அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 22

بسم الله الرحمن الرحيم

وقوله : ما منعك أن تسجد لما خلقت بيدي - ص : 75 ، وقوله : وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء - المائدة : 64

விளக்கம்:

சங்கைமிக்க அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலாவின் கரங்கள்

அல்லாஹ்வின் கரங்கள் தொடர்பாகப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.

அல்லாஹ் கூறுகின்றான்: எனது இரு கரங்களால் நான் படைத்ததற்கு நீ சுஜூது செய்ய உன்னைத் தடுத்தது எது?

-     ஸாத்: 75

மேலும் கூறுகின்றான்: அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் கூறுகின்றார்கள். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதினால் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். மாறாக, அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் விரும்பியவாறு செலவு செய்கின்றான்.

-     அல்மாஇதா: 64

மேற்குறித்த வசனங்களில் அல்லாஹ்வுக்கு இரு கரங்கள் உள்ளன என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கரங்களாவன அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் எதார்த்தமானவையாகக் காணப்படுகின்றன. எனவே, எவர்களெல்லாம் அல்லாஹ்வின் கரங்களை மறுக்கும் முகமாக அவற்றை ஆற்றல் என்றும் அருள் என்றும் மாற்று விளக்கம் கூறுகின்றார்களோ அத்தகையவர்களுக்கு இவ்வசனங்கள் சிறந்த மறுப்பாக அமைந்துள்ளன. அப்படித்தான் எவர்கள் இவ்வியாக்கியானத்தை முன்வைக்கின்றார்களோ அவர்களுக்கு மறுப்பாகப் பின்வரும் நியாயங்களை முன்வைக்கலாம்.

•    ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தன் ஆற்றலைக் கொண்டு படைத்தான் என்றாகியிருந்தால் நாம் குறிப்பிட்ட முதல் வசனத்தில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விசேடமாக தனதிரு கரங்களால் படைத்தான் என்று கூற வேண்டிய அவசியமில்லை. மாற்றமாக, எல்லாப் படைப்பினங்களைப் போன்று வெறுமனே படைத்தான் என்று மாத்திரம் கூறியிருக்க வேண்டும்.

•    எல்லாப் படைப்பினங்களும் ஏன் இப்லீஸும் கூட அல்லாஹ்வின் ஆற்றலைக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இப்லிஸுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? ஏன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மாத்திரம் தனது கரங்களைக் கொண்டு படைத்ததாகக் கூற வேண்டும்? மேலும், இவ்விளக்கம் கூட இப்லீஸுக்கு சார்பான ஆதாரமாக அமைந்துவிடாதா?

•    உண்மையில் கை என்பதன் மூலம் ஆற்றல் நாடப்படுமாயின் அல்லாஹ்வுக்கு இரு ஆற்றல்கள் உள்ளதாகக் கூறவேண்டும். அவ்வாறு கூறுவது தவறானது என்பது அனைத்து முஸ்லிம்களினதும் ஏகோபித்த முடிவாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூஹுனைப்