அல்உஸூலுஸ்ஸலாஸா தமிழாக்கம் – 05

بسم الله الرحمن الرحيم

பத்து வருடங்கள் தவ்ஹீதின்பால் அழைப்பு விடுக்கக்கூடியவராக அவர் தொடர்ந்திருந்தார். பத்து வருடங்களுக்குப் பின் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார். ஐந்து நேரத்தொழுகைகள் அவர்மீது கடமையாக்கப்பட்டது. மூன்று வருடங்கள் மக்காவில் அவர் தொழுதார். அதற்குப்பின் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ளுமாறு ஏவப்பட்டார்.

ஹிஜ்ரத் என்பது ஷிர்க்குடைய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டுக்கு நகர்வதாகும். ஷிர்க்குடைய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்வது இந்த உம்மத் மீது கடமையான ஒன்றாகும். மறுமை நிகழும் வரைக்கும் அது நிலைத்திருக்கும்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்? என கேட்பார்கள். அவர்கள் நாங்கள் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்களாக இருந்தோம் என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா? என அவர்கள் கேட்பார்கள். அவர்களது ஒதுங்குமிடம் நரகமாகும். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனமாக்கப்பட்டவர்களைத் தவிர. இவர்கள் எவ்விதத் தந்திரம் செய்வதற்கும் சக்திபெறமாட்டார்கள். இன்னும் - வெளியேறிச் செல்ல - எவ்வித வழியையும் அறியமாட்டார்கள். எனவே, அவர்களை அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும் மிக்க மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

-     அந்நிஸா: 97-99

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்ட என்னுடைய அடியார்களே! நிச்சயமாக என்னுடைய பூமி விசாலமானதாக இருக்கின்றது. நீங்கள் என்னையே வணங்குங்கள்.

-     அல்அன்கபூத்: 56

அல்பகவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: இந்த வசனம் இறங்குவதற்கான காரணம் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் இருந்த முஸ்லிம்களின் விடயமாகும். அல்லாஹ் அவர்களை ஈமானின் பெயரைக்கொண்டு அழைத்தான்.

ஹிஜ்ரத்துக்கு ஹதீஸிலிருந்து ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தவ்பா துண்டிக்கப்படும் வரை ஹிஜ்ரத் துண்டிக்கப்படமாட்டாது. சூரியன் அதனுடைய மேற்கிலிருந்து உதிக்கும் வரை தவ்பா துண்டிக்கப்படமாட்டாது.

அவர் மதீனாவில் தரிபட்டபோது ஏனைய இஸ்லாமிய சட்டதிட்டங்களைக்கொண்டு ஏவப்பட்டார். உதாரணம்: ஸகாத், நோன்பு, ஹஜ், அதான், ஜிஹாத், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், இன்னும் இவைகள் அல்லாத இஸ்லாமிய சட்டதிட்டங்கள்.

இதன் மீது அவர்கள் பத்து வருடங்கள் தொடர்ந்திருந்தார்கள். அவருடைய மார்க்கமோ எஞ்சியிருக்கின்ற நிலையில் அவர்கள் மரணித்தார்கள். அவர் மீது அல்லாஹ்வின் கருணைகளும் சாந்தியும் உண்டாகட்டும். இதுதான் அவருடைய மார்க்கமாகும். அவர் இந்த உம்மத்திற்கு அறிவிக்காத எந்த நலவும் இல்லை. அவர் எச்சரிக்காத எந்த தீங்கும் இல்லை. அவர் அறிவித்த நலவு தவ்ஹீதும் அல்லாஹ் விரும்பக்கூடிய பொருந்திக்கொள்ளக்கூடிய அனைத்துமாகும். அவர் எச்சரித்த தீங்கு ஷிர்க்கும் அல்லாஹ் வெறுக்கக்கூடிய அனைத்துமாகும். அவரை அல்லாஹ் அனைத்து மனிதர்களுக்குமாக அனுப்பினான். ஜின்கள், மனிதர்கள் ஆகிய இருபாலாரின் மீதும் அவருக்கு வழிப்படுவதை கடமையாக்கினான்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: - நபியே! - நீங்கள் கூறுங்கள் மனிதர்களே நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வுடைய தூதராவேன்

-     அல்அஃராப்: 185

அவரைக்கொண்டு அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கினான்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்றைய தினம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை நான் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் என்னுடைய அருட்கொடையை உங்கள் மீது நான் பரிபூரணப்படுத்திவிட்டேன். உங்களுக்கு நான் இஸ்லாத்தை மார்க்கமாக பொருந்திக்கொண்டுவிட்டேன்.

