அல்உஸூலுஸ்ஸலாஸா தமிழாக்கம் – 03

بسم الله الرحمن الرحيم

துஆ என்பது வணக்கத்தின் மூளையாகும் என்று ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு விடையளிப்பேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகம் நுழைவார்கள் என உங்கள் இரட்சகன் கூறுகின்றான்.

-     அல்முஃமின்: 60

பயப்படுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கு ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் அவர்களைப் பயப்பட வேண்டாம். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் என்னையே நீங்கள் பயப்படுங்கள்.

-     ஆல இம்ரான்: 175

ஆதரவு வைத்தல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யார் தன்னுடைய இறைவனை சந்திப்பதை ஆதரவு வைக்கக்கூடியவராக இருக்கின்றாரோ அவர் நல்ல அமல்களை புரியட்டும். தன்னுடைய இறைவனை வணங்குவதில் அவர் யாரையும் இணையாக்க வேண்டாம்.

-     அல்கஹ்ப்: 110

பொறுப்புச்சாட்டுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே பொறுப்புச்சாட்டுங்கள்.

-     அல்மாஇதா: 23

யார் அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுகின்றாரோ அவன் அவருக்கு போதுமானவனாவான்.

-     அத்தலாக்: 3

ஆசை வைத்தல், அச்சம் கொள்ளல், உள்ளச்சம் கொள்ளல் ஆகியன - வணக்கத்தில் நின்றும் உள்ளன -  என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக அவர்கள் நல்ல விடயங்களில் விரைந்து செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். மேலும், எங்களை ஆசையுடனும் பயத்துடனும் அவர்கள் அழைக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் எங்களை இறையச்சம் கொள்பவர்களாகவும் இருந்தார்கள்.

-     அல்அன்பியா: 90

மறைவில் பயப்படுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்களை நீங்கள் பயப்பட வேண்டாம். என்னை நீங்கள் பயப்படுங்கள்.

-     அல்மாஇதா: 3

அல்லாஹ்விடம் மீளுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உங்கள் இறைவனின் பக்கம் நீங்கள் மீளுங்கள். அவனுக்கே நீங்கள் கட்டுப்படுங்கள்.

-     அஸ்ஸுமர்: 54

உதவிதேடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவிதேடுகின்றோம்.

-     அல்பாதிஹா: 5

நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவிதேடு என்று ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்புத் தேடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் வைகறைப் பொழுதின் இறைவனைக்கொண்டு பாதுகாவல் தேடுகிறேன் என்று - நபியே! - நீங்கள் கூறுங்கள்.

-     அல்பலக்: 1

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மனிதர்களின் அரசனாகிய மனிதர்களின் இறைவனைக்கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று - நபியே! - நீங்கள் கூறுங்கள்.

-     அந்நாஸ்: 1-2

கடுமையான நேரத்தில் உதவிதேடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடியபோது அவன் உங்களுக்கு பதிலளித்தான்.

-     அல்அன்பால்: 9

அறுத்துப் பலியிடுதல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுத்துப் பலியிடுதலும் நான் வாழ்வதும் நான் மரணிப்பதும்.  அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவனுக்கு எந்த இணையாளனும் இல்லை. அதைக்கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். நான் முஸ்லிம்களில் முதலாவதாக இருக்;கின்றேன்.

-     அல்அன்ஆம்: 162-163

ஹதீஸிலிருந்து ஆதாரம்: அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவரை அல்லாஹ் சபிப்பான்.

நேர்ச்சை வைத்தல் - வணக்கத்தில் நின்றும் உள்ளது - என்பதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமைகள் பரவிக்கிடக்கக்கூடிய ஒரு நாளையும் அவர்கள் பயப்படுவார்கள்.

-     அல்இன்ஸான்: 7

இரண்டாவது அடிப்படை

ஆதாரங்களைக்கொண்டு இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துகொள்வதாகும். அது ஒருமைப்படுத்துவதைக்கொண்டு அல்லாஹ்விடம் சரணடைவதும் கட்டுப்படுவதைக்கொண்டு அவனுக்கு வழிபடுவதும் இணைவைப்பிலிருந்து விலகியிருப்பதுமாகும். அது மூன்று படித்தரங்களாகும்.

1. இஸ்லாம்

2. ஈமான்

3. இஹ்ஸான்

ஒவ்வொரு படித்தரங்களிற்கும் தூண்கள் உள்ளன. இஸ்லாத்தின் தூண்கள் ஐந்தாகும். வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்தல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், சங்கையான வீட்டை ஹஜ் செய்தல் ஆகியனவைகளாகும்.

சான்று பகர்வதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக - உண்மையாக - வணங்கப்படத்தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டியவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் - சாட்சி கூறுகின்றனர். உண்மையாக - வணங்கப்படத்தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாவான்.

-     ஆல இம்ரான்: 18

இதன் கருத்து அல்லாஹ்வை மாத்திரமே தவிர உரிமையைக் கொண்டு வணங்கப்படுபவன் இல்லை என்பதாகும். இறைவன் இல்லை என்ற வார்த்தை அல்லாஹ்வையன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் இல்லாமல் செய்கிறது. அல்லாஹ்வைத்தவிர என்ற வார்த்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணக்கத்தை உறுதிப்படுத்துகின்றது. அவனுடைய ஆட்சியில் அவனுக்கு இணையாளன் இல்லையோ அதுபோன்று அவனுக்கு வணக்கம் செலுத்துவதிலும் அவனுக்கு இணையாளன் இல்லை. இதனைத் தெளிவுபடுத்தும் விளக்கம் - பின்வரும் வசனமாகும் - அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இப்றாஹீம் தன் தந்தையிடமும் தனது சமூகத்தாரிடமும் என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக்கொண்டவன். நிச்சயமாக அவனே எனக்கு நேர்வழி காட்டுவான் எனக்கூறியதை  - நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக - மேலும், அவர்கள் மீண்டுவிடும் பொருட்டு அதனைத் தனக்குப் பின்னே நிலையான வார்த்தையாக ஆக்கினார்.

-     அஸ்ஸுஹ்ருப்: 26-28

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வேதங்கொடுக்கப்பட்டவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கமாட்டோம் மேலும், அவனுக்கு எதனையும் இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வையன்றி எங்களில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக்கொள்ளவும் மாட்டோம் என்ற எங்களுக்கும் உங்களுக்குமிடையில் சரியானதொரு கொள்கையின் பக்கம் வாருங்கள் என - நபியே! - நீர் கூறுவீராக! எனினும் அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று நீங்கள் கூறுங்கள்.

-     ஆல இம்ரான்: 64

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்வதின் ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக உங்களில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தை அளிக்கின்றது. உங்கள் விடயத்தில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார். நம்பிக்கையாளர்களுடன் கருணையும் இரக்கமும் உடையவராக இருக்கிறார்.

-     அத்தவ்பா: 128

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்வதின் கருத்து: அவர் ஏவிய விடயத்தில் அவரை வழிப்படுவது, அவர் அறிவித்த விடயங்களை உண்மைப்படுத்துவது, அவர் தடுத்தவற்றை தவிர்ந்துகொள்வது, அவர் மார்க்கமாக்கிய ஒன்றைக் கொண்டல்லாது அல்லாஹ் வணங்கப்படாமல் இருப்பதாகும்.

தொழுகை, ஸகாத், தவ்ஹீதின் விளக்கம் ஆகியவற்றுக்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நேரிய வழி நின்று கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு அல்லாஹ்வை வணங்குமாறும் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்து வருமாறுமே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரிய மார்க்கமாகும்.

-     அல்பய்யினா: 5

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்