அல்லாஹ்வின் பெயர் கூறப்படுவதை விட்டும் பள்ளிவாசல்களைத் தடுப்பவனை விட மிக அநியாயக்காரன் யார்?

இலங்கை நாட்டில் பௌத்த மதத்தைச் சார்ந்த ஒரு சில தீவிரவாத அமைப்புக்களால் அந்நாட்டு முஸ்லிம்களுக்குப் பல தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதை பத்திரிகைகளினூடாகவும், வானொலிகளினூடாகவும் நேரடி வார்த்தைகளாகவும் நாம் கேள்விப்படுகிறோம். தற்பொழுது அந்தத் தீவிரவாத அமைப்புக்கள் அல்லாஹ்வுடைய நாமம் ஓங்கப்படும் பள்ளிவாசல்களையும் தாக்கியுள்ளார்கள்.

தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரியா தாக்கப்பட்டமை, அப்பள்ளிவாசல் இடமாற்றம் செய்யப்படுவதற்கு ஓரு சில சிங்கள அமைச்சர்கள் முயற்சி செய்கின்றமை, 2013.08.10 சனிக்கிழமை கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டு அதனுடைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டமை இன்று நாடு பூராகவும் முஸ்லிம்களின் கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆகவே, இதனை மையமாக வைத்து இலங்கை முஸ்லிம் சகோதரர்களுடன் ஒரு சில விடயங்களை மார்க்கரீதியாகப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு மூடப்படுகின்றமை, அவைகளிலே தொழுகைக்குத் தடை ஏற்படுத்தப்படுகின்றமை இன்று நேற்று தோன்றிய பிரச்சினை அல்ல என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய வரலாற்றை ஒரு முறை மீட்டிப்பார்க்கும் போது இதற்கு முன்னால் வாழ்ந்த பல முஸ்லிம்கள் இப்பிரச்சினையால் அவதிப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் பின்வரும் வசனத்தின் உண்மையை எம்மால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்று உங்களுக்கு வராமல் நீங்கள் சுவர்க்கம் நுழையலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? அவர்களை வறுமையும் துன்பமும் பீடித்தன. மேலும், அத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டோரும் 'அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்' என்று கூறுமளவுக்கு அவர்கள் ஆட்டவைக்கப்பட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கின்றது. (அல்பகறா: 214)

ஆகவே, இத்தருணத்தில் வரலாற்றில் இருந்து பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட ஒரு சில சம்பவங்களையும் தாக்கியவர்களை அல்லாஹ் எவ்வாறு அழித்தான் என்பதையும் நான் சுருக்கமாகக் கூறுகின்றேன்.

அப்ரஹாவின் அழிவு

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பிற்கு சுமார் 55 நாட்களுக்கு முன்பாக நடந்த சம்பவமே அப்ரஹாவுடைய சம்பவம். இவன் நஜ்ஜாஷி மன்னனால் யமன் நாட்டுக்கு கவர்னராக நியமிக்கப்பட்டான். கஃபதுல்லாஹ்வை விட்டும் ஹாஜிகளைத் தடுப்பதற்காக வேண்டி ஒரு ஆலயத்தைக் கட்டி அதன்பால் அழைப்பு விடுத்தான். இதனை அறிந்த பனூ கினானாவைச் சேர்ந்த ஒருவர் அவனுடைய ஆலயத்தை அசுத்தப்படுத்தினான். இதனால் கோபமடைந்த அப்ரஹா கஃபதுல்லாஹ்வை இடித்தொழிப்பதற்காக படையெடுத்தான். அவனுடைய படையில் சில யானைகளும் இருந்தன. வழியில் இவனை மூன்று பேர் வழிமறித்தும் அம்மூவரையும் அவன் கொலை செய்தான். கஃபதுல்லாஹ்வை அவன் நெருங்கிய போது மஹ்மூத் என்று சொல்லப்படும் அவனுடைய படையைச் சார்ந்த யானை அமர்ந்து கொண்டது. கஃபதுல்லாஹ்வின் பால் அதனைக் கொண்டு செல்ல அப்படை முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை. ஆனால் வேறு திசைகளின் பால் அது முன்நோக்கிச் செல்லக்கூடியதாக இருந்தது.

