ஸூரதுன் நூர் விளக்கவுரை – 7

بسم الله الرحمن الرحيم

ளிஆன் - சாபமிடுதல் - பற்றிய சட்டங்கள்

والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنت الله عليه إن كان من الكاذبين ويدرؤا عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم 6-10

பொருள்:

இன்னும், தங்கள் மனைவியரை விபச்சாரக் குற்றம் சாட்டி அவதூறு கூறி, இன்னும் தங்களையன்றி அவர்களுக்கு வேறு சாட்சிகள் இருக்கவில்லையே அத்தகையோர் அப்போது அவதூறு கூறிய அவர்களில் ஒருவரின் சாட்சியானது, நிச்சயமாக தான் உண்மையாளர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வைக் கொண்டு நான்கு முறை சத்தியம் செய்து சாட்சி கூறுவதாகும். இன்னும், ஐந்தாவது முறையாக இவ்விடயத்தில் தான் பொய் சொல்பவர்களில் உள்ளவனாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாவதாக என்றும் அவன் கூற வேண்டும். மேலும், அவனுடைய     மனைவி தன் மீது சுமத்தப்பட்ட அவதூறை மறுத்து நிச்சயமாக அவன் பெய்யர்களில் உள்ளவன் என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து நான்கு முறை அவள் சாட்சி கூறுவது அவளை விட்டும் விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனையை நீக்கி விடும். இன்னும், ஐந்தாவது முறையாக அவன் இவ்விடயத்தில் உண்மையாளர்களில் உள்ளவனாக இருந்தால் நிச்சயமாக தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்றும் அவள் கூறுவாள். அல்லாஹ்வுடைய பேரருளும் அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்திருப்பின் உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் மிகுதியாக தவ்பாக்களை ஏற்று பாவமன்னிப்பளிப்பவன். தீர்க்கமான அறிவுடையவன்.

இவ்வசனம் இறங்கியமைக்கான காரணம்

சூரதுன் நூரின் நான்காம் வசனம் இறங்கியதன் பின்னர் நபியவர்கள் அன்ஸாரித் தோழர்களுடன் ஒரு சபையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது:

ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு : அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் இது விடயத்தில் இதை மாத்திரம் தானா கூறியுள்ளான் ?!

நபியவர்கள்: அன்ஸாரித் தோழர்களே! உங்களுடைய தலைவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டீர்களா?

அன்ஸாரிகள்: அல்லாஹ்வின் தூதரே! அவரைத் திட்டாதீர்கள். அவர் ஒரு ரோஷமுள்ள மனிதர். அல்லாஹ் மீது ஆணையாக அவர் கன்னிப் பெண்களைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்ததில்லை. அவர் ஒரு பெண்ணைத் தலாக் சென்னால், அவரின் கடும் ரோஷத்தை அஞ்சி எங்களில் எவரும் அப்பெண்ணை மணக்க முன்வரமாட்டார்.

ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு: அல்லாஹ் மீது சத்தியமாக அல்;லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இச்சட்டம் உண்மையானது என்றும் இது அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டது என்றும் நான் நன்கறிவேன். ஆயினும், என் மனைவி ஒருவருடன் உறவு கொண்டிருக்கும் நிலையில் நான் அதைக் கண்ணுற்று, அதனைத் தடுக்காமல் அவ்விடத்தைவிட்டும் நகர்ந்து சென்று நான்கு நபர்களை சாட்சியாளர்களாகத் தேடிக் கொண்டு வருவதற்குள் அம்மனிதர் தன் தேவைகளை சுதந்திரமாக நிறை வேற்றிவிட்டுச் சென்றுவிடுவார். அவ்வேளையிலும் இச்சட்டத்தை ஒருவர் கடை பிடிக்க வேண்டிய தேவையிலுள்ளானே என்பதை எண்ணியே வியப்படைகின்றேன்.

அப்போது அச்சபைக்கு ஹிலால் இப்னு உமையா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகை தருகிறார். அவர் தன் மனைவியை இன்னொருவருடன் உறவு கொண்டிருக்கும் நிலையில் பார்த்துவிட்டு பதட்டத்துடன் காணப்படுகிறார்.

