அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 28

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்கள்

“அர்ரஹ்மானாகிய அவன் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான்” என்ற கருத்துப்பட இடம்பெறக்கூடிய வசனங்கள் அல்குர்ஆனில் ஏழு இடங்களில் பதிவாகியுள்ளன. அப்படியான ஒவ்வோர் இடத்திலும் “இஸ்தவா” என்ற வார்த்தைப் பிரயோகம் காணப்படுகின்றது. இச்சொல் அதனுடைய எதார்த்தமான கருத்தின் அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும். மாற்று வியாக்கியானங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். “இஸ்திவா” என்பது அல்லாஹ்வுக்கு உரித்தான செயல் சார்ந்த பண்பாகும். இப்பண்பானது ஏனைய பண்புகளைப் போன்று அவனது அந்தஸ்திற்குத் தக்க விதத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும், இவ்வார்த்தைக்கு உயர்ந்தான், நிலைபெற்றான் ஆகிய கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய கருத்துக்கள் “இஸ்திவா” தொடர்பாகக் கூறப்பட்ட ஸலபுஸ் ஸாலிஹீன்களின் கூற்றுக்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.

இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “இஜ்திமாஉல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா” என்ற தனது நூலில் இது தொடர்பாகத் தனியான ஒரு பாடத்தை ஏற்படுத்தி அதில் அரபு மொழியியல் அறிஞர்களின் “இஸ்திவா” தொடர்பான கருத்துக்களைத் தொகுத்துள்ளார்கள். மேலும், இது தொடர்பாக உஸாமா அல்கஸ்ஸாஸ் என்பவர் “இஸ்பாது உலுவ்வில்லாஹி அலா ஹல்கிஹி வர்ரத்து அலல் முகாலிபீன்” என்ற தனது நூலிலும் அல்லாலகாஇ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஷர்ஹு உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னா” என்ற தனது நூலிலும் பேசியுள்ளார்கள்.

தற்போது நாங்கள் மேற்குறித்த தலைப்பு தொடர்பாக இடம்பெறக்கூடிய ஏழு அல்குர்ஆன் வசனங்களையும் காண்போம்.

1.   “நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான். அவன் எத்தகையவனென்றால் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அல்அஃராப்: 54)

2.   “நிச்சயமாக உங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான். அவன் எத்தகையவனென்றால் வானங்களை மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (யூனுஸ்: 3)

இவ்வசனங்களில் “அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்” என்று இடம்பெற்றிருக்கக்கூடிய வாசகமே ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டிய வாசகமாகும். மேலும், இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் “அல்அர்ஷ்” என்ற பதம் அரபு மொழி வழக்கில் மன்னர்கள் உட்காருவதற்குப் பயன்படுத்தும் சிம்மாசனத்தைக் குறிக்கும். (பார்க்க: கிதாபுல் அர்ஷ், அத்தன்பீஹாதுஸ் ஸனிய்யா) இக்கருத்தே எல்லா வகையான ஆதாரங்களையும் இணைத்துப் பார்க்கும் போது அறிய முடியுமான கருத்தாகும். இன்னும், அர்ஷானது கால்களையுடைய மலாஇகாமார்கள் சுமந்திருக்கும் சிம்மாசனமாகும். மேலும் அது அகிலத்திற்கு டோமாகவும் படைப்பினங்களுக்கு முகடாகவும் இருக்கும்.

3.   “(இவ்வேதத்தை உமக்கு இறக்கிவைத்த) அல்லாஹ் எத்தகையோனென்றால் வானங்களைத் தூணின்றி உயர்த்தியுள்ளான். அவற்றை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அர்ரஃது: 2)

4.   “அர்ரஹ்மான் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமே அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (தாஹா: 5)

5.   “பின்னர் (தன் கண்ணியத்திற்குத்தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே)  அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அல்புர்கான்: 59)

6. “அல்லாஹ் எத்தகையவனென்றால் வானங்களையும் பூமியையும் இவையிரண்டிற்கும் மத்தியலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் அவன் படைத்தான் பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.)” (அஸ்ஸஜ்தா: 4)