இவ்வேளையிலே அல்லாஹுத்தஆலா இவர்கள் மீது ஒரு பறவைக்கூட்டத்தை அனுப்பினான். இது பற்றி அல்லாஹுத்தஆலா பின்வருமாறு குறிப்பிடுகின்றான்: யானைப்படையினரை உமது இரட்சகன் எப்படி (அழிய)ச் செய்தான் என்பதை (நபியே) நீர் அறியவில்லையா? அவர்களது சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா? அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பி வைத்தான். சூடேற்றப்பட்ட கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன. அதனால் மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று அவன் அவர்களை ஆக்கிவிட்டான். (சூரதுல்பீல்)

அப்பறவைகள் மும்மூன்று கற்களைச் சுமந்து வந்தன. அதனுடைய அலகில் ஒன்றும் இரு கால்களிலும் மற்ற இரண்டும் காணப்பட்டன. எவர் மீது அக்கல் விழுகிறதோ அவர் அழியக்கூடியவராகவே இருந்தார். அப்ரஹாவுடைய நிலை மிக மோசமானதாக மாறியது. அவனுடைய ஒவ்வொரு உறுப்பும் கழன்று விழுவதற்கு ஆரம்பித்தது. அவனோ ஒரு பறவைக் குஞ்சியைப் போல் காட்சியளித்தான். இறுதியில் அவனுடைய இருதயம் மார்பினூடாக வெளியேறி அவன் துடிதுடித்து இறந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள்.

அபூஜஹ்லுக்கு ஏற்பட்ட இழிவு

இந்த உம்மத்தின் பிர்அவ்ன் என அழைக்கப்படும் அபூஜஹ்லைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறைஷிக்காபிர்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இவனே மிகத் தொந்தரவளிக்கக்கூடியவனாக இருந்தான். அவர்கள் கஃபதுல்லாஹ்வில் தொழும்போது பல இன்னல்களை அவன் அவர்களுக்கு விளைவித்தான்.

ஒரு நாள் இரவு அவன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய கழுத்தை மிதிக்கப்போவதாக சவால் விடுகின்றான். மறுநாள் காலை அவன் சொன்னவாறே செய்ய முயற்சியெடுத்தான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கஃபதுல்லாஹ்வில் சுஜூதில் இருக்கும் போது அவர்களுடைய கழுத்தை மிதிக்க அவன் நெருங்கிய போது உடனடியாகப் பின்வாங்கினான். அவனுடைய தோழர்கள் அவனிடம் இதுபற்றி விசாரிக்கும் போது நெருப்புக் குழியொன்று குறிக்கிட்டதாக அவன் பதிலளிக்கின்றான். 'அவன் நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனை துண்டுதுண்டாக்கியிருப்பார்கள்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

இவனைப்பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: ஓர் அடியார் தொழும் போது (அவரை) தடுப்பவனை நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்தாலும் அல்லது பயபக்தியைக் கொண்டு ஏவினாலும் (அவரைத் தடுப்பவனை) நீர் பார்த்தீரா? அவன் (அவரைப்) பொய்ப்பித்து புறக்கணித்ததையும் நீர் பார்த்தீரா? நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா? அல்ல அவன் (இத்தீய செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக (அவனது) முன்னெற்றி உரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி உரோமத்தை. ஆகவே (தன் உதவிக்காக) தனது சபையோரை அவன் அழைக்கட்டும். (அல்அலக்: 10-17)

உக்பாவின் துணிச்சல்

இவன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பல முறை நோவினை செய்ததை நாம் வரலாற்றிலே பார்க்கலாம். ஒரு முறை தன்னுடைய மேலாடையால் அவர்களுடைய கழுத்தை நெருக்கினான். அப்போது அவர்கள் கஃபதுல்லாஹ்வில் இருந்தார்கள். அவ்வேளையில் அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வந்து இவனுடைய செயலிலிருந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காப்பாற்றினார்கள். அதேபோல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மேலும் ஒரு முறை கஃபதுல்லாஹ்வில் சுஜூதில் இருக்கும் போது இவன் அவர்களுடைய கழுத்தில் ஒட்டகத்தின் குடலைப் போட்டான். இதை இவன் அபூஜஹ்லுடைய ஏவலுக்கிணங்கவே செய்தான். சுஜூதிலிருந்து தலையை உயர்த்த முடியாதவாறு அவர்கள் வேதனைப்பட்டார்கள். இத்தருணத்தில் பாதிமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஓடோடி வந்து அக்குடல்களை எடுத்து வீசினார்கள். பின்பு அவர்கள் பெயர் குறிப்பிட்டு ஏழு பேர்களுக்கு எதிராக துஆச் செய்தார்கள். அவர்களில் இந்த உக்பாவும் அபூஜஹ்லும் உள்ளடங்குவார்கள். இவர்கள் ஏழ்வரும் பத்ரு கிணற்றிலே தூக்கி எறியப்பட்டார்கள்.

