அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் – 03

بسم الله الرحمن الرحيم

16. சூழ்ச்சி செய்பவர்களுக்கு அல்லாஹ் சூழ்ச்சி செய்பவன் என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச்சிறந்தவன்.

- ஆலஇம்ரான்: 54

17. அல்லாஹ்வுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன?

விடை: அல்லாஹ்வுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன என்பதை யாருக்கும் வரையறுக்க முடியாது. அதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வே! உனக்குள்ள அனைத்துப் பெயர்களையும் கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன். அவை நீ உனக்கு வைத்த பெயர்களாகவோ அல்லது உமது வேதத்தில் நீ இறக்கிய பெயர்களாகவோ அல்லது உமது படைப்பினங்களில் எவருக்காவது நீ கற்றுக்கொடுத்த பெயர்களாகவோ அல்லது உன்னிடத்தில் மறைவான அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயர்களாகவோ இருக்கலாம்.

-     இப்னு ஹிப்பான், அஹ்மத், ஹாகிம்

உன்னிடத்தில் மறைவான அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயர்கள் என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ்வின் பெயர்களில் எமக்குத் தெரியாத அவனுக்கு மாத்திரமே தெரிந்த பெயர்கள் நிறைய உண்டு என்பது தெளிவாகின்றது. ஆகவே, யாருக்கும் அல்லாஹ்வின் பெயர்களை வரையறுக்க முடியாது.

18. அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

விடை: நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. யார் அவைகளை கணக்கிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்.

-     புஹாரீ, முஸ்லிம்

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ் அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் மாத்திரமே உள்ளன என்பதை அறிவிப்பது போல் இருந்தாலும் உண்மையான விளக்கம் அதுவல்ல. மாறாக, அல்லாஹ்வுடைய பெயர்களில் 99 உள்ளன. அவைகளை கணக்கிடுபவர் சுவனம் நுழைவார் என்பதே அதன் விளக்கமாகும்.

உதாரணமாக ஒருவர் என்னிடத்தில் 1000 ரூபாய் உள்ளது. அதை நான் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வைத்துள்ளேன் எனக்கூறினால் இதன் மூலம் அவரிடம் 1000 ரூபாய் மாத்திரமே உள்ளதாக நாம் விளங்க முடியாது. மாறாக, அவரிடம் மேலதிகமான பணம் உண்டு. அதில் 1000 ரூபாவை அவர் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வைத்துள்ளார் என்பதே அதன் விளக்கமாகும். அதேபோல் அல்லாஹ்வுக்கு நிறைய பெயர்கள் உள்ளன. ஆனால், அவற்றில் 99 ஐக் கணக்கிட்டுக் கொள்பவர் சுவனம் நுழைவார்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் அல்லாஹ்வின் பெயர்கள் நூறையும் தாண்டியுள்ளன. அவைகளை ஆதாரத்துடன் அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி என்ற யெமன் நாட்டைச் சேர்ந்த அறிஞர் தன்னுடைய அல்மபாதிஉல் முபீதா பித்தவ்ஹீதி வல்பிக்ஹி வல்அகீதா என்ற நூலில் ஒன்று சேர்த்துள்ளார்.

19. அல்லாஹ்வின் பெயர்களை எமக்குப் பெயராக வைக்கலாமா?

விடை: அல்லாஹ்வின் பெயர்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

முதல் வகை: அல்லாஹ்வுக்குமாத்திரமே உரித்தான பெயர்கள். உதாரணமாக அஹத் - ஒருவன் -, ஹாலிக் - படைப்பாளன் -, ரஸ்ஸாக் - ரிஸ்க் அளிப்பவன் -, ஜப்பார் - அடக்கியாள்பவன் - ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம். இந்தப் பெயர்களை படைப்பினங்களில் யாருக்கும் வைக்க முடியாது. ஆனால்  عبد - அடிமை - என்ற வார்த்தையை சேர்த்து இப்பெயர்களை வைக்கலாம். உதாரணமாக அப்துர்ரஸ்ஸாக்  - ரிஸ்க் அளிப்பவனின் அடிமை - எனப்பெயர் வைக்கலாம்.

இரண்டாவது வகை: பிறருக்கும் உபயோகிக்க முடியுமான பெயர்கள். உதாரணமாக அஸீஸ் - கண்ணியமானவன் -, ரஹீம் - இரக்கமானவன் -, ஷாகிர் - நன்றி செலுத்துபவன் - ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம்.

20. அல்லாஹ் ஒவ்வொரு நாளும் அடிவானத்திற்கு இறங்குகின்றானா?

