அல்உஸூலுஸ்ஸலாஸா தமிழாக்கம் – 02

بسم الله الرحمن الرحيم

நீ அறிந்து கொள்! அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக! நிச்சயமாக நான்கு விடயங்களைக் கற்றுக்கொள்வது எங்கள் மீது கடமையாகும்.

முதலாவது: அறிவாகும், அது அல்லாஹ்வை மற்றும் அவனது நபியை மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வதாகும்.

இரண்டாவது: அதனைக் கொண்டு அமல் செய்வது.

மூன்றாவது: அதன்பால் அழைப்பு விடுத்தல்.

நான்காவது: அதில் உள்ள நோவினையின் போது பொறுமையாக இருத்தல்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். விசுவாசம் கொண்டு நல்லமல்கள் புரிந்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும், பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்பவர்களைத்தவிர.

-     அல்அஸ்ர்: 1-3

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இந்த சூராவைத்தவிர அவனுடைய படைப்பினங்களுக்கு ஆதாரமாக வேறு ஒன்றையும் இறக்காவிட்டால் அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்.

இமாம் புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: சொல்வதற்கும் செய்வதற்கும் முன்னால் அறிந்து கொள்ளுதல் பற்றிய பாடம்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்பதை - நபியே! - நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எனவே, உங்களது பாவங்களுக்கு நீங்கள் மன்னிப்புத் தேடுங்கள்.

-     முஹம்மத்: 19

எனவே, அவன் சொல்வதற்கும் செய்வதற்கும் முன்பு அறிவைக்கொண்டு ஆரம்பித்துள்ளான்.

நீ அறிந்துகொள், அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக! ஒவ்வொரு முஸ்லிமான ஆணின் மீதும் முஸ்லிமான பெண்ணின் மீதும் இந்த மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்வதும் அவைகளைக் கொண்டு அமல் செய்வதும் கடமையாகும்.

முதலாவது: நிச்சயமாக அல்லாஹ் எங்களைப் படைத்தான். எங்களுக்கு ரிஸ்க் அளித்தான். எங்களை அவன் வீணாக விட்டுவிடவில்லை. மாறாக, எங்களுக்கு அவன் ஒரு தூதரை அனுப்பினான். யார் அவரை வழிப்படுகிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் நரகம் நுழைவார்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நாம் பிர்அவ்னுக்கு ஒரு தூதரை அனுப்பியது போல் உங்களுக்கு சாட்சி கூறக்கூடிய ஒரு தூதரை உங்களுக்கு நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். எனினும், பிர்அவ்ன் அத்தூதருக்கு மாறுசெய்தான். எனவே, நாம் அவனை மிகக் கடுமையாகப் பிடித்தோம்.

-     அல்முஸ்ஸம்மில்: 15, 16

இரண்டாவது: நிச்சயமாக அல்லாஹ் அவனுடன் அவனுடைய வணக்கத்தில் ஒருவன் இணைவைக்கப்படுவதை பொருந்திக்கொள்ளமாட்டான். நெருக்கமான வானவராக இருந்தாலும் அனுப்பப்பட்ட நபியாக இருந்தாலும் பொருந்திக்கொள்ளமாட்டான்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குரியதாகும். எனவே, அவனுடன் நீங்கள் ஒருவரையும் அழைக்காதீர்கள்.

-     அல்ஜின்: 18

மூன்றாவது: யார் தூதரை வழிப்பட்டாரோ இன்னும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தினாரோ அவருக்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தவர்களை நேசிப்பது ஆகுமாகமாட்டாது. அவர் தன்னுடைய நெருக்கமானவர்களில் மிக நெருங்கியவராக இருந்தாலும் சரியே.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளும் எந்த ஒரு கூட்டத்தினரையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறாக செயற்படுகின்றவர்களை நேசிப்பவர்களாக நபியே! நீர் காணமாட்டீர். அவர்கள் தமது பெற்றோர்களாகவும், பிள்ளைகளாகவும், சகோதரர்களாகவும், நெருங்கிய உறவினர்களாகவும் இருந்தாலும் சரியே! இத்தகையோரின் உள்ளங்களில் அவன் ஈமானைப் பதிவுசெய்து தன்னிடமிருந்துள்ள உதவியின் மூலம் இவர்களைப் பலப்படுத்தினான். மேலும், இவர்களைச் சுவனச்சோலைகளில் நுழைவிப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக்கொண்டனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினராவர். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றியாளர்கள்.

-     அல்முஜாதலா: 22

நீ அறிந்துகொள்! அல்லாஹ் அவனுக்கு வழிபடுவதின்பால் உன்னை நேர்வழிப்படுத்துவானாக. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கமாகிய ஹனீபிய்யா ஆகிறது மார்க்கத்தை அவனுக்கே தூய்மைப்படுத்தியவனாக நீ அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதாகும். அதனைக்கொண்டே அல்லாஹ் அனைத்து மனிதர்களையும் ஏவினான். அதற்காகவே அவர்களைப் படைத்தான். அல்லாஹுத்தஆலா கூறுவதைப்போல்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.

