ஸூரதுன் நூர் விளக்கவுரை – 4

தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் வேளையில் இரக்கம் காட்டக் கூடாது

ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الاخر2

பொருள்: நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்(தில் விதிக்கப்பட்ட சட்டத்தை அமுல் செய்வ)தில் அவ்விருவருக்காக உங்களை இரக்கம் பிடித்துவிட வேண்டாம். (அந்நூர்: 02)

இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'தண்டனை நிறைவேற்றும் பொறுப்பு மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டால் அதனைத் தாமதிக்காது நிறைவேற்றுவது அவரின் கடமையாகும்.'

குறிப்பு: இக்கருத்தினையே இமாம்களான ஸயீத் இப்னு ஜூபைர் (ரஹ்), அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர். (அல்பகவி 3:321)

இக்கருத்தைப் பின்வரும் நபிமொழியும் உறுதி செய்கின்றது:
'நீங்கள் உங்களுக்கு மத்தியில் தண்டனை நிறைவேற்றுவதில் கனிவாக நடந்து கொள்ளுங்கள். ஆயினும், (குறித்த அக்குற்றத்திற்குத்) தண்டனை வழங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டால்; அத்தண்டனை (எவ்வித பாரபட்சமுமின்றி) நிறைவேற்றப்படும்.' (அபூ தாவூத் 4:540)

எனவே, இங்கு 'இரக்கம் காட்ட வேண்டாம்' என்பது பொறுப்புதாரிகள் தண்டனை வழங்கும் விடயத்தில் நெகிழ்ந்து போவதைக் குறிக்கின்றது.

அடுத்து, 'நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால்...' என்ற வார்த்தைக்கு விளக்கமாவது,

இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் விபச்சாரிகளுக்குத் தண்டனை வழங்கும் போது கடுமையாக அடியுங்கள். ஆயினும், அவ்வாறு அடிப்பதின் மூலம் அவ்விபச்சாரியும் அவரைப் போன்று இக்குற்றத்தில் ஈடுபடக் கூடியவர்களும் இத்தண்டனையை கேட்டுப் பெற்றுக் கொள்வதை விட்டும் பின்வாங்கக் கூடிய விதத்தில் மிகப் பயங்கரமான காயங்களைத் தோற்றுவிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இவ்வழிமுறையையே நபித்தோழர்களும் பிராணிகளை அறுக்கும் போது கடைபிடித்துள்ளார்கள். ஒரு நபித்தோழர் தான் ஆடு அறுக்கும் போது அதன் மீது இரக்கம் காட்டுவதாக நபியவர்களிடத்தில் முறையிட்ட போது உமக்கு அதற்கும் கூலியுண்டு என பதிலளித்தார்கள்.' (அஹ்மத் 5:34, அல் மிஸ்பாஹூல் முனீர்: 926)

மக்களுக்கு மத்தியில் தண்டனை நிறைவேற்றல்

وليشهد عذابهما طائفة من المؤمنين 2

பொருள்: இன்னும் அவ்விருவரின் வேதனையை விசுவாசிகளில் ஒரு சாரார் (நேரில் சமூகமளித்துப்) பார்க்கவும். (அந்நூர்: 02)

இவ்வாறு பகிரங்கமாகத் தண்டனை வழங்குவதால் பின்வரும் அனுகூலங்களை அடைந்து கொள்ள முடியும்.

1. விபச்சாரத்தின் தண்டனையைத் தெரியப்படுத்த முடியும்.
2. பார்வையாளர்கள் படிப்பினை பெற முடியும்.
3. பார்வையாளர்கள் இத்தண்டனைக்கு சாட்சியாளர்களாக இருக்க முடியும்.
4. விபச்சாரம் என்பது ஓர் இழி செயல் என்பதை உணரச் செய்ய முடியும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK