அல்உஸூலுஸ்ஸலாஸா தமிழாக்கம் – 04

بسم الله الرحمن الرحيم

நோன்பின் ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் பொருட்டு உங்களுக்கு முன்சென்றவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

-     அல்பகறா: 183

ஹஜ்ஜுடைய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மனிதர்களில் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரைவிட்டும் தேவையற்றவன்.

-     ஆலஇம்ரான்: 97

இரண்டாவது படித்தரம்: ஈமான்

அது எழுபத்தி சொச்சம் கிளைகளைக் கொண்டது. அவைகளில் மிக உயர்ந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும். அவைகளில் மிகத் தாழ்ந்தது பாதையை விட்டும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானில் இருந்தும் உள்ள ஒரு கிளையாகும்.

அதனுடைய தூண்கள் ஆறாகும். அவை நீ அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் மறுமைநாளையும் கத்ரின் நன்மை மற்றும் தீமைகளையும் நம்புவதாகும்.

இந்த ஆறு தூண்களுக்குமான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: கிழக்கு, மேற்குப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது மட்டும் நன்மையாகாது. மாறாக, அல்லாஹ்வையும் இறுதிநாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் நன்மை செய்பவர்களே.

-     அல்பகறா: 177

கத்ருக்குரிய ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவோடு படைத்துள்ளோம்.

-     அல்கமர்: 49

மூன்றாவது படித்தரம்: இஹ்ஸான்

இதற்கு ஒரேயொரு தூண் உள்ளது. அது நீ அல்லாஹ்வைப் பார்ப்பதுபோல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டால் நிச்சயமாக அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் வணங்குவதாகும்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தன்னை அஞ்சி நடப்பவர்களுடனும் நன்மை செய்பவர்களுடனும் இருக்கின்றான்.

-     அந்நஹ்ல்: 128

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்னும் யாவற்றையும் மிகைத்தவன், நிகரற்ற அன்புடையவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நீர் நின்று வணங்கும்போதும், நீர் ஸஜ்தா செய்பவர்களுடன் இணைந்து இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கின்றான். நிச்சயமாக அவன் யாவற்றையும் செவியேற்பவன், நன்கறிந்தவன்.

-     அஷ்ஷுஅரா: 217-220

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீர் எக்காரியத்தில் இருந்தாலும் குர்ஆனில் இருந்து எதையேனும் ஓதினாலும் எந்தச் செயலையேனும் நீங்கள் செய்தாலும் நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும்பொழுது நாம் உங்களை கண்காணித்தவர்களாக இருக்கின்றோம்.

-     யூனுஸ்: 61

ஹதீஸிலிருந்து ஆதாரம்: ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரபல்யமான ஹதீஸாகும். உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறினார்கள்: நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உட்கார்ந்தவர்களாக இருந்தபோது கடும் வெள்ளை நிற ஆடையுடைய, கடும் கறுப்பு நிற முடியுடைய ஒரு மனிதர் எங்களிடம் தோன்றினார். பிரயாணத்தின் அடையாளம் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உட்கார்ந்து அவருடைய இரு முழங்கால்களுடன் தன்னுடைய முழங்கால்களை சேர்த்து வைத்தார். இன்னும் தனது இரு கைகளை அவருடைய இரு தொடைகளின் மீது வைத்து அவர் கூறினார்: முஹம்மதே! எனக்கு இஸ்லாத்தைப்பற்றி அறிவித்துத் தாருங்கள். அதற்கவர்கள்: நீ வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சான்று பகர்வதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத்தைக் கொடுப்பதும், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர சக்திபெற்றால் - கஃபதுல்லாஹ் எனும் - வீட்டை ஹஜ் செய்வதுமாகும் எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர்: நீர் உண்மை கூறிவிட்டீர் என்று கூறினார். நபியவர்களிடம் கேட்டு அவர்களை உண்மைப்படுத்துவது குறித்து நாம் ஆச்சரியப்பட்டோம். எனக்கு ஈமானைப்பற்றி அறிவித்துத் தாருங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நீ அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் மறுமை நாளையும் கத்ரில் நன்மை தீமைகளையும் நம்புவதாகும் எனக்கூறினார்கள். அதற்கு அம்மனிதர்: நீர் உண்மை கூறிவிட்டீர் என்று கூறினார். இஹ்ஸானைப்பற்றி எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று அவர் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: நீ அல்லாஹ்வை பார்ப்பதுபோல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டால் நிச்சயமாக அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் வணங்குவதாகும் என்று கூறினார்கள். அப்போது அம்மனிதர், மறுமை நாளைப்பற்றி எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அதைப்பற்றி கேட்பவரைவிட கேட்கப்படுபவர் மிக்க அறிந்தவரல்ல என்று கூறினார். எனக்கு அதனுடைய அடையாளங்களைப்பற்றி அறிவித்துத் தாருங்கள் என்று அவர் கேட்டார். அதற்கவர்கள்: அடிமைப்பெண் தனது எஜமாட்டியைப் பெற்றெடுப்பதும், செருப்பின்றி, ஆடையின்றி பரம ஏழைகளாக ஆடு மேய்க்கக்கூடியவர்களாக இருந்தவர்கள் பெரும் கட்டிடங்களில் உலா வருவதை நீ பார்ப்பதுமாகும் என்று கூறினார்கள். உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான் நீண்ட நேரம் வெளியில் தங்கியிருந்தோன், பிறகு நபியவர்களை சந்தித்தபோது: இவர்தான் ஜிப்ரீல், உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்க வந்தார் எனக் கூறினார்கள்.