ஹிலால் ரழியல்லாஹு அன்ஹு : அல்லாஹ்வின் தூதரே! இரவு நேரம் நான் வீடு திரும்பியபோது என் மனைவியுடன் ஒருவன் உறவு கொண்டிருப்பதை என் கண்களால் பார்த்தேன், காதுகளாலும் செவிமடுத்தேன்.

இதனைச் செவிமடுத்த நபியவர்கள் மிக வெறுப்படைந்தார்கள். உடனே, அன்ஸாரித் தோழர்கள் ஹிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கினார்கள்.

அன்ஸாரிகள்: நாங்கள் இப்போது தான் ஸஃத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு கூறியதையிட்டு அங்களாய்ப்புக்குள்ளாய் இருக்கின்றோம். தற்போது நபியவர்கள் உமது சாட்சியை மறுத்து உமக்குத் தண்டனை வழங்கப் போகிறார்கள்.

ஹிலால் ரழியல்லாஹு அன்ஹு : அல்லாஹ் மீது சத்தியமாக, நிச்சயமாக அல்லாஹ் இது விடயத்தில் நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என ஆசை வைக்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நான் கொண்டுவந்த இவ்விடயம் உங்கள் மனதிற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் எனக் கருதுகிறேன். நான் உண்மையாளன் என்பதை அல்லாஹ்  நன்கறிவான்.

நபியவர்கள் இது விடயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்பார்த்து தண்டனை வழங்கத் தயாராக இருக்கும் வேளையில் இவ்வத்தியாயத்தின் 6 முதல் 10 வரையான வசனங்கள் இறக்கியருளப்பட்டன. அப்போது:

நபியவர்கள் புன்னகைத்தவர்களாக : ஹிலாலே! உனக்கு நன்மாராயம் உண்டாகட்டும். அல்லாஹ் உமக்கு இப்பிரச்சினையில் இருந்து நிவர்த்தி பெறுவதற்கான தீர்வை வழங்கியுள்ளான்.

ஹிலால் ரழியல்லாஹு அன்ஹு : திடனாக நான் ஒரு தீர்வை என் இரச்சகனிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன்.

பிறகு நபியவர்கள் ஹிலால் ரழியல்லாஹு அன்ஹுவின் மனைவியை வரவழைத்து இவ்வசனத்தில் கூறப்பட்ட பிரகாரம் ளிஆன் எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.

   அஹ்மத் 1: 238, அபூதாவுத் 2: 688

மேலும், இவ்வசனம் இறக்கப்பட்டது தொடர்பாக உவைமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் தொடர்புபடுத்தி ஒரு சம்பவம் புகாரி, முஸ்லிமிலும் அபூபக்கர், உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுடன் தொடர்புபடுத்தி ஒரு சம்பவம் அல் பஸ்ஸார் எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளன. சரியான காரணத்தை அறிய முற்பட்ட அறிஞர்களின் கூற்றுக்களை நோக்குமிடத்து பின்வரும் அம்சங்களை இனங்காட்ட முடியும்.

இவ்வசனமானது முதன் முறையாக ஹிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய விவகாரத்தில் இறங்கியிருக்க முடியும். அதனையடுத்து உவைமிர் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அபூபக்கர், உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் சம்பவங்கள் இடம் பெற்றிருக்கலாம். எனவே, இச்சம்பவங்கள் அனைத்தும் ஒரே கருப்பொருளை மையமாக வைத்து குறுகிய காலத்தில் இடம் பெற்றிருப்பதால் இவ்வசனம் அனைவருக்கும் பொருந்தக் கூடியவிதத்தில் அமைந்துள்ளது என அறிஞர்கள் கருதுகின்றார்கள்.        இப்படி ஒரு வசனம் இறங்கியது தொடர்பில் பல சம்பவங்கள் இடம் பெறுவதில் தவறேதும் கிடையாது என்கிறார் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ். இக்கருத்தினை இமாம்களான நவவி, இப்னுஸ் ஸப்பாஉ ரஹிமஹுமல்லாஹ் போன்றோர்கள்        ஆதரித்துள்ளனர்.

சுருக்கம்: தப்ஸீரு வபயானு முப்ரதாதில் குர்ஆன்: 343 - 347

இன்ஷா அல்லாஹ் தொடரும் ....

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK