அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் பார்வையில் மலாஇகாமார்கள் – 01

بسم الله الرحمن الرحيم

ஆறு விடயங்களை நம்புவதின் மீது இஸ்லாமிய அகீதா கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் கட்டாயம் நம்ப வேண்டிய ஆறு விடயங்களில் ஒன்றே மலாஇகாமார்களாவர். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்பு நாம் நம்ப வேண்டிய இரண்டாவது அம்சம் மலாஇகாமார்கள் குறித்தாகும் என்பது யாவரும் அறிந்ததே. ஆகவே, அல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்றாகிய இந்த மலாஇகாமார்களைப்பற்றி ஒரு சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

மலாஇகாமார்களை நம்புவது ஈமானுடைய தூண்களில் ஒன்றாகும் என்பதை நாம் தெரிந்து வைத்துள்ளோம். எனவே, மலாஇகாமார்களை நம்புவது அனைவரின் மீதும் கடமையாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: தூதர் தனக்கு தனது இறைவனிடமிருந்து இறக்கிவைக்கப்பட்டதை ஈமான் கொண்டார். அதனை முஃமின்களும் ஈமான் கொண்டார்கள். அனைவரும் அல்லாஹ், அவனது மலாஇகாமார்கள், அவனது வேதங்கள், அவனுடைய தூதர்கள் ஆகியவற்றை ஈமான் கொண்டுவிட்டார்கள்.

-     அல்பகறா: 285

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்றால் நீ அல்லாஹ்வை, அவனுடைய மலாஇகாமார்களை, அவனுடைய வேதங்களை, அவனுடைய தூதர்களை, மறுமை நாளை நம்புவதாகும். இன்னும், கத்ரின்படி நலவு மற்றும் தீங்கு நிகழும் என்பதை நீ நம்புவதாகும்.

- புஹாரீ

இவ்விரு ஆதாரங்களும் மலாஇகாமார்களை உள்ளடக்கிய ஆறு அம்சங்களை நம்புவது கட்டாயம் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

எவ்வாறு மலாஇகாமார்களை ஈமான் கொள்வது கட்டாயமாகுமோ அதேபோல் அவர்களை நம்பிக்கை கொள்ளாதவர்கள் மார்க்கத்தைவிட்டும் வெளியேறியவர்களாகக் கருதப்படுவார்கள்.

அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை, அவனது தூதர்களை, அவன் தனது தூதருக்கு இறக்கியதை, இதற்கு முன்பு இறக்கப்பட்ட வேதத்தை ஈமான் கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வை, அவனது மலாஇகாமார்களை, அவனது வேதங்களை, அவனது தூதர்களை, மறுமை நாளை நிராகரிக்கின்றாரோ அவர் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டார்.

-     அந்நிஸா: 136

யார் மலாஇகாமார்களை நிராகரிக்கின்றாரோ அவருடைய வழிகேட்டை இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது.

மலாஇகாமார்கள் நாம் பார்க்க முடியாத மறைவானவர்கள். நாம் அவர்களைப் பார்க்காவிட்டாலும் அவர்களை நம்புவது எமது கடமையாகும். நாம் எமது புத்தியை நம்புகின்றோம். ஆனால், அதனை எங்களால் பார்க்க முடியாது. நாம் மின்சாரத்தை நம்புகின்றோம். ஆனால், அதனை எங்களால் பார்க்க முடியாது. அதேபோல் நாம் பார்க்க முடியாவிட்டாலும் மலாஇகாமார்களை நம்ப வேண்டும்.

ஏன் நாம் மலாஇகாமார்களை நம்ப வேண்டும் என்றால் அல்லாஹ்வும் அவனது தூதரும் மலாஇகாமார்களைப்பற்றி அதிகமான இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்பதினாலாகும்.

அவற்றில் சில இடங்களை நான் குறிப்பிடுகின்றேன்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலாஇகாமார்களும் நபியின் மீது அருள் புரிகின்றனர். விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்.

-     அல்அஹ்ஸாப்: 56

இவ்வசனத்தில் அல்லாஹ் தனது மலாஇகாமார்கள் நபியின் மீது அருள் புரிவதாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீதியை நிலைநாட்டியவனாக அல்லாஹ்வும் மலாஇகாமார்களும் அறிவுடையவர்களும் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சான்று பகர்ந்தார்கள்.