-     அல்மாஇதா: 3

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக நீரும் மரணிக்கக்கூடியவரே. இன்னும் அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே. பின்னர் நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இரட்சகனிடத்தில் தர்க்கித்துக்கொள்வீர்கள்.

-     அஸ்ஸுமர்: 30-31

மனிதர்கள் மரணித்தால் எழுப்பப்படுவார்கள்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அதிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். மேலும், அதிலேயே நாம் உங்களை மீட்டுவோம். இன்னும் அதிலிருந்து மீண்டும் ஒருமுறை நாம் உங்களை வெளியேற்றுவோம்.

-     தாஹா: 55

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்தான் பூமியிலிருந்து உங்களை உற்பத்தி செய்தான். பின்னர் அவன் அதில் உங்களை மீட்டுவான். மேலும், உங்களை - அதிலிருந்தே - வெளிப்படுத்துவான்.

-     நூஹ்: 17-18

எழுப்பப்பட்டதன் பின்பு அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். அவர்களுடைய செயல்களைக்கொண்டு அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தீமை செய்தோருக்கு அவர்கள் செய்தவற்றுக்குக் கூலி வழங்குவதற்காகவும் நன்மை செய்தோருக்கு நன்மையைக்கொண்டு கூலி வழங்குவதற்காகவும் - மறுமையை - ஏற்படுத்தியுள்ளான்.

-     அந்நஜ்ம்: 31

யார் எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கின்றாரோ அவர் நிராகரித்துவிட்டார்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிராகரித்தோர் எழுப்பப்படமாட்டோம் என எண்ணுகின்றனர். அவ்வாறல்ல, எனது இரட்சகன் மீது சத்தியமாக நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்தவை குறித்து பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும் என - நபியே! - நீர் கூறுவீராக!

-     அத்தகாபுன்: 7

அல்லாஹ் அனைத்து தூதர்களையும் நன்மாராயம் கூறக்கூடியவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினான்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: தூதர்களுக்குப் பின்னரும், அல்லாஹ்வுக்கு எதிராக குற்றம் பிடிப்பதற்கு மனிதர்களுக்கு எவ்வித ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக - மேலும் பல - தூதர்களை நன்மாராயம் கூறுவோராகவும் எச்சரிப்போராகவும் அனுப்பி வைத்தோம்.

-     அந்நிஸா: 165

அவர்களில் ஆரம்பமானவர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவர். அவர்களில் இறுதியானவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவர். அவர் நபிமார்களில் இறுதி முத்திரை பெற்றவராவார். அவர்களில் ஆரம்பமானவர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நூஹுக்கும் அவர்களுக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போன்று நிச்சயமாக நாம் உமக்கும் வஹீ அறிவித்திருக்கின்றோம்.

-     அந்நிஸா: 163

அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்று ஏவியவனாகவும் அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதைவிட்டும் தடுக்கக்கூடியவனாகவும்  நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை அல்லாஹ் அனைத்து சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பினான்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வை வணங்குங்கள், மேலும், அல்லாஹ் அல்லாதவைகளாகிய தாகூத்களை விட்டும் விலகிக்கொள்ளுங்கள் எனக்கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.

-     அந்நஹ்ல்: 36

அல்லாஹ் அனைத்து அடியார்களின் மீதும் தாகூத்களை நிராகரிப்பதையும் அல்லாஹ்வை ஈமான் கொள்வதையும் கடமையாக்கினான். இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: தாகூத் என்பதின் கருத்து ஓர் அடியான் வணங்கப்படுபவன், பின்பற்றப்படுபவன், வழிப்படப்படுபவன் ஆகியோரில் எல்லை மீறுவதாகும்.

தாகூத்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் தலைவர்கள் ஐவர். இப்லீஸ் அவனை அல்லாஹ் சபிப்பானாக, தான் பொருந்திக்கொண்ட நிலையில் வணங்கப்படுபவன், தன்னை வணங்குவதின்பால் மக்களை அழைப்பவன், மறைவான அறிவில் உள்ள ஒன்றை தான் அறிவதாக வாதிடக்கூடியவன், அல்லாஹ் இறக்கியதல்லாத ஒன்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கியவன்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: இம்மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத்தெளிவாகிவிட்டது. எவர் தாகூத்தை நிராகரித்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனும் நன்கறிந்தவனுமாவான்.

-     அல்பகறா: 256

இதுதான் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதின் கருத்துமாகும். ஹதீஸில் - பின்வருமாறு - இடம்பெற்றுள்ளது. - நான் கொண்டு வந்த விடயங்களின் - தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதில் உயர்வானது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரிவதாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர், தோழர்கள் மீதும் ஸலாமும் ஸலவாத்தும் கூறுவானாக!

-     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்