ஸூரதுன் நூர் விளக்கவுரை – 15

بسم الله الرحمن الرحيم

பார்வையை தாழ்த்துதல்

قُلْ لِلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوَجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ الله خَبِيْرٌ بِمَا يَصْنَعُوْنَ

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களை பேணிக்காத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.” (அந்நூர்: 30)

இவ்வசனத்தில் அல்லாஹ், விசுவாசிகளுக்கு ஹராமாக்கப்பட்ட விடயங்களைக் கண்ணுறுவதில் இருந்தும் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு பணித்துள்ளான். மேலும், எதேட்சையாக அவ்விடயங்களில் பார்வை பட்டாலும் உடனடியாக முகத்தை திருப்பிக் கொள்ளுமாறு இஸ்லாம் எமக்கு எடுத்தியம்புகின்றது. இதற்குச் சான்றுகளாக...

1.    ஜரீர் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதேட்சையாக ஹராமானவற்றில் விழக்கூடிய பார்வையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு என்னைப் பணித்தார்கள்.” (முஸ்லிம்: 3 ∕ 1699)

2.    அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: (ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ஸகாபாக்களை நோக்கி): “’உங்களை பாதையில் உட்காருவதைவிட்டும் எச்சரிக்கின்றேன்’ என்றார்கள். அதற்கு ஸகாபாக்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கதைப்பதற்காக அவசியம் பாதையில் உட்கார வேண்டிய தேவையில் உள்ளோம்’ என்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'அப்படி உட்கார வேண்டிய தேவை இருந்தால் பாதையுடைய உரிமையை பேணிப்பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். அதற்கு ஸகாபாக்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! பாதையின் உரிமை என்றால் என்ன?' என வினவினார்கள். 'பார்வையைத் தாழ்த்துதலும் பாதசாரிகளுக்கு நோவினை செய்யாதிருத்தலும் ஸலாத்திற்கு பதிலளித்தலும் நன்மையை ஏவித் தீமையை தடுத்தலுமாகும்'” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (பத்ஹுல் பாரி: 5 ∕ 134)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் என்னிடம் ஆறு விடயங்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தால் உங்களுக்கு சுவனத்தை பெற்றுத் தருவதற்கு நான் பொறுப்பாளியாக இருப்பேன். உங்களில் ஒருவர் பேசினால் பொய் பேசக்கூடாது. அமானிதமாக (ஒரு பொருள்) ஒப்படைக்கப்பட்டால் அதற்கு மோசடி செய்யக்கூடாது. வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. பார்வையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் கரங்களை (அநியாயம் இழைப்பதில் இருந்தும்) பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” (ஆகியனவே அந்த ஆறு அம்சங்களாகும்.) (அறிவிப்பவர்: அபூஉமாமா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: தாரீஹுல் ஹதீப்: 7 ∕ 392, அல்முஃஜமுல் கபீர்: 8 ∕ 314, அல்மஜ்ரூஹூன்: 2 ∕ 204)

உள்ளம் சீர் கெடுவதற்குப் பார்வை காரணமாக அமைவதால் அல்லாஹ் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும் மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கட்டளையிட்டுள்ளான்.

மேலும், மர்மஸ்தானத்தை பாதுகாத்தலானது சில சமயங்களில் விபச்சாரத்தை விட்டும் தூரமாவதைக் கொண்டும் பிறிதொரு சமயத்தில் பார்வையைத் தாழ்த்துவது கொண்டும் இடம்பெறுகின்றது.

இவ்வசனத்தின் ஈற்றில் அல்லாஹுத்தஆலா “மனிதர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்” என்று கூறுகின்றான். இவ்வாக்கியத்திலிருந்து மனிதர்கள் விபச்சாரத்தின் பால் இட்டுச் செல்லக்கூடிய எந்தச் செயலைச் செய்தாலும் அவை அனைத்தும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்தும் விலகிவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்று பகருகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஆதமுடைய மகனுக்கு விபச்சாரத்தில் இருந்தும் ஒரு பங்கு எழுதப்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக அவனை அடைந்தே தீரும் (அந்த அடிப்படையில்): கண்கள் செய்யும் விபச்சாரம் (அன்னியப் பெண்ணைப்) பார்ப்பதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (அவளுடன்) பேசுவதாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (அவளின் பேச்சைக்) கேட்பதாகும். கரங்கள் செய்யும் விபச்சாரம் (அவளைப்) பிடிப்பதாகும். கால்கள் செய்யும் விபச்சாரம் (அவளை நோக்கி) நடந்து செல்வதாகும். உள்ளம் அவளை அடைய ஆசைப்படுகிறது. மர்மஸ்தானம் (ஒன்றில்) அதனை உண்மைப்படுத்தும் அல்லது பொய்ப்பிக்கும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூற்கள்: பத்ஹுல் பாரி: 11 ∕ 28, முஸ்லிம்: 4 ∕ 2047)