விடை: ஆம், அவன் ஒவ்வொரு நாளும் அடிவானத்திற்கு இறங்குகின்றான். அதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எங்கள் இறைவன் ஒவ்வொரு இரவும் அடிவானத்திற்கு இறங்குகின்றான்.

- புஹாரீ, முஸ்லிம்

21. அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடுமா?

விடை: இது விடயத்தில் அறிஞர்களிடம் மூன்று வகையான கருத்துக்கள் உள்ளன.

முதல் கருத்து: அர்ஷ் காலியாகிவிடும்

இரண்டாவது கருத்து: அர்ஷ் காலியாகிவிடாது

மூன்றாவது கருத்து: எக்கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருத்தல்.

இதில் இரண்டாவது கருத்தே மிகவும் சரியானதாகும். ஏனெனில் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அர்ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான்.

- தாஹா: 5

22. உலகில் எப்பொழுதும் ஏதாவது ஓர் இடத்தில் இரவு நேரம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே, அல்லாஹ் எப்பொழுதும் அடிவானத்தில் இருந்தால் அல்லாஹ் அர்ஷில் எவ்வாறு இருக்க முடியும்?

விடை: இந்த வாதத்தை முஃதஸிலாக்கள் முன்வைக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து தற்காலத்தில் தமிழ் நாட்டைச்சேர்ந்த பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களும் இந்த வாதத்தை முன்வைத்து அல்லாஹ் இறங்குகின்றான் என்ற ஹதீஸை மறுக்கின்றார் அல்லது மாற்றுவிளக்கம் கொடுக்கின்றார். இவர்களுடைய வாதம் அல்லாஹ் ஒவ்வொரு இரவும் இறங்கினால் அர்ஷில் யார் இருப்பது? ஆகவே, அல்லாஹ் ஒவ்வொரு இரவும் அடிவானத்திற்கு இறங்குவதில்லை என்பதாகும்.

இவர்களுக்கு குர்ஆன், ஸுன்னாவிலிருந்தும் புத்திரீதியாகவும் நாம் மறுப்பளிக்கின்றோம்.

குர்ஆனிலோ சுன்னாவிலோ ஓர் ஆதாரம் தெளிவாகினால் அதற்கு சரணடைவது கட்டாயமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னிலையில் நீங்கள் முந்தாதீர்கள்.

-     அல்ஹுஜுராத்: 1

மேலும் கூறுகின்றான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்தால் அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கம், எந்தப்பெண்ணுக்கும் உரிமையில்லை.

-     அல்அஹ்ஸாப்: 36

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் சுவனம் நுழைவார்.

-     புஹாரீ

அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கமாட்டான் எனக்கூறுபவர்கள் நிச்சயமாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய விடயத்தில் முரண்பட்டுவிட்டனர். மேலும் புஹாரீயிலே வரக்கூடிய ஹதீஸை மறுத்துவிட்டனர்.

அனைத்து அறிஞர்களும் புஹாரீயிலே பலவீனமான மற்றும் மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்கள் இல்லையெனவும் குர்ஆனுக்குப்பின் மிகச்சிறந்த நூல் புஹாரீயென்பதிலும் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

இது விடயத்தில் பித்அத்வாதிகள் இத்தவறான நிலைப்பாட்டிற்கு வரக்காரணம் அவர்கள் அல்லாஹ்வைப் படைப்பினங்களுக்கு ஒப்பாக்கியுள்ளதாகும். ஏனென்றால், ஒரு மனிதனுக்கு ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும். மாறாக, ஒரு மனிதனுக்குப் பல இடங்களில் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. இந்த முறையையே அல்லாஹ்வுடைய இருப்பிலும் அவர்கள் கையாண்டுள்ளனர். அல்லாஹ் அர்ஷில் இருந்தால் அடிவானத்திலும் அவன் இருக்க முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.

அல்லாஹ் அனைத்து விடயங்களுக்கும் ஆற்றல்பெற்றவன் என்பதை இவர்களை அறியாமலே இவர்கள் மறுக்கின்றனர். - அவன் அனைத்து விடயங்களின் மீதும் ஆற்றல்பெற்றவன். - அல்முல்க்: 1 - என அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

ஆகவே, அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான். ஆனால், அடிவானத்திற்கும் இறங்குகின்றான். அதை அப்படியே நாங்கள் நம்ப வேண்டும். அதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன்.