-     ஆல இம்ரான்: 18

இவ்வசனத்தில் மலாஇகாமார்கள் அல்லாஹ் ஒருவன் என்று சான்று பகர்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நாயும் உருவப்படங்களும் உள்ள வீட்டில் மலாஇகாமார்கள் நுழையமாட்டார்கள்.

-     புஹாரீ

மேலும், அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக மலாஇகாமார்கள் தனது இறக்கைகளை அறிவைத் தேடக்கூடியவருக்கு அவர் தேடியதைப் பொருந்திக்கொண்டதன் காரணமாக தாழ்த்துகின்றார்கள். - அல்பைஹகீ - அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்றும் அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஹஸன் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகவே, தன்னிச்சைப்படி எந்த ஒரு வார்தையேனும் மொழியாத நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலாஇகாமார்களைப்பற்றி அறிவித்திருக்கின்றார்கள். இவ்வாதாரங்கள் மலாஇகாமார்கள் என்ற ஒரு படைப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, அவர்களை நம்புவது நமது கடமையாகும். ஏனென்றால், மறைவானவற்றை நம்புவது உண்மையான இறையச்சமுடையவர்களின் பண்பாகும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டிருக்கின்றான்.

அவன் கூறுகின்றான்: அலிப் லாம் மீம். அது வேதமாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழியளிக்கக்கூடியதாகும். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் அவர்கள் மறைவானவற்றை ஈமான் கொள்வார்கள்.

-     அல்பகறா: 1-3

மலாஇகாமார்கள் எதனால் படைக்கப்பட்டார்கள்? எப்போது படைக்கப்பட்டார்கள்? அவர்களுடைய உடல் ரீதியான பண்புகள் என்ன? குணரீதியான பண்புகள் என்ன? போன்ற விடயங்களை அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் தெளிவுபடுத்துகின்றன.

மலாஇகாமார்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மலாஇகாமார்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும், ஜின்கள் கடுமையான தீச்சுவாலையுடைய நெருப்பால் படைக்கப்பட்டுள்ளார்கள்.

-     முஸ்லிம்

மலாஇகாமார்கள் எப்போது படைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். ஆனால், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முன்பே மலாஇகாமார்கள் படைக்கப்பட்டார்கள் என்ற உண்மையை மாத்திரம் நாம் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்: நபியே! இன்னும் உமது இரட்சகன் மலாஇகாமார்களிடம் நிச்சயமாக பூமியில் நான் ஒரு தலைமுறையை தோற்றுவிக்கப்போகின்றேன் என்று கூறியபோது, நாங்கள் உன் புகழைத் துதித்துக் கொண்டும் உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டுமிருக்க, அதில் குழப்பத்தை விளைவித்து, இரத்தங்களை சிந்துவோரையா தோற்றுவிக்கப் போகின்றாய்? என்று கூறினார்கள்.

-     அல்பகறா: 30

இவ்வசனம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே மலாஇகாமார்கள் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆனால், அவர்கள் படைக்கப்பட்ட நாள் எதுவென்பதில் எந்தவொரு ஆதாரத்தையும் நாம் காணமுடியாது.

மலாஇகாமார்கள் மிகவும் மகத்தான படைப்பினம் என்பதை நாம் பல ஆதாரங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களுமாகும். அதன் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான மலாஇகமார்கள் இருப்பார்கள். அல்லாஹ்வுக்கு அவர்கள் அவன் ஏவியவற்றில் மாறுசெய்யமாட்டார்கள். அவர்கள் ஏவப்படுவதை அவர்கள் செய்வார்கள்.

-     அத்தஹ்ரீம்: 6

இவ்வசனத்தில் அல்லாஹுத்தஆலா மலாஇகாமார்களில் நரகத்திற்குப் பொறுப்பானவர்களின் பண்புகளை வர்ணித்திருக்கின்றான். மேலும், மலாஇகாமார்களுக்கு இறக்கைகள் உள்ளன என்பதையும் நாம் பல ஆதாரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானங்களையும் பூமியையும் ஆரம்பமாகப் படைத்த, மலாஇகாமார்களை இரண்டிரண்டு மும்மூன்று நன்நான்கு இறக்கைகளை உடைய தூதர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

-     அல்பாதிர்: 1

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவருடைய சுயரூபத்தில் இரு முறை கண்டார்கள். மக்காவில் ஒரு முறையும் அவர்கள் மிஃராஜ் பயணத்தை மேற்கொண்டபோது சித்ரதுல் முன்தஹா என்ற இடத்தில் மற்றொரு முறையும் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 600 இறக்கைகள் காணப்பட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்