7.   “அவன் எத்தகையவனென்றால் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அல்ஹதீத்: 4)

இவ்வசனங்கள் அனைத்தையும் ஒருமித்து நோக்குகையில் அல்லாஹ் தனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் என்பது உறுதியாகின்றது. மேலும், இத்தகைய திருக்குர்ஆன் வசனங்களில் இடம்பெறும் “இஸ்தவா” என்ற வாசகத்திற்கு எவர்களெல்லாம் மாற்று விளக்கம் வழங்குகின்றார்களோ அவர்களுக்கும் சிறந்த பதில் காணப்படுகின்றது. ஏனெனில், சிலர் “இஸ்தவா” என்ற வாசகத்திற்கு விளக்கமளிக்கையில் ஆக்கிரமித்தல், அதிகாரம் செலுத்துதல் போன்ற விளக்கங்களைக் கூறுகின்றனர். மேலும், “அர்ஷ்” என்ற சொல்லுக்கு ஆட்சி, அதிகாரம் என்று வலிந்துரைக்கின்றனர். இப்படியான மாற்று விளக்கத்தின் மூலம் அல்லாஹ் ஆட்சியைக் கைப்பற்றினான் அவனல்லாதவர்களை அடக்கியாண்டான் என்று தெரிவிக்க முற்படுகின்றனர். இப்படி விளக்கமளிப்பது முற்றிலும் தவறானது என்பதைப் பல வழிகளில் நிரூபிக்கலாம். அவற்றுள் சில வழிகளாவன.

1.   இத்தகைய விளக்கம் புதிதாகக் கூறப்பட்ட விளக்கமாகும். மேலும், ஸலபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்திற்கும் மாற்றமானதாகும். இவ்விளக்கத்தை ஆரம்பமாகக் கூறியோர் ஜஹ்மிய்யாக்களும் முஃதஸிலாக்களுமாவர். ஆயினும், இக்கருத்து நிராகரிக்கத்தக்கதாகும்.

2.   அவ்வாறு “இஸ்தவா” என்ற சொல்லின் கருத்து ஆட்சியைக் கைப்பற்றுவதாக இருந்தல், அர்ஷிக்கும் மிகத் தாழ்ந்த இஸ்தளத்திலுள்ள 7ம் பூமிக்கும் இடையிலும் கால்நடைகள் மற்றும் அனைத்துப் படைப்புக்களுக்கு இடையிலும் வேறுபாடு இருக்காது. எனெனில், அவன் அனைத்தையும் ஆக்கிரமித்திருப்பவன், அனைத்திற்கும் சொந்தக்காரன். எனவே, அர்ஷை விசேடமாகக் குறிப்பிடுவதில் எவ்விதப் பிரயோசனமும் இருக்காது.

3.   استوى على العرش - அர்ஷின் மீது உயர்ந்து விட்டான் - என்ற வாசகம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாற்றமாக, استولى على العرش - அர்ஷை ஆக்கிரமித்தான் -என்று ஓர் இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

4.   “இஸ்தவா” உடன் தொடர்புடைய வசனங்களில் ثم என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதம் ஒழுங்கமைப்பை வேண்டி நிற்கின்றது. உண்மையில், “இஸ்தவா” என்பதற்கு ஆக்கிரமித்தல், சக்திபெறல் என்ற கருத்துக்கள் காணப்பட்டிருப்பின் வானங்கள் மற்றும் பூமிகள் அனைத்தும் படைக்கப்படும் வரை குறித்த சக்தியைப் பிற்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அர்ஷானது வானங்கள் பூமிகள் படைக்கப்படுவதற்கு 50000 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது. இப்படியிருக்க வானங்கள் பூமிகள் படைக்கப்படும் வரை எப்படி அவன் சக்தியற்றவனாகவும் ஆக்கிரமிக்காதவனாகவும் இருக்க முடியும். இது பாதில்களில் மிகப் பெறிய பாதிலாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அபூஹுனைப்