அரபா நாளின் சிறப்புகள்

இரவுகளும் பகல்களும் மாதங்களும் வருடங்களும் விரைவாகச் செல்கின்றன. விரைவாக மறைகின்றன. இப்படிப்பட்ட காலங்களில் அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு நன்மையைத்தேடித் தரக்கூடிய பல காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவைகளில் சில காலங்கள் நன்மைகளை அதிகரிக்கின்றன. இன்னும், சில காலங்கள் பாவங்களை அழித்துவிடுகின்றன.

இவ்வாறான காலங்களில் சிறந்த ஒரு நாள் தான் அரபா நாளாகும். அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் நாம் அலசி ஆராயும் போது அரபா நாளுடைய சிறப்பை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில் அரபா நாளின் சிறப்பு குறித்து வரக்கூடிய விடயங்களை ஆதாரத்துடன் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

1. அரபா நாள் அல்லாஹ்வால் சங்கைப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் ஒரு மாதத்துடைய நாளாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: வானங்கள், பூமியைப் படைத்த நாளிலே அல்லாஹ்வுடைய புத்தகத்திலே மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும். அவைகளில் 4 கண்ணியமானதாகும். (சூரதுத்தவ்பா:39)

கண்ணியப்படுத்தப்பட்ட 4 மாதங்களும் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகியவைகளாகும். அரபாநாள் கண்ணியப்படுத்தப்பட்ட துல்ஹஜ் மாதத்துடைய ஒருநாளாக இருப்பது அதனுடைய கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது.

2. அரபா நாள் ஹஜ்ஜுடைய நாட்களில் ஒரு நாளாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ஹஜ் என்பது அறியப்பட்ட ஒரு சில மாதங்களாகும். (சூரதுல்பகறா:197)

ஹஜ்ஜுடைய மாதங்கள்: ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவைகளாகும். ஆகவே, அரபா நாள் ஹஜ்ஜுடைய மாதங்களில் ஒன்றான துல்ஹஜ்ஜின் ஒருநாளாக இருப்பது அதற்கு கண்ணியத்தை மெருகூட்டும்.

3. அரபா நாள் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே புகழ்ந்து குறிப்பிட்ட நாட்களிலே ஒரு நாளாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: தங்களுக்குரிய (இம்மை, மறுமை) பலன்களை அவர்கள் அடைவதற்காகவும், அல்லாஹ்வின் பெயரை அவன் அவர்களுக்குக் கொடுத்த (குர்பானிப் பிராணிகளான ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) நாற்கால் பிராணிகள் மீது குறிப்பிட்ட நாட்களில் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) ஆகவே, அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள். கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள். (சூரதுல்ஹஜ்:28) இந்த வசனத்தில் குறிப்பிட்ட நாட்கள் மூலம் நாடப்பட்டது துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களாகும் என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்.

4. அரபா நாள் அல்லாஹ் சத்தியம் செய்த 10 இரவுகளில் ஒருநாளாகும்.

அல்லாஹ் ஒரு விடயத்தின் மீது சத்தியம் செய்தால் அது மிக மகத்தானது என்றும் அதற்கு மிகுந்த சிறப்பு உள்ளது என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விடியற்காலையின் மீதுசத்தியமாக. பத்து இரவுகளின் மீது சத்தியமாக. (சூரதுல்பஜ்ர்:1, 2) இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக அவை துல்ஹஜ் மாதத்தின் பத்து இரவுகளாகும். இமாம் இப்னுகஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதுவே சரியான கருத்தாகும் என்று கூறுகின்றார்கள்.

5. அரபா நாள் அமல் செய்வதற்கு மிகச்சிறந்த நாட்களாகிய துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களில் ஒன்றாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: துல்ஹஜ் 10 நாளில் செய்யும் அமலைவிட அல்லாஹ்விடத்தில் மிகத்தூய்மையான கூலியால் மிக மகத்தான எந்த ஒரு அமலும் இல்லை. அப்பொழுது அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையும்விடவா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதையும்விடத்தான். ஆனால், தனது ஆத்மாவுடனும் பணத்துடனும் போர்புரியச் சென்று அவற்றில் எந்த ஒன்றுடனும் திரும்பிவராதவரைத்தவிர. (அத்தாரமீ)

6. அரபா நாளில் அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தைப் பூர்த்தியாக்கினான். இன்னும், தன்னுடைய அருட்கொடையைப் பூரணப்படுத்தினான்.

யூதர்களில் ஒருவன் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் பின்வறுமாறு கூறினான்: முஃமின்களின் தலைவரே! உங்களுடைய வேதத்தில் நீங்கள் ஓதக்கூடிய ஒரு வசனமுண்டு. யஹூதிகளாகிய எங்கள் மீது (இவ்வசனம்) இறங்கியிருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்திருப்போம். அப்போது உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அது எந்த வசனம்? எனக்கேட்டார்கள். அப்பொழுது அந்த யஹூதி அந்தவசனம்: இன்றையதினம் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும், என்னுடைய அருட்கொடையை உங்கள் மீது பூர்த்தியாக்கிவிட்டேன். உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டுவிட்டேன். (அல்மாஇதா:5) என்ற வசனமாகும் என பதிலளித்தான். அதற்கு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: வெள்ளிக்கிழமையன்று அரபாவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும் நிலையில் அவ்வசனம் அவர் மீது இறங்கிய அந்தநாளை திட்டமாகநாம் அறிவோம்.

7. அரபா நாளில் நோன்பு நோற்பதின் சிறப்பு

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் 9 நாட்களில் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஹுனைதா பின் ஹாலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது மனைவி கூறியதாகக் கூறுகின்றார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஒருசில மனைவிமார்கள் கூறினார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் (முதல்) 9 நாட்களிலும் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். (அபூதாவூத்)

அரபாநாளில் நோன்பு நோற்பதற்கும் தனிச்சிறப்பு உண்டு. அரபாநாளின் நோன்பு பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வினவப்பட்டபோது அவர்கள் பின்வறுமாறு கூறினார்கள். அரபா நோன்பு முன்சென்ற வருடத்தினதும் பின்வர இருக்கின்ற வருடத்தினதும் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும். (முஸ்லிம்)

ஆனால், ஹாஜிமார்களுக்கு நோன்பு நோற்க முடியாது. ஏனென்றால், அரபா நாள் அவர்களுக்கு பெருநாள் தினமாகும்.

8. அரபாவில் தங்கியிருப்பவர்களுக்கு அது பெருநாள் தினமாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: அரபாநாள், அறுத்துப்பலியிடும் நாள், மினாவுடைய நாட்கள் ஆகியன இஸ்லாத்துக்கு சொந்தக்காரர்களாகிய எங்களுக்கு பெருநாள் தினமாகும். (அபூதாவூத்) அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை ஸஹீஹான அறிவிப்பாகக் கூறுகின்றார்கள்.

9. அரபாநாளின் துஆ மகத்துவமிக்கது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: துஆக்களில் சிறந்தது அரபா நாளுடைய துஆவாகும். இந்த ஹதீஸை அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா என்ற நூலிலே ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் இப்னு அப்தில்பர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த ஹதீஸிலே ஏனைய நாட்களைவிட அரபா நாளுக்கு சிறப்பு உண்டு என்பதற்கு ஆதாரம் உண்டு எனக் கூறுகின்றார்கள்.

10. அரபா நாள் ஏனைய நாட்களைவிட அல்லாஹுத்தஆலா நரகத்திலிருந்து அதிகமாக மனிதர்களை விடுதலை செய்யும் நாளாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: அரபா நாளைவிட அதிகமாக அல்லாஹ் ஒர் அடியானை நரகத்திலிருந்து விடுதலை செய்யும் நாள் வேறொன்றுமில்லை. (முஸ்லிம்)

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! நாம் மேலே குறிப்பிட்ட அரபா நாளுடைய சிறப்புக்களைக் கருத்திற் கொண்டு அந்நாளை சிறந்த முறையில் பயன்படுத்திட எல்லாம் வல்ல நாயன் எமக்கு அருள் பாளிப்பானாக!

الحمد لله رب العالمين