அரேபியப் பழமொழிகளும் நற்சிந்தனைகளும்

1. ஒரு மனிதனின் ஒழுக்கம் அவனுடைய தங்கத்தைவிடச் சிறந்தது!

2. ஒழுக்கம் என்பது செல்வமாகும்! அதை உபயோகிப்பது பூரணமாகும்!

3. அறிவின் ஆபத்து மறதியாகும்! 

4. குறையைப் பற்றி சிந்திப்பது ஒரு குறையாகும்!

5. மனிதனுக்கு அவன் சொந்தமாக்கியதைத் தவிர வேறொன்றுமில்லை!

6. மனிதாபிமானத்தின் ஆபத்து வாக்கு மீறுவதாகும்!

7. பேச்சின் ஆபத்து பொய்யாகும்!

8. கோபத்தின் ஆரம்பம் பைத்தியமாகும்! அதன் கடைசி கைசேதமாகும்!

9. தூரத்தில் உள்ள எத்தனையோ விடயங்கள் அருகில் உள்ளதை விட பயனுள்ளதாகும்!

10. நலவைத் தேடுவதில் உள்ள ஓர் அம்சமே தீங்கைப் பயப்படுவதாகும்!

11. நாளைய கோழியை விட இன்றைய முட்டை சிறந்தது!

12. வெள்ளை நிறமாக இருப்பதெல்லாம் கொழுப்பல்ல! கறுப்பு நிறமாக இருப்பதெல்லாம் பேரீத்தம் பழமுமல்ல!

13. நல்ல செயலைப் போல் ஒரு வியாபாரம் இல்லை!

14. நீ தீங்கை விடு! அது உன்னை விடும்!

15. மடையனுக்கு விடையளிக்காமல் இருப்பதே விடையாகும்!

16. சீராகாத ஒன்றை விடுவது மிகச் சீரானதாகும்!

17. புத்தி பூர்த்தியாகினால் பேச்சு குறைந்து விடும்!

18. பாவத்திலிருந்து தவ்பா செய்பவன் பாவம் இல்லாதவனைப் போலாவான்!

19. மனிதாபிமானத்தின் கிரீடம் பணிவாகும்!

20. யார் முயற்சி செய்கிறாரோ அவர் பெற்றுக் கொள்வார்!

21. ஒருவனுடைய சபைத் தோழன் அவனைப் போலவே!

22. பைத்தியம் என்பது பல கலைகளாகும்!

23. இரும்பை இரும்பால் வெல்லப்படும்!

24. பணிவைப் போல் எந்த அந்தஸ்தும் இல்லை!

25. எவருடைய எண்ணம் சீராகியதோ அவருடைய வாழ்க்கை சீராகிவிடும்!

26. மனிதர்களுக்கு யார் பணிவிடை செய்கிறாரோ அவர் பணிவிடை செய்யப்படுவார்!

27. ஒவ்வொரு பேச்சுக்கும் விடை உண்டு!

28. உன் மனோஇச்சைக்கு நீ மாற்றம் செய் நீ நேர்வழி பெறுவாய்!

29. யாருக்கும் பயமில்லாதவனை யாரும் பயப்படமாட்டார்கள்!

30. யார் மோசடி செய்தாரோ அவர் இழிவடைவார்!

31. தோழர்களில் சிறந்தவர் உனக்கு நல்லதை அறிவித்தவர்!

32. செல்வத்தில் சிறந்தது போதும் என்ற மனமாகும்!

33. செல்வத்தில் சிறந்தது பயனளித்ததாகும்!

34. வெங்காயத்திற்கும் அதனுடைய தோலுக்கும் மத்தியில் நீ நுழையாதே!

35. நல்லதை அறிவித்துக் கொடுப்பவன் அதைச் செய்பவனைப் போலாவான்!

36. ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு!

37. நீ வழிப்படுவதைப் போல் வழிப்படப்படுவாய்!

38. யார் ஓநாயாக இருக்கவில்லையோ அவரை பல ஓநாய்கள் சாப்பிட்டு விடும்!

