ஸூரதுன் நூர் விளக்கவுரை – 3

விபச்சாரம் செய்தவருக்குரிய தண்டனை

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِئَةَ جَلْدَةٍ 2

பொருள்: (திருமணமாகாத) விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். (அந்நூர்: 02)

விபச்சாரம் தொடர்பான விரிவான தகவல்கள்

விபச்சாரம் என்றால் என்ன?

ஒருவர் சந்தேகத்திற்கிடமின்றி தனது மனைவியல்லாத வேறொரு பெண்ணுடன் எவ்வித உரிமையும் இல்லாத நிலையில் உறவு கொள்வது விபச்சாரம் என்று சொல்லப்படும்.

விபச்சாரம் செய்வதின் சட்டம்

விபச்சாரம் செய்வது ஹராமாகும். அது பெரும் பாவங்களில் ஒன்றாகவும் கருதப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான்: '(விசுவாசங் கொண்டோரே) நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால் மிகக்கெட்டது.' (அல் இஸ்ரா: 32)

நபியவர்கள் கூறினார்கள்: 'உனது அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது பாவங்களிலே மிகக் கொடிய பாவமாகும்.' (புகாரி : 6861, முஸ்லிம் : 86)

விபச்சாரத்தின் விபரீதங்கள்

1. ஒழுங்கற்ற குடும்ப உறவுகள் தோற்றுவிக்கப்படும்.
2. அனந்தரச் சொத்துப்பங்கீட்டலின் போது உரிமைகள் மறுக்கப்படும்.
3. பிரச்சினைகள், நோய்கள் மற்றும் அல்லாஹ்வின் தண்டனைகள் போன்றவற்றால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளுக்குக் காரணமாக அமையும்.
4. ஒழுக்கம், நற்பண்பு போன்றவை பயிற்றுவிக்கப்பட முடியாத சந்தர்ப்பங்கள் உண்டாகும்.
5. உரிமைகள் மதிக்கப்படாத தலம்பலான குடும்ப அமைப்பு ஏற்படும்.

விபச்சாரத்திற்குரிய தண்டனை

விபச்சாரிகளை இரு வகையினராகப் பிரிக்கலாம்:

1.திருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்.
2.திருமணமாகாது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள்.

திருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண உறவின் மூலம் தன்மனைவியுடன் உறவு கொண்டவர்களாகவும் பருவ வயதை அடைந்தவர்களாகவும் புத்தி சுயாதீனம் உள்ளவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருப்பார்கள்.

தண்டனை:

மரணிக்கும் வரை கல்லெரிய வேண்டும்;. (இச்சட்டம் ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது)

ஆதாரங்கள்:

1. அல்குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்ட நிலையான சட்டத்தையுடைய வசனம்:
'முதுமைப் பருவத்தை அடைந்த ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்கள் இருவருக்கும் கல்லெரிந்து தண்டனை வழங்குங்கள்.'

2. ஒரு சந்தர்ப்பத்தில் உமர் (ரழி) அவர்கள் பின்வருமாறு தனது உரையில் கூறினார்கள்:
'நிச்சயமாக அல்லாஹ் முஹம்மதை உண்மையான மார்க்கத்தைக் கொண்டே அனுப்பியுள்ளான். மேலும், அவருக்கு அல்குர்ஆனை இறக்கியுமுள்ளான். அவ்வாறு இறக்கப்பட்டவைகளுள் (விபச்சாரிகளுக்கு) கல்லெரிதல் தொடர்பான வசனமும் ஒன்றாகும். நாங்கள் அதனை ஓதிவந்தோம். மேலும், அதனை நன்கு புரிந்து மனனமிடக் கூடியவர்களாகவும் இருந்தோம். நபியவர்கள் கல்லெரியக் கூடியவர்களாக இருந்தார்கள். நாங்களும் அவருக்குப் பிறகு கல்லெரிபவர்களாக இருந்தோம். ஆயினும், உங்களுக்கு மத்தியில் ஒரு காலம் வரும். அக்காலத்தில் வாழக் கூடியவர்கள் அல்குர்ஆனில் கல்லெரிதல் தொடர்பாக எந்த வசனம்; இடம் பெறவில்லை எனக் கூறுவதைப் பயப்படுகிறேன். மேலும், அல்லாஹ் விதியாக்கிய ஒரு கடமையை விடுவதின் மூலம் கெட்டவர்களில் ஆகிவிடுவதையும் பயப்படுகிறேன். நிச்சயமாக விபச்சாரம் செய்பவருக்கு கல்லெரிதல் தண்டனை அல்குர்ஆனில் உறுதி செய்யப்பட்ட சட்டமாகும். ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் அல்லது கர்ப்பம் மூலம் தெளிவானால் அல்லது இருவரும் தம் குற்றத்தை ஒப்புக்கொண்டால் இச்சட்டம் அவர்கள் மீது விதியாகின்றது.' புகாரி(3872), முஸ்லிம்(1691)

3. அபுஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
'நபியவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் வேளையில் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விபச்சரம் செய்துவிட்டேன் எனக் கூற நபியவர்கள்; தனது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவ்வாறு அம்மனிதர் தனக்குத் தானே நான்கு முறைகள் சாட்சி கூறிக் கொள்ள, நபியவர்கள் அவரை அழைத்து உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? என வினவ, அவர் இல்லை என பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீர் திருமணமானவரா? எனக் கேட்க, ஆம் என பதிலளித்தார். அப்போது நபியவர்கள் ஸகாபாக்களை நோக்கி இவரை கூட்டிக் கொண்டு போய் கல்லெரியுங்கள் எனப் பணித்தார்கள்.' புகாரி: (3872) முஸ்லிம்: (1691)

திருமணமாகாது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இவர்கள் திருமணமாகி விபச்சாரம் செய்தவர்களுக்குரிய நிபந்தனைகளுக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள்.

தண்டனை:

 

1. நூறு கசையடிகள் அடித்தல்.

2. ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்படல். ஆயினும் பெண்கள் நாடு கடத்தப்பட மஹ்ரம் அவசியமாகும். அந்நூர்: 2, முஸ்லிம்: (1690)

 

அடிமைகள் விபச்சாரம் செய்தால்....?

தண்டனை:

ஐம்பது கசையடிகள் அடித்தல். (திருமணமானவர், திருமணமாகாதவர், ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது)

ஆதாரம்:

அல்லாஹ் கூறுகிறான். '(அடிமைப் பெண்களான) அவர்கள் விபச்சாரம் செய்து விட்டால் (அடிமையல்லாத) திருமணமான உரிமைப் பெண்களுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அவர்கள் மீது உண்டு.' (அந்நிஸா: 25)

எப்போது தண்டனை வழங்குவது?

விபச்சாரம் உறுதியான பிறகு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு உறுதி செய்வதற்கு இரு வழிகள் உள்ளன.

1. தாமாக ஒப்புக் கொள்ளல்

ஆதாரம்:

மாயிஸ் (ரழி) அவர்களின் சம்பவத்தைக் குறிப்பிடலாம். (திர்மிதி: 1428, இப்னு மாஜா: 2554)

2. நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படுதல்

ஆதாரம்:

அல்லாஹ் கூறுகிறான்: 'மேலும் உங்கள் பெண்களில் மானக்கேடான செயலைச் செய்தோர் அவரின் மீது (அதை நிரூபிக்க) உங்களிலிருந்து நான்கு நபரை சாட்சிகளாகக் கொண்டுவாருங்கள்.' (அந்நிஸா: 15)

சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றால்.

1. சாட்சி கூறுபவர்கள் நான்கு நபர்களாக இருக்க வேண்டும்.

2. பருவ வயதை அடைந்தவர்களாகவும் புத்தி சுயாதீனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

3. நீதமான ஆண்களாக இருக்க வேண்டும்.

ஆதாரம்:

அல்லாஹ் கூறுகிறான்: 'உங்களிடம் பாவி ஒருவன் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதிருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதனைத் தீர விசாரணை செய்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.' (அல்ஹூஜ்ராத்: 6)

4. நால்வரும் ஒரே அமைப்பில் கண்களால் பார்த்திருக்க வேண்டும்.

5. சாட்சியாளர்கள் முஸ்லீம்களாக இருக்க வேண்டும்.

6. நால்வரும் ஒரே சபையில் சாட்சி கூற வேண்டும்.

குறிப்பு:

இந்நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று அற்றுப் போகும் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவர்கள் மீதும் அவதூறுக்குரிய தண்டனை நிறைவேற்றப்படும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்