அல் இஹ்லாஸ் அத்தியாயத்தைக் கொண்டு ஆரம்பித்துள்ளார்கள். ஏனெனில், இவ்வத்தியாயமானது:

அல்லாஹ்வின் பண்புகள் விடத்தில் பூரண தெளிவை வழங்கும்.

அதனைப் பாராயணம் செய்யக்கூடியவரை இணைவைப்பைவிட்டும் பாதுகாக்கும்.

மேலும், இமாமவர்கள் அல் இஹ்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகையில், இவ்வத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்கிறார்கள். அதன் விளக்கமாவது, மொத்தமாக அல்குர்ஆன் தன்னகத்தே பொதிந்துள்ள கருத்துக்களை மூன்று பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.

1. ஏகத்துவம்
2. வரலாறு
3. சட்டதிட்டங்கள்

இவ்வத்தியாயத்தைப் பொருத்தளவில் இதில் அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் ஏகத்துவம் என்ற பகுதியை இது நிரப்பக்கூடியதாக அமைந்துள்ளது எனலாம்.

மேலும், அல் இஹ்லாஸ் அத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்ற செய்தியை நபியவர்களே தன் நாவால் நவின்றுள்ளதாக அபூ ஸஈத் அல்குர்திரி (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் இது குறித்த செய்திகள் தொடர்பாகக் கூறுகையில்: ‘அல்இஹ்லாஸ் அத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்பதைக் குறிக்கும் நபிமொழிகள் ஹதீஸ் கலையில் அல்முதவாதிர் எனும் பொய்ப்பிக்க முடியாத தரத்தை பெற்றுள்ளன’ என்கிறார். அல் இஹ்லாஸ் அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக உற்று நோக்கினால் அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் பயன்தரும் பல அம்சங்கள் உள்ளடங்கியிருப்பதை அவதானிக்கலாம். அந்தவிதத்தில்…

 

  • قل (கூறுவீராக): என்ற வார்த்தையானது நபியவர்களை விழித்துக் கூறப்பட்டுள்ளது. இது அல்குர்ஆனானது அல்லாஹ்வின் வார்த்தை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உண்மையில் அல்குர்ஆனானது நபியவர்களின் வார்த்தையாகவோ அல்லது வேறு ஒருவரின் வார்த்தையாகவோ இருந்திருந்தால் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா நபியவர்களை விழித்து قل (கூறுவீராக) என்று சொல்லியிருக்கமாட்டான்.
  • الله أحد (அவன் ஒருவன்): இவ்வசனமானது அவன் ஒருவன் அவனுக்கு உதவியாளனோ, அமைச்சரோ, கூட்டாளியோ கிடையாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
  • الله الصمد (அவன் எவ்வித தேவையுமற்றவன்): இவ்வசனமானது படைப்பினங்கள் அனைத்தும் அவன் பால் தேவையுடையனவாக இருக்கின்றன என்பதை தெளிவுற இயம்புகின்றது.
  • لم يلد ولم يولد (அவன் எவரையும் பெறவும் இல்லை, அவன் எவருக்கும் பிறக்கவும் இல்லை): இவ்வசனமானது அல்லாஹ்வுக்கு மகனோ, தந்தையோ இல்லை என்பதைக் சூசகமான விளக்குகின்றது. மேலும், இவ்வசனம் அல்லாஹ்வுக்கு மகன் உண்டு என்று கூறக்கூடிய கிரிஸ்தவர்கள், அரேபிய இணைவைப்பாளர்கள் பேன்றோருக்கு சிறந்த மறுப்பாக அமைந்துள்ளது.
  • ولم يكن له كفوا أحد (மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை): இவ்வசனமானது அவனது அந்தஸ்துக்குப் பாத்திரமாக உலகில் எவரும் இல்லை என்பதைப் பறை சாட்டுகின்றது.

 

எனவே, இவ்வத்தியாயத்தில் அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளடங்குபவை மற்றும் உள்ளடங்காதவை பற்றிய தெளிவு உள்ளது என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள்.

இவற்றைக் கருத்தில் கொண்டு நாமும் அவனது பண்புகளில் உறுதிப்படுத்த வேண்டியதை உறுதிபடுத்தியும் மறுக்க வேண்டியதை மறுத்தும் வாழ்வோமாக!

وما وصف به نفسه في أعظم آية في كتابه حيث يقول : اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
سورة البقرة : 255
ولهذا كان من قرأ هذه الآية في ليلة لم يزل عليه من الله حافظ ولا يقربه شيطان حتى يصبح .

ஆயதுல் குர்ஷியில் அல்லாஹ் பற்றிய வர்ணனை

இதற்கு முன்னர் நாம் பார்த்த தொடரை முதற்கொண்டு அல்லாஹுத்தஆலா பற்றி அல்குர்ஆனில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகளை ஆரம்பித்து வைத்தோம். அதன் வரிசையில் இத்தொடரில் அல்குர்ஆனில் இடம்பெற்றிருக்கக்கூடிய மகத்துவமிக்க ஒரு வசனம் குறித்துப் பேசவுள்ளோம். அதுதான் அல்லாஹுத்தஆலாவின் குர்ஸி பற்றிப் பேசக்கூடிய ஆயதுல் குர்ஷியாகும்.

அவ்வசனமானது மகத்துவமிக்கது என்பதற்குச் சிறந்த சான்றாக பின்வரும் வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

ஒரு முறை நபியவர்கள் உபை இப்னு கஃப் (ரழி) அவர்களை நோக்கி அல்குர்ஆனில் மகத்துவமிக்க ஒரு வசனத்தைக் குறிப்பிடுமாறு வினவினார்கள். அதற்கு அவர், இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என பதிலளித்தார். இப்படி பல விருத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து அவர் ஆயதுல் குர்ஷி என பதிலளித்தார். அதற்கு நபியவர்கள், அபூ முன்திரே உனது அறிவு உனக்கு வாழ்த்தைத் தெரிவிக்கக்கூடியாதாக இருக்கட்டும்! எனக்கூறி போற்றினார்கள். (முஸ்லிம்)

ஆயதுல் குர்ஷியானது முழுமையாக அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை உறுதிப்படுத்தக்கூடியதாகவும், அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளை விட்டும் தூய்மைப்படுத்தக்கூடியதாகவும் இருப்பதினால் இவ்வசனம் இது விடயத்தில் பிரதானமாகக் கணிக்கப்படுகின்றது. அதன் பொருளாவது:

‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன். நிலைத்திருப்பவன்;. சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார் தான் பாரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரம மன்று அவன் மிக உயர்ந்தவனும் மிக்க மகத்துவமானவனுமாவான்.’ (அல்பகரா: 255)

இவ்வசனத்தில் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் எவை அவனுக்குத் தகுந்தன இன்னும் எவை அவனுக்குத் தகாதன என்ற தெளிவு இடம்பெற்றுள்ளது. அந்தவிதத்தில் அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்