-     அத்தாரியாத்: 56

வணங்குவதற்காகவே என்பதன் கருத்து ஒருமைப்படுத்துவதற்காகவே என்பதாகும்.

அல்லாஹ் ஏவியவற்றில் மிக மகத்தானது  தவ்ஹீதாகும். அது வணக்க வழிபாடுகளைக்கொண்டு அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அல்லாஹ் தடுத்தவற்றில் மிக மகத்தானது ஷிர்க்காகும். அது அவனுடன் அவன் அல்லாத ஒன்றை அழைப்பதாகும்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதீர்கள்.

-     அந்நிஸா: 36

மனிதன் அறிந்து கொள்;வது கடமையாகக்கூடிய மூன்று அடிப்படைகளும் எவை? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் அடியான் தனது இறைவனை அறிந்துகொள்வதும், அவனுடைய மார்க்கத்தை அறிந்துகொள்வதும், அவனுடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிந்துகொள்வதுமாகும் என்று நீ கூறு.

உன்னுடைய இறைவன் யார்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் என்னையும் அனைத்து அகிலத்தாரையும் தன்னுடைய அருளைக்கொண்டு பரிபாலிக்கக்கூடிய எனது இறைவன் அல்லாஹ் என்று நீ கூறு. அவன்தான் என்னால் வணங்கப்படக்கூடியவன். அவனைத்தவிர வேறு வணங்கப்படக்கூடியவன் எனக்கு இல்லை.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகும்.

-     அல்பாதிஹா: 2

அல்லாஹ்வைத்தவிர உள்ள அனைத்தும் அகிலமாகும். அந்த அகிலத்தில் நானும் ஒருவனாவேன்.

உன்னுடைய இறைவனை எவ்வாறு நீ அறிந்து கொண்டாய்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் அவனுடைய அத்தாட்சிகளையும் படைப்பினங்களையும் கொண்டு என்று என்று நீ கூறு. அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகள் தான் சூரியன் மற்றும் சந்திரனாகும். அவனுடைய படைப்பினங்களில் உள்ளவைகள் தான் ஏழு வானங்கள், ஏழு பூமிகள், அவைகளில் உள்ளவைகள், அவ்விரண்டிற்கும் மத்தியில் உள்ளவைகளாகும்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகள் தான் இரவு, பகல், சூரியன், சந்திரனாகும். நீங்கள் சூரியனுக்கோ சந்திரனுக்கோ சிரம்பணியாதீர்கள். நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால் அவைகளைப் படைத்த அல்லாஹ்வுக்கே நீங்கள் சிரம்பணியுங்கள்;.

-     புஸ்ஸிலத்: 37

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து பின்னர் - தன் தகுதிக்கேற்றவாறு -  அர்ஷின் மீது உயர்ந்தான். அவன் இரவைப் பகலால் மூடுகின்றான். அது - இரவாகிய -  அதை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகளாக-ப் படைத்துள்ளான். - அறிந்துகொள்ளுங்கள்! படைத்தலும் கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவனாகிட்டான்.

-     அல்அஃராப்: 54

இறைவன் அவன்தான் வணங்கப்படக்கூடியவன்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னால் உள்ளவர்களையும் படைத்த உங்கள் இறைவனை நீங்கள் வணங்குங்கள். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகிவிடலாம். அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு அவன் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். மேலும், அவன் வானத்திலிருந்து நீரை இறக்கினான். அதன் மூலம் அவன் உங்களுக்கு ரிஸ்க்காக கனிவர்க்கங்களிலிருந்து வெளிப்படுத்தினான். எனவே, நீங்கள் அறிந்தவர்களாக அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.

-     அல்பகறா: 21-22

இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்: இந்த விடயங்களைப் படைத்தவன்தான் வணங்கப்படுவதற்கும் தகுதியானவன்.

அல்லாஹ் ஏவிய வணக்க வழிபாடுகளின் வகைகள் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகியவைகளைப் போல் உள்ளவைகள், மற்றும்  அவற்றில் உள்ளவைகள் தான் துஆச் செய்தல், பயப்படுதல், ஆதரவு வைத்தல், பொறுப்புச்சாட்டுதல், ஆசைவைத்தல், அச்சம்கொள்ளல், உள்ளச்சமடைதல், மறைவில் பயப்படுதல், அல்லாஹ்விடம் மீளுதல், உதவிதேடல், பாதுகாப்புத்தேடல், கடுமையான நேரத்தில் உதவிதேடல், அறுத்துப்பலியிடல், நேர்ச்சை வைத்தல் இவைகள் அல்லாத அல்லாஹ் ஏவிய இபாதத்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கேயாகும்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நிச்சயமாக பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குரியதாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் எந்த ஒருவரையும் அழைக்காதீர்கள்.

-     அல்ஜின்: 18

இவைகளில் ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு யாராவது திருப்பினால் அவர் முஷ்ரிக் மற்றும் காபிராவார்.

ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: யார் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை அழைக்கின்றானோ அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவனது விசாரனை அவனது இரட்சகனிடமே இருக்கின்றது. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.

-     அல்முஃமினூன்: 117

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்