ஸூரதுன் நூர் விளக்கவுரை – 17

بسم الله الرحمن الرحيم

ஓர் அந்நியப் பெண் நோயுற்றிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு ஆண்கள் செல்ல முடியுமா?

ஓர் அந்நியப் பெண் நோயுற்றிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு ஆண்கள் செல்வதாக இருந்தால் இரு நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

1.    அப்பெண் தனது உடலை முழுமையாக மறைத்திருக்க வேண்டும்.

2.    பார்வையிடுபவர்களுக்கு பித்னா ஏற்பட வாய்ப்பு இருக்கக் கூடாது.

இந்நிபந்தனைகள் இரண்டும் சரிவரப் பேணப்படுமிடத்து அவரைப் பார்வையிடச் செல்வதில் தவறேதும் கிடையாது.

“உம்மு ஸைஸ் என்ற பெண்மணி நோயுற்றிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்காக நபியவர்கள் சென்றிருந்தார்கள்” என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லிம்: 2575)

கண்பார்வையற்ற ஓர் ஆசிரியர் மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க முடியுமா?

இவ்வினாவிற்கு இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்கள். (கிதாபுத் தௌவா : 5, பதாவா இப்னு உஸைமீன் : 2 ∕ 60,61)

இது விடயத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் மிகவும் ஏற்றமான கருத்து, கண் பார்வையற்றோருக்கு முன்னிலையில் பெண்கள் ஹிஜாபைப் பேண வேண்டிய அவசியமில்லை என்பதாகும். இதற்குப் பிரதானமாக இரு ஆதாரங்கள் உள்ளன.

1. பாதிமா பின்து கைஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “நீங்கள் இப்னு  உம்மி மக்தூமின் வீட்டில் இத்தாவுக்காகத் தரித்திருங்கள்! நிச்சயமாக அவர் ஒரு கண் பார்வையற்றவர், அங்கு உங்களுக்கு ஆடைகளைக் களையவும் முடியும்”. (முஸ்லிம்: 1480)

2. ஒரு பெருநாள் தினத்தன்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுடன் இணைந்து ஹபஷா நாட்டு வீரர்கள் செய்யும் யுத்த சாகசங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (புகாரி: 950, முஸ்லிம்: 892)

அந்நியப் பெண்களுக்கு ஸலாம் சொல்லலாமா?

“ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் சொல்வது பித்னா ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. ஆகவே, இந்நடைமுறையைத் தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும். மாற்றமாக, தொலைபேசி அழைப்புக்களின் போதும், அறிமுகமானவர்கள் தங்கள் வீடுகளில் பிரவேசிக்கும் போதும் ஸலாத்தை இஸ்லாமிய வரையறைக்குள் பேணிக் கொள்வதில் தவறில்லை”. (அல்உஸ்ரா முஸ்லிமா: 66, இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்பில் இருந்து சில வரிகள்)

குறிப்பு: பொதுவாக ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் சொல்வதை அனுமதிக்கின்ற சான்றுகள் ஹதீஸ்களில் நிறையவே உள்ளன. அந்த அடிப்படையில் உம்மு ஹானி ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுக்கு ஸலாம் சொன்ன போது நபியவர்கள் அதற்கு பதிலளித்தார்கள். (புகாரி: 3171, முஸ்லிம்: 336) பிரிதொரு சமயம் நபியவர்கள் பள்ளிவாசலில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்கள் கூட்டத்தைக் கடந்து செல்லும் போது தங்கள் கையால் சைகை செய்து ஸலாம் சொன்னார்கள். (திர்மதி: 2697, அபூதாவூத்: 5204, இப்னு மாஜா: 3701) இதுபோன்ற தகவல்கள் ஆண் பெண் இரு சாராரும் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்வதை அனுமதித்தாலும் பித்னாவுக்கு வழிவகுப்பதாலேயே மேற் கூறப்பட்ட மார்க்கத் தீர்ப்புக்களை அறிஞர்கள் முன்வைக்கின்றார்கள்.

ஹிஜாப் தொடர்பான சட்டங்கள்

وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيه المؤمنون لعلكم تفلحون

பொருள்:

“மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும் அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம் தங்கள் முந்தானைகளைத் தம் மேலாடைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர், அல்லது கணவர்களின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவர்களின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றெவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுத்துவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக்கோரி) தவ்பாச் செய்யுங்கள்”. (அந்நூர்: 31)

இவ்வசனம் இறக்கியருளப்பட்டமைக்கான காரணம்

முகாதில் இப்னு ஹையான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக ஒரு செய்தி எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அச்செய்தியில் இடம் பெற்றுள்ளதாவது:

