அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 21

بسم الله الرحمن الرحيم

وقوله : ويبقى وجه ربك ذو الجلال والإكرام - الرحمن : 27  وقوله : كل شيء هالك إلا وجهه - القصص : 88

விளக்கம்:

அல்லாஹ்வுக்கு முகம் இருப்பதை உறுதிசெய்யும் சான்றுகள்.

அல்லாஹ் கூறுகின்றான்: மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின் சங்கையான முகமே நிலைத்திருக்கும்.

-     அர்ரஹ்மான்: 27

மேலும் கூறுகின்றான்: அவனது சங்கையான முகத்தைத் தவிர அனைத்தும் அழியக்கூடியவையே.

-     அல்கஸஸ்: 88

மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் அல்லாஹ்வுக்கு முகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது அவனின் தன்மையுடன் தொடர்புபட்ட பண்பாகும். எனவே, அவனது முகம் அவனின் அந்தஸ்திற்குத் தக்கவாறு எதர்த்த நிலையில் உள்ளது என்று நாம் விசுவாசம் கொள்ள வேண்டும். மாற்றமாக, அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கக்கூடிய முஅத்திலாக்களைப் போன்று அவனது முகம் என்பதின் மூலம் எதார்த்தத்தில் முகமாக நாடப்படமாட்டாது என்றும் அதன் மூலம் அல்லாஹ் அல்லது கூலி அல்லது வேறு விடயம் என்றெல்லாம் விளக்கம் கூறுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இப்படியான மாற்று விளக்கங்கள் தவறானவை என்பதை பல வழிகளில் நிரூபிக்கலாம்.

•    முகம் என்ற வார்த்தை அல்லாஹ்வுடன் தனியாக இணைக்கப்பட்டு வந்துள்ளது, இவ்வமைப்பை பின்வரும் துஆவிலும் காணலாம்.

மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன். மேலும், சங்கைமிக்க அவனது முகத்தைக் கொண்டும் - பாதுகாப்புத் தேடுகின்றேன் -

எனவே, இப்படித் தனியாக இணைக்கப்பட்டுவருவது இரண்டும் வெவ்வேறானவை என்ற விடயத்தை உணர்த்தி நிற்கின்றது.

•    முகம் என்ற வார்த்தை அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்தவித்தில் ஏலவே குறிப்பிட்ட அர்ரஹ்மான் அத்தியாயத்தின் 27 ஆம் வசனத்தை நோக்குகையில் உமது இரட்சகனின் முகம் என்றும் அம்முகமானது மகத்துவமும் கண்ணியமும் மிக்கது என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. மாற்றமாக, முகம் என்ற வார்த்தை அல்லாஹ்வைக்குறிப்பதாக இருந்தல் குறித்த வார்த்தை தொடர்பான வர்ணணை ذي الجلال والإكرام என்று அல்லாஹ்வைத் தொடர்புபடுத்தி இடம்பெற்றிருக்க வேண்டும். ஆயினும், இதற்கு மாற்றமாக ذو الجلال والإكرام  என்று முகத்தின் வர்ணணையாகவே இடம்பெற்றுள்ளது. எனவே, இவ்வம்சமும் முகமானது அவனது பண்பைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது என்பதைப் புரிய வைக்கின்றது.

•    உலகில் தோன்றிய எந்த ஒரு சமுகத்தினதும் மொழிவழக்கில் முகம் என்ற வார்த்தை குறித்த நபரையோ அல்லது கூலியையோ குறிப்பதாக அறியப்பட்டில்லை மாற்றமாக, முகம் என்ற வார்த்தை மொழிவழக்கில் ஒவ்வொன்றினதும் நேரில் தென்படுவதையே குறிக்கின்றது. ஏனெனில், குறித்த உறுப்பே முதலாவது முன்னோக்கப்படக்கூடியதாக உள்ளது. மேலும், இவ்வுறுப்பு எவற்றுடன் இணைக்கப்படுகின்றதோ அவற்றின் அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அது அமைந்திருக்கும் என்றே நாம் நம்ப வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்