ஸூரதுன் நூர் விளக்கவுரை – 20

بسم الله الرحمن الرحيم

இது தொடர்பான விரிவான தகவல்களை அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 'ஜில்பாபுல் மர்அதில் முஸ்லிமா' என்ற நூலில் காணலாம்.

எனவே, இக்கருத்து முரண்பாட்டிலிருந்து பின்வரக்கூடிய விடயங்களை அவதானிக்க முடிகின்றன.

• 'சுதந்திரமான ஒரு பெண்மணி தனது முகத்தையும், கையையும் தவிர அனைத்து இடங்களையும் மறைப்பது வாஜிப்' என்ற விடயத்தில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.                                                                                                   

• முகம், கை ஆகியவற்றை மறைப்பது தொடர்பான விடயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.

• முகத்தையும், கையையும் மறைப்பது வாஜிபன்று எனக் கூறக்கூடியவர்கள் அவை இரண்டையும் மறைப்பது மிகவும் ஏற்றமானது என்று கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக, பித்னாவுடைய காலங்களில் மறைப்பது சாலச் சிறந்தது என்ற கருத்தும் அவ்வறிஞர்கள் மன்றத்தில் காணப்படுகிறது. இதனையே இக்கருத்து வேறுபாட்டிக்குத் தீர்வாகவும் முன்வைக்க முடியும் எனக் கருதுகின்றேன்.

2. அணியக்கூடிய ஆடை அலங்காரம் செய்யப்பட்டதாக இருக்கக் கூடாது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

'தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது.' (அந்நூர்: 31)

இத்திருவசனத்தில் பார்ப்பதற்கு அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளும் உள்ளடங்குகின்றன. நபியவர்கள் நரகவாசிகளில் உள்ள ஒரு பெண்மணியைப் பற்றிக் கூறும் போது: 'அப்பெண்மணிக்கு அவளது கணவன் வீட்டில் இல்லாத போது அவளுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் செய்து கொடுத்திருக்க, அவள் பிற ஆடவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு (வீட்டை விட்டும்) வெளியாகிச் செல்வாள்' என்றார்கள். (அஹ்மத்: 9⁄19), ஹாகிம்: 1⁄119)

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பெண்களுக்கு மிகவும் உகந்த ஆடையாக 'ஜில்பாப்' எனும் ஆடையை இனங்காட்டலாம். இவ்வாடை ஒரு பெண்ணின் தலை முதல் கால் வரையான அனைத்து அங்கங்களையும் மறைக்கக்கூடியதாக இருக்கும். ('ஜில்பாபுல் மர்அதில் முஸ்லிமா' பக்கம்: 120)

குறிப்பு: சில பெண்கள் கறுப்பு நிற ஆடைகளைத் தவிர மற்ற நிறங்களிலான ஆடைகளை அலங்கார ஆடைகளில் உள்ளதாகக் கருதுகின்றனர். இது தவறான கணிப்பீடாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன.

  1. ரிபாஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி மறுதிருமணம் முடித்த போது பச்சை நிறத்திலான ஹிஜாபை அணிந்திருந்தார். (புகாரி: 5825)

  2. நபியவர்கள் கறுப்பு நிறத்திலான துணியில் பச்சை அல்லது மஞ்ஞள் நிற அடையாளமிடப்பட்ட ஆடையை உம்மு ஹாலிதிற்கு அணியக்கொடுத்தார்கள். (புகாரி: 5823)

  3. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் மஞ்ஞள் நிறத்திலான சாயம் பூசப்பட்ட ஓர் ஆடையை அணிந்திருந்தார்கள். (இப்னு அபீஷைபா: 8⁄372)

    எனவே, இது விடயத்தில் ஒரு நடுநிலையான தீர்வுக்கு வரவேண்டும். அந்த அடிப்படையில்:

  1. அலங்கார ஆடை என்பது, பல நிறங்களால் நெய்யப்பட்டு அல்லது கண்களைப் பறிக்கக்கூடிய விதத்தில் பளபளப்பான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளைக் குறிக்கும்.