“அஸ்மா பின்து முர்ஷிதா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், பனூ ஹாரிஸா கோத்திரத்தினருக்குச் சொந்தமான ஓரிடத்தில் வசித்து வந்தார்கள். அவரிடத்தில் பெண்கள் கீழாடை அணியாத நிலையில் நுழையக் கூடியவர்களாக இருந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் அணிந்திருந்த கொலிசுகள் தென்படக்கூடியதாக இருந்தன. மேலும், அவர்களின் மார்பகங்களும், நெற்றி முடிகளும் காட்சியளிக்கும் விதத்தில் காணப்பட்டன. அதனைக் கண்ணுற்ற அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: 'இவை எவ்வளவு மோசமான காட்சியாக இருக்கிறது' எனக் கூறி கலவரமடைந்தார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தை இறக்கியருளினான்”. (அத்துர்ருல் மன்ஸூர்: 6 ∕ 179)

விளக்கம்:

இவ்வசனத்தில் அல்லாஹுத்தஆலா விசுவாசங்கொண்ட பெண்களுக்குத் தங்களது கணவர்களைத் தவிர மற்ற ஆண்களை உற்று நோக்குவதை ஹராமாக்கியுள்ளான். ஆயினும், சில அறிஞர்கள் உணர்ச்சியின்றி அவர்களைப் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்கள். இதற்குச் சான்றாக, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களுடன் இணைந்து ஹபஷா நாட்டு வீரர்கள் செய்து காட்டிய யுத்த சாகசங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்ற சம்பவத்தினைக் குறிப்பிடுகின்றனர். (புகாரி: 454)

குறிப்பு: இக்கருத்தினை அத்திபாரமாகக் கொண்டு சில அறிஞர்கள், ஆண்கள் நிகழ்த்துகின்ற உரைகளைப் பெண்கள் கேட்கலாம் என்றும், பெண்கள் நிகழ்த்துகின்ற உரைகளை ஆண்கள் கேட்கலாகாது என்றும் கூறுகின்றனர்.

மேலும், இவ்வசனத்தில் அல்லாஹுத்தஆலா விசுவாசங்கொண்ட பெண்களுக்குத் தங்களது மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பணித்துள்ளான். இது குறித்து ஸஈத் இப்னு ஜூபைர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: “அல்லாஹ் இவ்வசனத்தில் விசுவாசங்கொண்ட பெண்களுக்கு மானக்கேடான காரியங்களில் தமது மர்மஸ்தானங்களை ஈடுபடுத்தாமல் இருக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளான்” என்கிறார்கள். (தபரி: (19 ∕ 154)

இன்னும், அல்லாஹுத்தஆலா தொடர்ந்து கூறுகையில்: “அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை,) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்” என்கிறான். இவ்வசனத்தின் மூலம் பெண்கள் தம்மால் மறைக்க முடியாத வெளிப்படையான அலங்காரத்தைத் தவிர மற்ற அனைத்து அலங்காரங்களையும் அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்குப் போர்வை, ஆடை போன்றவற்றை இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்கள். (தபரி: 19 ∕ 156)

இக்கருத்தினை இமாம்களான ஹஸன், இப்னு ஸீரீன், அபுல் ஜவ்ஸா, இப்றாஹீம் அந்நஹயி ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் ஆதரித்துள்ளனர். (தபரி: 19 ∕ 156)

அடுத்து, இவ்வசனத்தொடரின் இடையே அல்லாஹுத்தஆலா, முந்தானைகளைக் கொண்டு பெண்கள் தம் அங்கங்களை மறைத்துக் கொள்வது பற்றிப் பேசுகின்றான். அறியாமைக் காலப் பெண்கள் ஆண்களுக்கு மத்தியில் நடந்து செல்கையில் கழுத்து, மார்பகம், காதணி, தலை முடி பேன்றவற்றை காட்சிப்படுத்திக் கொண்டு செல்பவர்களாக இருந்தார்கள்.

இதன் காரணமாக ஆண்கள் அவர்கள் பால் கவரப்பட்டு மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனைக் கண்டிக்கும் முகமாக அல்லாஹுத்தஆலா இப்போதனையை எமக்கு வழங்கியுள்ளான். இன்னும், இது குறித்து அல்லாஹுத்தஆலா பிறிதோர் இடத்தில் கூறுகையில்:

“நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்”. (அல் அஹ்ஸாப்: 59)

இவ்வசனம் குறித்து - அந்நூர்: 31 - ஸஈத் இப்னு ஜூபைர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: “அவர்கள் தமது முந்தானைகளைக் கொண்டு தங்கள் நெஞ்சி, மார்பகங்கள் ஆகியவற்றைப் பிறருக்குத் தென்படாத விதத்தில் மறைத்துக் கொள்ளட்டும்” என்கிறார்கள். (அத்துர்ருல் மன்ஸூர்: 6 ∕ 182)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹுத்தஆலா முஹாஜிரீன்களைச் சேர்ந்த பெண்களுக்கு இரக்கம் காட்டுவானாக! அவர்கள் இவ்வசனம் இறங்கியவுடன் தங்களது கீழாடைகளைக் கிழித்து அதனைக் கொண்டு தங்களது அங்கங்களை மறைத்துக் கொண்டார்கள்”. (பத்ஹுல் பாரி: 8 ∕ 347)

மேலும், இதனை அடிக்கடி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (பத்ஹூல் பாரி: 8 ∕ 347)

-     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-     அபூஹுனைப்