இதுவே அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களை அழிக்க நாடுபவர்களின் இறுதி முடிவாகும். இதை நீங்கள் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் கண்டு கொள்ளலாம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அன்றியும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய (சங்கையான) பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாகவே அன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு. மறுமையிலோ அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு. (அல்பகறா: 114)

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களை ஒழிக்க நாடும் பௌத்த தீவிரவாத அமைப்புகளுக்கு இந்த வசனம் எச்சரிக்கையாகவே இருக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்ட இப்பிரச்சினை காரணமாக அதிகமான முஸ்லிம்கள் இதன் தீர்வுக்காக வேண்டி துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் குத்பாப் பிரசங்கங்களிலும் அதிகமான கதீப்மார்கள் துஆக் கேட்குமாறு மக்களைத் தூண்டியிருப்பார்கள். துஆக் கேட்கத்தான் வேண்டும் என்று நாமும் கூறுகின்றோம். ஆனால் மக்கள் இன்னோரு பக்கத்தை மறந்துவிட்டனர். அதாவது எமது நாட்டுப் பள்ளிவாசல்கள் குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் இருக்கின்றனவா? என்பதை அலச மறந்துவிட்டார்கள்.

எம் நாட்டில் அதிகமான பள்ளிவாசல்கள் மார்க்கத்துக்கு முரணாகவே அமைந்துள்ளன. ஆனால் அவைகளை எம் நாட்டு ஆலிம்கள் மறந்துவிட்டு அவைகளுக்காக பிரார்த்திக்க மக்களைத் தூண்டியுள்ளனர். முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை மார்க்க ரீதியாக சீர்திருத்த முற்படாமை கவலைக்குரிய விடயமாகும். அவர்களால் பல அனாச்சாரங்கள் பள்ளிவாசல்களில் அதிகரிப்பதே தவிர குறைவடையவில்லை. ஆகவே துஆப் பிரார்த்தனை செய்கின்றதோடு பள்ளிவாசல்களை குர்ஆன், சுன்னா கூறும் பள்ளிவாசல்களாக அமைப்பது எமது கடமையாகும். ஆகவே சீர்திருத்தப்பட வேண்டிய ஒரு சில அம்சங்களை சுருக்கமாக கூறிவைக்கின்றேன்.

1.அதிகமான பள்ளிவாசல்களில் கப்ரு வணக்கங்கள் நடைபெறுகின்றன. அவை யாவும் தடை செய்யப்பட வேண்டும்.

2.பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்கள் ஊருக்கோ, அமைச்சர்களுக்கோ பயந்து நிர்வாகம் செய்யக்கூடாது. அல்லாஹ்வுக்கு மாத்திரமே பயந்தவர்களாக இருக்க வேண்டும்.

3.பள்ளிவாசல்களுக்கு சேதம் விளைவிக்கப்படும் போது அதை நீக்கி வைக்கும் பொறுப்பு ஜனாதிபதி அல்லது அமைச்சர்களின் கைகளில்தான் உள்ளது எனக்கூறி தவக்குல் - அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல் - என்ற அந்த அம்சத்தை மறந்து விடக்கூடாது.

4.எந்த ஒரு ஆலிமையோ அல்லது ஒரு அமைப்பையோ தக்லீத் என்ற அடிப்படையில் பின்பற்றி குர்ஆன், சுன்னாவை மறைப்பது கூடாது.

5.அந்நிய மதத்தவர்களை பள்ளிவாசல்களில் ஒன்று கூட்டி அவர்களுடைய வேதம் ஓதப்படுவதும், அவர்களுக்காக முஸ்லிம்கள் பிரார்த்தித்ததும் எம் பள்ளிவாசல்களில் நடைபெற்ற அம்சமே. இது இனியும் நடைபெறக்கூடாது.

6.கூட்டு துஆ, பாங்குக்கு முன் ஸலவாத் கூறுதல், ஜும்ஆவுக்கு முன் ஸலவாத் கூறுதல், திறப்பு விழா, மீலாத் விழா உள்ளிட்ட ஏனைய அனைத்து பித்அத்களும் ஒழிக்கப்பட வேண்டும்.

7.குர்ஆன், சுன்னா அறியாத பேஷ் இமாம்களும் லெவ்வைகளும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

by: ASKI IBNU SHAMSIL ABDEEN