ஸூரதுன் நூர் விளக்கவுரை – 11

بسم الله الرحمن الرحيم

பத்தினித்தனமான பெண்கள் மீது அவதூறு கூறுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين 25-23

பொருள்: நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர் - இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வினால் - அவர்கள் சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும், - மறுமையில் - அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு. அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லும் நாளில்  - அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு. - அந்நாளில் அவர்களுக்குரிய  - செயல்களுக்கு - உண்மையான கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் - அவனே கணக்குகளை நீதமாக வைத்து அவற்றை - வெளியாக்கிவிடக்கூடிய உண்மையாளன் என்பதை அவர்கள் அறிந்தும் கொள்வார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தூய்மைப்படுத்தும் விதமாக அல்லாஹ் இவ்வசனங்களை இறக்கிய பின்பும் எவர்கள் அன்னையவர்களை அவதூறு கூறி திட்டுகிறார்களோ, அத்தகையவர்கள் இறை நிராகரிப்பாளர்களாகக் கருதப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அல்குர்ஆனைப் புறக்கணித்ததற்குச் சமனாகும்.

-           அல்மிஸ்பாஹ்: 934

இவ்வசனம் தொடர்பாக அப்துர் ரஹ்மான் இப்னு ஸைத் இப்னி அஸ்லம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: இவ்வசனமானது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய விவகாரத்தில் இறக்கப்பட்டது. ஆயினும், இது போன்ற செயலை இன்று எவர்கள் முஸ்லிம் பெண்மணிகள் விவகாரத்தில் முன்னெடுக்கின்றார்களோ, அத்தகையவர்களுக்கும் இதே வாசகங்கள் பொருந்தும் என்கிறார்கள்.

-           தபரி: 19 ∕ 139

நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அவையாவன:

1 . அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

2.  சூனியம் செய்தல்.

3.  எவ்வித உரிமையுமின்றி ஓர் ஆத்மாவைக் கொலை செய்தல்.

4.  வட்டி உண்ணல்.

5.  அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்.

6.  யுத்த களத்தைவிட்டும் புறமுதுகு காட்டி ஓடல்.

7.  கற்புள்ள, அப்பாவிகளான மற்றும் விசுவாசிகளான பெண்கள் மீது அவதூறு கூறல்.

- பத்ஹூல் பாரி: 5 ∕ 462, முஸ்லிம்: 1 ∕ 92

அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும் ... என்று ஆரம்பிக்கும் வசனத்திற்கான விளக்கம்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்கள், தொழுகையாளிகளைத் தவிர வேறு எவரும் சுவனம் நுழையமாட்டார்கள் என்பதைக் கண்ணுறும் போது தம்மைச் சார்ந்தவர்களை அழைத்து, வாருங்கள்! நாமனைவரும் ஒன்றிணைந்து உலகில் நாம் ஈடுபட்ட இணைவைப்பை செய்யாதபடி புறக்கணிப்போம் என்று கூறி, அனைவரும் ஒருமித்தவர்களாக புறக்கணிக்க எத்தனிப்பார்கள். அப்போது, அல்லாஹுத்தஆலா அவர்களின் நாவுகளுக்கு முத்திரையிடுவான். பிறகு அவர்களின் கரங்களும், கால்களும் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறும். அல்லாஹ்வைவிட்டும் எந்த ஒன்றையும் அவர்களால்; மறைக்க முடியாது போய்விடும்.

-  அத்துர்ருல் மன்ஸூர்: 7 ∕ 319,தபரி: 8 ∕ 373

அந்நாளில் அவர்களுக்குரிய - செயல்களுக்கு - உண்மையான கூலியை... என்று ஆரம்பிக்கும் வசனத்திற்கான விளக்கம்

இவ்வசனத்தில் இடம் பெற்றிருக்கும் தீனஹும் என்ற வாசகத்திற்கு இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் விளக்கமளிக்கையில்: அல்குர்ஆனில் அல்லாஹ் வாக்களித்த உண்மையான கூலி என்று வியாக்கியானம் செய்துள்ளார்கள்.

-           தபரி: 19 ∕ 141

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறப்புமிக்கவர்கள்.

الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرءون مما يقولون لهم مغفرة ورزق كريم – 26

பொருள்: கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் இன்னும், பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும் பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் - தகுதியானவர்கள். - அத்தகையவர்கள், இவர்கள் கூறுவதைவிட்டும் நீக்கம் செய்யப்பட்ட பரிசுத்தமானவர்கள் இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: கெட்ட வார்த்தைகளைப் பேசக்கூடிய பெண்கள், கெட்ட வார்த்தைகளைப் பேசக்கூடிய ஆண்களுக்கும் கெட்ட வார்த்தைகளைப் பேசக்கூடிய ஆண்கள், கெட்ட வார்த்தைகளைப் பேசக்கூடிய பெண்களுக்கும் நல்ல வார்த்தைகளைப் பேசக்கூடிய பரிசுத்தமான பெண்கள், நல்ல வார்த்தைகளைப் பேசக்கூடிய பரிசுத்தமான ஆண்களுக்கும் நல்ல வார்த்தைகளைப் பேசக்கூடிய பரிசுத்தமான ஆண்கள், நல்ல வார்த்தைகளைப் பேசக்கூடிய பரிசுத்தமான பெண்களுக்கும் பொருத்தமானவர்களாக உள்ளார்கள். மேலும், இவ்வசனமானது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா மற்றும் அவதூறு கூறியவர்கள் விடயத்தில் இறங்கியதாகும். இக்கருத்தினையே இமாம்களான முஜாஹித், அதாஉ, ஸஈத் இப்னு ஜுபைர், அஷ்ஷஃபி, ஹஸனுல் அல்பஸரி, ஹபீப் இப்னு அபீ ஸாபித், ளஹ்ஹாக், இப்னு ஜரீர், அப்துர் ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் ஆதரித்துள்ளார்கள்.

-           தபரி: 19 ∕ 142,143,144 அத்துர்ருல் மன்ஸூர்: 6 ∕ 167

இத்திருவசனத்தின் மூலம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறந்த பெண்மணி என்பதும் அதனாலேயே அல்லாஹ் நபியவர்களுக்கு மனைவியாக அமையும் பாக்கியத்தை அளித்துள்ளான் என்பதையும் புரிந்து கொள்ளலாம். மேலும், சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திலிருந்து அன்னையவர்கள் சுவனபதியிலும் நபியவர்களுக்கு மனைவியாக இருப்பார்கள் என்று விளக்கமளித்துள்ளார்கள்.

-           அல்மிஸ்பாஹ்: 935

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-           அபூஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்