மேலும், எம்முன்னோர்களில் அதிகமானோர் அழகிய சிறார்களை உற்று நோக்குவதை தடை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில், அவர்களை உற்று நோக்குவது அல்லாஹ் விலக்கிய பெரும்பாவமான ஓரினச் சேர்க்கைக்கு வித்திடுகின்றது. இப்பாவத்தினை சர்வசாதாரணமாக வழமையாக்கிக் கொண்ட லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகம் அழிக்கப்பட்டதென்பது வரலாறு எமக்கு எடுத்தியம்பும் உண்மையாகும்.

இன்னும், அன்னியப் பெண்களை நேரில் பார்ப்பதை மட்டும் தான் இஸ்லாம் தடை செய்யவில்லை. மாற்றமாக, அவர்களை சினிமாக்கள் மற்றும், மஞ்சல் பத்திரிகைகளில் பார்ப்பதும் விலக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் மார்க்கத் தீர்ப்புக்கள் தெளிவுபடுத்துகின்றன.

கேள்வி:

நடிகைகள் மற்றும் பாடகிகளின் முகங்ளையும் தேகங்களையும் தெலைக்காட்சிப் பெட்டிகளிலும் பத்திரிகைகளிலும் பார்ப்பது கூடுமா?

பதில்:

“பாவங்களின் - பித்னா - பால் இட்டுச் செல்வதற்குக் காரணமாக அமையக்கூடிய எந்த ஒன்றையும் பார்ப்பது ஹராமானதாகும். இதனை ஸூரதுன் நூரின் 30ம் வசனம் இனங்காட்டுகின்றது. பெண்களை நேரில் பார்ப்பதும், போட்டோப் பிரதிகளில் அல்லது வீடியோக்களில் பார்ப்பதும் சமமே!” (மஜல்லதுத் தஃவா, வெளியீட்டு இல: 923, அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்பு)

இன்னும், அன்னியப் பெண்களுக்குக் கை கொடுப்பதும் அவர்களை கட்டித் தழுவுதலும் விலக்கப்பட்ட செயல்களாகும். இதனைப் பின்வரும் மார்க்கத் தீர்ப்பு உண்மைப்படுத்துகின்றது.

கேள்வி:

அன்னியப் பெண்களுக்குக் கை கொடுக்கலாமா? அவ்வாறே, ஓர் அன்னியப் பெண் தனது கரங்களில் கையுறை அணிந்திருக்கும் நிலையில் அவளுக்கு கை கொடுக்க முடியுமா? மேலும், இப்படி கை கொடுப்பதன் சட்டம் பெண்களின் பருவங்களுக்கு ஏற்ப வேறுபடுமா?

பதில்:

“அன்னியப் பெண்களுக்குக் கை கொடுப்பது தடை செய்யப்பட்டதாகும். அவர்கள் எப்பருவத்தையுடையவர்களாக  இருந்தாலும் சரியே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்: ‘நிச்சயமாக நான் பெண்களுக்குக் கை கொடுக்கமாட்டேன்.’ (நஸாயி: 4181, இப்னு மாஜா: 2874, அஹ்மத்: 26466) இதற்கொப்ப ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகையில்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரம் எந்த ஓர் அன்னியப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. மாற்றமாக, நாவினாலேயே அவர்களிடம் உறுதிமொழி   - பைஅத் - பெறுவார்கள்.’ (புகாரி: 5288, முஸ்லிம்: 1866)

மேலும், கையுறை அணிந்தவர், அணியாதவர் என்ற பாகுபாடு பார்க்கப்பட முடியாது. பாவங்களை ஒழிப்பதற்கு இதுவே சிறந்த வழியாகும்.” (மஜல்லதுத் தஃவா, வெளியீட்டு இல: 885, அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்பு)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அபூஹுனைப்