39. ஒவ்வொரு அருட்கொடையுடனும் அதன் அழிவையும் நீ ஞாபகப்படுத்திக்கொள்!

40. நேற்று என்பது நேற்றைய விடயத்தோடு சென்றுவிட்டது!

41. மேகமில்லாமல் மழை எதிர்பார்க்கப்படுமா?!

42. உனக்கு கீழுள்ளவர்களுக்கு நீ இரக்கம் காட்டு! உனக்கு மேழுள்ளவர்கள் உன்மீது இரக்கம் காட்டுவார்கள்!

43. நீ ஈரமானவனாக இருக்காதே! பிழியப்படுவாய்! காய்ந்தவனாகவும் இருக்காதே! உடைக்கப்படுவாய்!

44. ஒவ்வொரு காலத்திற்கும் மனிதர்கள் உள்ளார்கள்!

45. சிங்கத்திடமிருந்து நீ தப்பி விட்டால் அதை வேட்டையாட ஆசைப்படாதே!

46. கஷ்டமான நேரத்தில் குரோதங்கள் சென்றுவிடும்!

47. கஷ்டமான நேரத்தில் சகோதரர்கள் அறிந்து கொள்ளப்படுவார்கள்!

48. பொறுமை தந்திரமில்லாதவர்களின் தந்திரமாகும்!

49. வீட்டுச் சொந்தக்காரனே அதில் உள்ளதைப்பற்றி நன்கறிந்தவன்!

50. நாய் குரைப்பது மேகத்தைப் பாதிக்காது!

51. யார் தன் கோபத்திற்கு அடிபணிகிறாரோ அவர் தன் ஒழுக்கத்தைத் தொலைத்துவிட்டார்!

52. புத்திக்காரனின் சந்தேகம் மடையனின் உறுதியைவிட சிறந்ததாகும்!

53. பெண்ணின் புத்தி அவளுடைய அழகிலாகும்! ஆணுடைய அழகு அவனுடைய புத்தியிலாகும்!

54. ஒரு தீங்குக்கு உனக்கு உதவி செய்பவன் உனக்கு அநியாயம் செய்துவிட்டான்!

55. யார் இல்லாமல் சென்றுவிடுகிறாரோ அவருடைய பங்கும் இல்லாமல் சென்றுவிடும்!

56. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு பேச்சு உண்டு!

57. தடி வளைந்த நிலையில் நிழல் நேராக இருக்குமா?!

58. பொய் என்பது நோயாகும்! உண்மை என்பது நிவாரணமாகும்!

59. நாய் என்பது அதற்கு நீ தங்கத்தை அணிவித்தாலும் அது நாய்தான்!

60. யாருடைய இரகசியம் நோய்வாய்ப்படுகிறதோ அவருடைய பரகசியம் செத்துவிடும்!

61. மனோஇச்சை குருட்டின் தோழனாவான்!

62. கெட்ட நண்பனை விட தனிமை சிறந்தது!

63. உனக்கு நலவு செய்தவனுடைய தீங்கைப் பயந்துகொள்!

64. ஓநாய் ஓநாயைத் தவிர வேறொன்ரையும் ஈன்றெடுக்காது!

65. ஒரு நாள் எங்களுக்கானது! மற்றொரு நாள் எங்களுக்கு எதிரானது!

66. இரு திருடர்கள் வாக்குவாதப்பட்டால் திருடப்பட்ட பொருள் வெளியாகிவிடும்!

67. குரங்கு தன் தாயின் பார்வையில் மானாகும்!

68. பரீட்சையின் போதே ஒரு மனிதன் கண்ணியப்படுத்தப்படுவான் அல்லது இழிவுபடுத்தப்படுவான்!

69. மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

70. கொடையின் ஆபத்து வீண்விரயமாகும்!

71. யார் ஒன்றை விரும்புகிறாரோ அவர் அதை அதிகமாகக் கூறுவார்!

72. செய்தி என்பது நேரடியாகப் பார்ப்பது போல் அல்ல!

by: ASKI IBNU SHAMSIL ABDEEN