மூன்றாவது அடிப்படை: உங்களது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அறிந்துகொள்வதாகும்.

அவர் முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் இப்னி அப்தில் முத்தலிப் இப்னி ஹாஷிம் ஆவார். ஹாஷிம் குறைஷி வம்சத்தைச் சார்ந்தவராவார். குறைஷி வம்சம் அறபிகளில் ஒரு வம்சமாகும். அறபிகள் இஸ்மாஈல் இப்னு இப்றாஹீம் அல்ஹலீல் அவர்களின் சந்ததியைச் சார்ந்தவர்கள். அவர் மீதும் எங்களது நபியின் மீதும் மிகச்சிறந்த கருணையும் சாந்தியும் உண்டாகட்டும்.

அவருடைய ஆயுட்காலம் 63 வருடங்களாகும். அவற்றில் 40 வருடங்கள் நுபுவ்வத்திற்கு முன்பாகும். 23 வருடங்கள் நபியாகவும் ரஸூலாகவும் இருந்தார். இக்ரஃ என்ற சூராவைக்கொண்டு நபித்துவம் வழங்கப்பட்டார். முத்தஸ்ஸிர் என்ற சூராவைக்கொண்டு தூதுத்துவம் வழங்கப்பட்டார். அவருடைய நகரம் மக்காவாகும். அல்லாஹ் அவரை ஷிர்க்கை விட்டும் எச்சரிக்கை செய்வதைக்கொண்டும் தவ்ஹீதின்பால் அழைப்பு விடுப்பதற்கும் அனுப்பினான்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: போர்த்திக்கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! இன்னும், உமது இரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக! இன்னும், உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! மேலும், அசுத்தத்தை வெறுப்பீராக! அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி நீர் உபகாரம் செய்யாதீர். உமது இரட்சகனுக்காகவே பொறுமையுடன் இருப்பீராக!

-     அல்முத்தஸ்ஸிர்: 1-7

எழுந்து எச்சரிக்கை செய்வீராக என்பதின் கருத்து: ஷிர்க்கை விட்டும் எச்சரிக்கை செய்வதும் தவ்ஹீதின்பால் அழைப்பு விடுப்பதுமாகும்.

உமது இரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக: என்பதின் கருத்து தவ்ஹீதைக்கொண்டு அவனை மகத்துவப்படுத்துவாயாக என்பதாகும்.

உனது ஆடையை தூய்மைப்படுத்துவீராக என்பதின் கருத்து: உனது செயல்களை ஷிர்க்கைவிட்டும் தூய்மைப்படுத்துவீராக என்பதாகும்.

அசுத்தமானதை வெறுப்பீராக என்பதின் கருத்து: அசுத்தமானதென்றால் அது சிலைகளாகும். அதனை வெறுப்பதென்றால் அதனையும் அதைச் செய்பவர்களையும் விட்டுவிடுவதும் அதைவிட்டும் அவற்றைச் சார்ந்தவர்களை விட்டும் நீங்கிக்கொள்வதாகும்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்