மனிதர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களைப் பார்க்க முடியாது. ஒரு இடத்தை மாத்திரமே பார்க்க முடியும். அதற்காக வேண்டி அல்லாஹ்வால் உலகில் உள்ள அனைவரையும் பார்க்க முடியாது எனக்கூற எவ்வாறு முடியாதோ அதேபோல்தான் அல்லாஹ் அர்ஷில் இருந்துகொண்டு அல்லாஹ்வுக்கு அடிவானத்தில் எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது எனவும் கூறமுடியாது.

எமது புத்தியை ஆதாரத்தைவிட முற்படுத்துவது கூடாது. அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். மார்க்கம் என்பது அபிப்பிராயத்தைக் கொண்டு அமையுமென்றால் காலுறைகளின் கீழே மஸ்ஹு செய்வதே மிக ஏற்றமானதாக இருக்கும். - அபூதாவூத் - அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால், காலுறை அணிந்தவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூ செய்யும்போது அதன் மேல்பகுதியில் மஸ்ஹு செய்யுமாறே ஏவினார்கள். ஆனால், காலின் அடிப்பகுதியிலே அழுக்குகள் படிவதால் கீழ்ப்புறத்தை மஸ்ஹு செய்வதே சரியான ஒரு கருத்தாகத் தோன்றும். ஆனால், புத்தியை ஆதாரத்தைவிட முற்படுத்துவது கூடாது என்பதற்காக நாம்  வுழூச் செய்யும்போது நபிவழி அடிப்படையில் காலுறைகளின் மேல்பகுதியில்தான் மஸ்ஹு செய்ய வேண்டும்.

23. அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றானா?

விடை: அல்லாஹ் எங்களுடன் அவனுடைய அறிவைக்கொண்டுதான் இருக்கின்றான். அதாவது, நாம் செய்கின்றவற்றைப் பார்த்துக்கொண்டும் பேசுகின்றவற்றை செவிமடுத்துக்கொண்டும் இருக்கின்றான். ஆனால், அவனுக்குரிய இடம் அர்ஷேயாகும். அவன் உயர்வாகவே இருக்கின்றான். அல்லாஹ் தூணிலும் துரும்பிலும் இருப்பதாகக் கூறுவது ஒரு வழிகெட்ட கொள்கையாகும்.

24. அல்லாஹ் உயர்வாக உள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் என்ன?

விடை: அல்குர்ஆன் ஆதாரங்கள் பின்வருமாறு:

1. அவன் பக்கமே நல்ல வார்த்தைகள் ஏறிச்செல்கின்றன.

- அல்பாதிர்: 10

உயர்வாக உள்ள ஒன்றின் பக்கமே ஏறிச்செல்ல முடியும். இதன் மூலம் அல்லாஹ் உயர்வாக உள்ளான் என்பதை எமக்கு விளங்க முடிகின்றது.

2. அல்லாஹுத்தஆலா ஈஸா - அலைஹிஸ்ஸலாம் - அவர்களுக்கு - மேலும், என் பக்கம் உன்னை நான் உயர்த்துபவனாக இருக்கின்றேன். - எனக்கூறினான்.

- ஆலஇம்ரான்: 55

3. பின்பு அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.

- அல்அஃராப்: 54

ஹதீஸ் ஆதாரங்கள் பின்வருமாறு:

1. இஸ்ரா மிஃராஜுடைய ஆதாரங்கள் அல்லாஹ் உயர்வாக உள்ளான் என்பதற்கு தெளிவான ஆதாரங்களாகும்.

2. நீங்கள் என்னை நம்பமாட்டீர்களா? நானோ வானத்தில் உள்ளவனுக்கு நம்பிக்கையாளனாக இருக்கின்றேன்.

- புஹாரீ, முஸ்லிம்

3. ஓர் அடிமைப் பெண்ணிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் எங்கு உள்ளான்? என வினவினார்கள். அப்பெண் வானத்திலே என பதில் கூறியதும் அவளை விடுதலை செய்யுங்கள் ஏனென்றால், அவள் ஒரு முஃமினான பெண்ணாவாள்  எனக் கூறினார்கள்.

- முஸ்லிம்

புத்திரீதியான ஆதாரங்கள்:

1. தனது படைப்பினங்களைவிட்டும் உயர்வாக இருப்பதே இறைவனுக்குத் தகுதிவாய்ந்ததாகும்.

2. யாராவது பிரார்த்தித்தால் கையை உயர்த்தியே பிரார்த்தனை செய்வார். யாரும் கையை கீழ் நோக்கிப் பிரார்த்திப்பதில்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்