  2. பெண்கள் கறுப்பு நிறத்திலான ஆடையை அணிவதே சாலச் சிறந்ததாகும். ஏனெனில், இவ்வகையான ஆடைகளையே நபியவர்களின் மனைவியரும், அன்ஸாரிப் பெண்களும் அணியக்கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்: 2128)

3. அணியக்கூடிய ஆடை உடல் அங்கங்களை வெளிக்காட்டக் கூடியதாக இருக்கக்கூடாது.

இத்தகைய ஆடைகளை அணியக்கூடிய பெண்களை நபியவர்கள் நரகவாசிகளில் உள்ளவர்கள் எனக் கூறியுள்ளார்கள். 'அவர்கள் ஆடை அணிந்தும் நிருவாணிகளாகவும், சுவனத்தின் வாடையைக்கூட நுகர முடியாதவர்களாகவும் இருப்பார்கள்' என நபியவர்கள் வர்ணித்துள்ளார்கள். (முஸ்லிம்: 2128)

4. அணியக்கூடிய ஆடை விசாலமானதாக இருக்க வேண்டும்.

உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'திஹ்யதுல் கல்பி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எகிப்தில் நெய்யப்பட்ட ஓர் ஆடையை நபியவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள். அதனை நபியவர்கள் எனக்கு அணிந்து கொள்ளுமாறு கொடுத்தார்கள். நான் அதனை எனது மனைவிக்கு அணிவித்தேன். ஒரு சமயம், நபியவர்கள் என்னைச் சந்தித்த போது 'நான் உனக்குக் கொடுத்த ஆடையை ஏன் அணியவில்லை?' என வினவினார்கள். அதற்கு நான்: 'அல்லாஹ்வின் தூதரே! நான் அதனை என்னுடைய மனைவிக்கு அணியக் கொடுத்தேன்' என்று கூறினேன். அப்போது நபியவர்கள்: அவ்வாடைக்குக் கீழால் ஒரு வேட்டியை அணிந்து கொள்ளுமாறு என் மனைவிக்குக் கட்டளையிடச் சொன்னார்கள். ஏனெனில், அவ்வாடையை அணிவதன் மூலம் அவளின் உடல் அங்கங்கள் தென்படுவதை நபியவர்கள் பயப்பட்டார்கள். (அஹ்மத்: 5⁄205) இந்த ஹதீஸின் தரத்தில் பலவீனத்தன்மை காணப்பட்டாலும் இதற்கு அபூதாவுதில் வரும் (4116)ம் ஹதீஸ் சான்று பகருகின்றது. அதனால் இந்த ஹதீஸ் 'ஹஸன்' எனும் தரத்தைப் பெறுகின்றது என அறிஞர்கள் கருதுகின்றனர்.

எனவே, இது விடயத்தில் எம் முஸ்லிம் பெண்மணிகள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சில பிரதேசங்களில் எம் பெண்மணிகள் இறுக்கமான ஆடைகளை அணிந்து தலை, மார்பு உள்ளிட்ட பாகங்களை மறைத்து பாதைகளில் உலாவருகின்றார்கள். அத்தகையவர்கள் வெறுமனே தலையை மாத்திரம் மறைத்தால் போதாது மாற்றமாக, உடல் அலங்காரங்கள் வெளியில் தென்படாத விதத்தில் விசாலமான ஆடைகளை அணிய வேண்டும். அதிலும் குறிப்பாக, உடல் அங்கங்களை அப்படியே வர்ணித்துக்காட்டக்கூடிய ஆடைகளை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு 'அபாயா', 'ஜில்பாப்' போன்ற ஆடைகளை அணிய முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு: மேலும் இது தொடர்பான மேலதிக போதனைகளை அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 'ஜில்பாப்' எனும் நூலின் (133)ம் பக்கத்தில் இருந்து அடுத்தடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

5. அணியக் கூடிய ஆடை வாசனைகள் பூசப்பட்டதாக இருக்கக் கூடாது.

இது தொடர்பாக நபியவர்கள் கூறுகையில்: 'யாராவது ஒரு பெண்மணி வாசனைகளைப் பூசிக் கொண்டு ஆடவர்களுக்கு மத்தியில் நடந்து சென்றால் அவள் விபச்சாரியாக இருப்பாள்' என்றார்கள். (நஸாயி: 2⁄283, அபூதாவுத்: 4173, திர்மிதி: 2786)

எனவே, இவ்வாறு பெண்கள் வாசனைகளைப் பூசிக் கொண்டு ஆடவர்களுக்கு மத்தியில் நடந்து செல்வதால் அவ்வாடவர்கள் அவர்கள் மீது கவரப்பட்டு விபச்சாரம் போன்ற மானக்கேடான காரியங்களில் ஈடுவடுவதற்கு வழிவகுக்கின்றது. மேலும், இதேபோன்று பெண்கள் மேற்கொள்ளும் எச்செயல்களெல்லாம் பிற ஆடவர்களைக் கவரக்கூடியனவாக உள்ளனவோ அவை அனைத்தையும் தவிர்ந்து கொள்வது அவசியமாகும். இந்த அடிப்படையில்:  அலங்காரமிடப்பட்ட ஆடைகளை அணிதல், அணிகலங்களை ஆடைகளுக்கு மேலால் தென்படும் விதத்தில் அணிதல், ஆண்கள் குழுமியிருக்கும் சபைகளில் பெண்களும் ஒன்றறக்கலந்திருத்தல் போன்ற பல அம்சங்களை இனங்காட்டலாம். (பத்ஹுல் பாரி: 2⁄279)

இமாம் ஹைஸமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூலான 'அஸ்ஸவாஜிர்' (பார்க்க: 2⁄37) இல் கூறும் போது: 'ஒரு பெண்மணி வாசனைகளைப் பூசித் தன்னை அலங்கரித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியாகிச் செல்வது பெரும்பாவமாகும், இவ்வாறு செல்வதற்கு அவளுடைய கணவன் அனுமதி கொடுத்தாலும் சரியே!' என்கிறார்கள்.

6. அணியக் கூடிய ஆடை ஆண்களின் ஆடைக்கு ஒப்பாக இருக்கக் கூடாது.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: 'பெண்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடிய ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்பாக நடக்கக் கூடிய பெண்களையும் நபியவர்கள் சபித்தார்கள்.' (புகாரி: 5885, திர்மிதி: 2784, அபூதாவுத்: 4097, இப்னு மாஜா: 1904)

அதிலும் குறிப்பாக, பெண்களின் ஆடையை அணியக்கூடிய ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியக்கூடிய பெண்களையும் நபியவர்கள் சபித்துள்ளதாக ஒரு செய்தி அபூதாவுத் மற்றும் அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. (அபூதாவுத்: 4098, அஹ்மத்: 2⁄325)

எனவே, இவ்வழிகாட்டல்கள் மூலம் மார்க்கம் பிரதானமாக இரு விடயங்களை எதிர்பார்க்கின்றது.

1. ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட வேண்டும்.

2. பெண்கள் ஆடைகளால் தம்மைப் பூரணமாக மறைத்துக் கொள்ள வேண்டும். இக்கருத்தை இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெரிவித்ததாக அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'ஜில்பாப்' எனும் நூலில் (150)ம் பக்கத்திற்கு அடுத்து வரும் பக்கங்களில் கூறுயுள்ளார்கள்.

7. காபிரான பெண்களின் ஆடைக்கு ஒப்பான ஆடையாக இருக்கக் கூடாது.

ஒரு முறை நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களை மஞ்ஞள் நிறத்திலான சாயமிடப்பட்ட ஆடையுடன் கண்டபோது, 'நிச்சயமாக இவ்வாடை காபீர்களின் ஆடையாகும், இதனை அணியாதீர்கள்!' எனப்பகர்ந்தார்கள். (முஸ்லிம்: 2077, நஸாயி: 2⁄298, அஹ்மத்: 2⁄162)  ஏனெனில், இவ்வாறு அணிவது அவர்களின் கலாச்சாரத்தை ஆதரிப்பதற்குச் சமனாகும் என அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.

குறிப்பு: மேலதிக தகவலுக்கு இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய 'இக்திளாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்' என்ற நூலை நாடவும்.

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்.