அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் பார்வையில் மலாஇகாமார்கள் – 03

بسم الله الرحمن الرحيم

மலாஇகாமார்கள் அல்குர்ஆனை யாராவது ஓதினால் அதனைச் செவிமடுப்பதற்காக வேண்டி வானத்திலிருந்து இறங்குவார்கள். இதற்கு பின்வரும் சம்பவம் தெளிவான ஆதாரமாகக் காணப்படுகின்றது.

ஒரு நாள் இரவு உஸைத் இப்னு ஹுதைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய குதிரையை அடைத்து வைக்கும் இடத்தில் ஓதிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவருடைய குதிரை தடுமாறியது. பின்பு அவர்கள் ஓதினார்கள். மீண்டும் ஒருமுறை அது தடுமாறியது. பின்பு அவர்கள் ஓதினார்கள். மீண்டும் அது தடுமாறியது. உஸைத் இப்னு ஹுதைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: அக்குதிரை என்னுடைய மகன் யஹ்யாவை மிதித்துவிடுமோ என நான் பயந்தேன். அப்போது நான் அதனிடம் எழுந்து சென்றேன். அதன்போது என்னுடைய தலைக்கு மேலால் நிழல் தரக்கூடிய மேகத்தைப்போன்று ஒன்றைக் கண்டேன். அதிலே விளக்குகள் போன்று காணப்பட்டன. அது ஆகாயத்தில் நான் பார்க்க முடியாத அளவிற்கு ஏறிச்சென்றது. நான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நேற்று நடு இரவில்  நான் என்னுடைய குதிரையை அடைத்து வைக்கும் இடத்தில் ஓதிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய குதிரை தடுமாறியது என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு ஹுதைரே! நீங்கள் ஓதுங்கள் எனக்கூறினார்கள். அதற்கவர்கள் நான் ஓதினேன். அது மீண்டும் தடுமாறியது எனக்கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு ஹுதைரே! நீங்கள் ஓதுங்கள் எனக்கூறினார்கள். அதற்கவர்கள் நான் ஓதினேன். அது மீண்டும் தடுமாறியது எனக்கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு ஹுதைரே! நீங்கள் ஓதுங்கள் எனக்கூறினார்கள். அதற்கவர்கள் நான் திரும்பிப் பார்த்தேன். யஹ்யா அதற்கு அருகில் இருந்தான். அது அவனை மிதித்துவிடும் என்று நான் பயந்தேன். அப்போது நான் நிழல் தரக்கூடிய மேகத்தைப் போன்று ஒன்றைக் கண்டேன். அதிலே விளக்குகள் போன்று காணப்பட்டன. நான் பார்க்க முடியாத அளவிற்கு அது ஆகாயத்தில் ஏறிச்சென்றது எனக்கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அது மலாஇகாமார்களாகும். உங்களைச் செவிமடுத்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் இன்னும் ஓதியிருந்தால் அவர்களில் மறைந்திருப்பவற்றை மனிதர்கள் பார்த்தவர்களாக ஆகிவிடுவார்கள்.

-     புஹாரீ

அல்குர்ஆன் ஒதலைச் செவிமடுப்பதற்காக வேண்டி மலாஇகாமார்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மலாஇகாமார்கள் வானத்திலிருந்து அல்லாஹ்வின் அடியார்களின் உயிர்களைக் கைப்பற்றுவதற்காகவும் முஃமின்களுக்கு சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் கூறுவதற்காகவும் இறங்குவார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக யாரெல்லாம் எங்கள் இறைவன் அல்லாஹ் எனக்கூறி அதிலே நிலைத்திருந்தார்களோ அவர்களிடம் மலாஇகாமார்கள் - பின்வருமாறு கூறியவர்களாக - இறங்குவார்கள். நீங்கள் பயப்படவேண்டாம். இன்னும் கவலைப்படவும் வேண்டாம். நீங்கள் வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் பெறுங்கள். இவ்வுலகிலும் மறுமையிலும் நாங்கள் உங்களது நேசர்களாக இருக்கின்றோம். அதிலே உங்கள் உள்ளங்கள் ஆசைப்படும் அனைத்தும் உங்களுக்கு உண்டு அதிலே நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு உண்டு. இது மன்னிக்கக்கூடியவனும் இரக்கமுடையவனுமான - அல்லாஹ்விடமிருந்தான - ஒரு விருந்தாகும்.

-     புஸ்ஸிலத்: 30-32

மலாஇகாமார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளின் பிரகாரம் நாடிய உருவத்தில் தோற்றமளிப்பார்கள். மலாஇகாமார்கள் மனித ரூபத்தில் தோற்றமளிப்பார்கள் என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களிடத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித ரூபத்தில்  தோற்றம் பெற்றார். அதனை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

- நபியே! - நீங்கள் இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூறுங்கள். அவள் தனது குடும்பத்தினரைவிட்டு கிழக்குப் பக்கத்தில் தனித்தபோது. அவர்களை விட்டும் அவள் ஒரு திரையை எடுத்துக்கொண்டாள். அப்போது எங்களுடைய ரூஹ் - ஜிப்ரீலை - நாம் அவளிடம் அனுப்பினோம். அவர் அவளுக்கு நேர்த்தியான ஒரு மனிதராகத் தோற்றமளித்தார். அதற்கவள் நீ அல்லாஹ்வை அஞ்சக்கூடியவனாக இருந்தால் உன்னைவிட்டும் நான் ரஹ்மானைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன் எனக்கூறினாள்.

- மர்யம்: 16-18

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் வந்த மலாஇகாமார்கள் மனித ரூபத்தில் தோற்றமளித்தார்கள் என்பது முன்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித ரூபத்தில் தோற்றமளித்துள்ளார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தபோது கடும் வெள்ளை நிற ஆடையுடைய கடும் கறுப்பு முடியுடைய ஒரு மனிதர் தோன்றினார். அவரிடம் பிரயாணத்தின் அடையாளம் காணப்படவில்லை. எங்களில் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. - ஹதீஸின் கடைசியில் - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்தான் ஜிப்ரீல் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு வந்தார் எனக்கூறினார்கள்.

-     முஸ்லிம்

மலாஇகாமார்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கை எண்ணிவிட முடியாத அளவாகும் என்பதை பல ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உமது இரட்சகனின் படையை அவனைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.

-     அல்முத்தஸ்ஸிர்: 31

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அந்நாளில் நரகம் கொண்டுவரப்படும். அதற்கு எழுபதாயிரம் கடிவாளங்கள் காணப்படும். ஒவ்வொரு கடிவாளங்களுடன் எழுபதாயிரம் மலாஇகாமார்கள் அதனை இழுத்தவர்களாக இருப்பார்கள்.

-     முஸ்லிம்

மிஃராஜுடைய சம்பவத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்பைதுல் மஃமூருக்கு உயர்த்தப்பட்டபோது அங்கே ஒரு நாளைக்கு எழுபதாயிரம் மலாஇகாமார்கள் அதனைத் தவாப் செய்வதாகவும் ஒரு நாளில் தவாப் செய்த மலாஇகாமார்கள் மீண்டும் தவாப் செய்யமாட்டார்கள் என்றும் கூறினார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

ஆகவே, இந்த ஆதாரங்கள் மலாஇகாமார்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் கணக்கிட முடியாது என்பதை அறிவிக்கின்றன.

மலாஇகாமார்களைப்பற்றிய சில தகவல்களை அல்லாஹ்வின் உதவியால் உங்களோடு நான் பகிர்ந்து கொண்டேன். அல்லாஹுத்தஆலா எங்களையும் அவர்களைப்போன்று கண்ணியமிக்க நல்லவர்களாகவும் அல்லாஹ்வை வணங்குபவர்களாகவும் ஆக்கிவைப்பானாக!

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்