ஸூரதுன் நூர் விளக்கவுரை – 6

அவதூறு கூறியவருக்கு ஏன் தண்டனை வழங்கப்பட வேண்டும்?

1 சமூகத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்கு
2 தனிமனிதனின் கௌரவத்தைப் பேணுவதற்கு
3 தீய நாவுகளுக்கு முத்திரையிடுவதற்கு
4 விசுவாசிகளுக்கு மத்தியில் தீய கருத்துக்கள் பரவாமல் தடுப்பதற்கு

அவதூறுக்குரிய தண்டனை வாஜிபாவதற்கான நிபந்தனைகள்

இத்தண்டனைக்கான நிபந்தனைகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1 அவதூறு கூறுபவருடன் தொடர்புபட்ட நிபந்தனைகள்.
2 அவதூறு கூறப்படுபவருடன் தொடர்புபட்ட நிபந்தனைகள்.

அவதூறு கூறுபவருடன் தொடர்புபட்ட நிபந்தனைகள்

1 பருவ வயதை அடைந்தவராக இருத்தல்.
2 புத்தி சுயாதீனம் உள்ளவராக இருத்தல்.
3 தந்தை, பாட்டன், தாய், பாட்டி போன்ற அவதூறு கூறப்பட்டவருக்கு அடிப்படையானவர்களாக இருக்கக் கூடாது.
4 சுயவிருப்பத்தில் கூறியிருக்க வேண்டும்.
5 அவதூறு கூறுவது ஹராம் என்பதை அறிந்தவராக இருத்தல்.

அவதூறு கூறப்பட்டவருடன் தொடர்புபட்ட நிபந்தனைகள்

1 முஸ்லிமாக இருத்தல்.
2 புத்தி சுயாதீனமுள்ளவராக இருத்தல்.
3 பருவ வயதை அடைந்தவராகவும் உடலுறவு கொள்ளத் தகுதியானவராகவும் இருத்தல்.
4 வெளிப்படையில் விபச்சாரத்தை விட்டும் பேணுதலுள்ளவராக இருத்தல்.
5 சுதந்திரமானவராக இருத்தல்.
நபியவர்கள் கூறினார்கள்:
யார் தனது அடிமைக்கு அவதூறு கூறுகிறாரோ, அதற்கான தண்டனையை அல்லாஹ் மறுமை நாளில் அவருக்கு வழங்குவான். (முஸ்லிம்: 1660)

எனவே, மேற்கூறப்பட்ட தரவுகளில் இருந்து அவதூறு கூறப்பட்டவரானவர் பத்தினித்தனமுள்ளவராக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அவதூறுக்குரிய தண்டனை நிறைவேற்றப்படுவதிற்கான நிபந்தனைகள்

1 அவதூறு கூறப்பட்டவர், அவதூறு கூறியவருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று விண்ணப்பிக்க வேண்டும். மாற்றமாக, அவதூறு கூறப்பட்டவர் மௌனமாக இருந்தால் அல்லது மன்னித்து விட்டால் அவதூறு கூறியவருக்குரிய தண்டனை நிறைவேற்றப்படமாட்டாது. ஆயினும், அவதூறு கூறியவர் ஹராமான அச்செயலில் ஈடுபட்டதன் காரணமாக நீதிபதியினால் எச்சரிக்கப்படுவார்.

2 அவதூறு கூறியவர் சாட்சிகள் மூலம் தன் கூற்றை நிறுவத்தவறியிருக்க வேண்டும்.

3 அவதூறு கூறப்பட்டவர் அவதூறு கூறியவரின் கூற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

4 அவதூறு கூறியவரும் கூறப்பட்டவரும் கணவன் மனைவியாக இருக்கக் கூடாது. ஏனெனில், அவர்களுக்குப் பிரத்தியோகமான ஒரு சட்டம் உண்டு. இன்ஷா அல்லாஹ் அதனை அடுத்து விரிவாகக் காண்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK