வுழூச் செய்யக்கூடியவர்களினால் நிகழக்கூடிய தவறுகள்.

بسم الله الرحمن الرحيم

குத்பா பிரசங்கம்

  • நிகழ்த்தியவர்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன் (அல்கமீ)
  • காலம்: 11.08.2017
  • இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல் - பலஹத்துறை, இலங்கை

மேற்குறித்த குத்பா பிரசங்கத்தின் நகல் வடிவம்...

வுழூச் செய்பவர்கள் செய்யக்கூடிய தவறுகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த வணக்க வழிபாடுகள் யாவுமே அவரது வழிகாட்டலின்படியே அமைந்திருக்க வேண்டும் என்பது அவ்வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு இன்றியமையாத நிபந்தனைகளில் ஒன்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு அமலைச் செய்கின்றாரோ, அது மறுக்கப்படும். (முஸ்லிம்: 1718)

இன்று நிறைவேற்றப்படக்கூடிய பல வணக்க வழிபாடுகளில் தவறுகளும் குறைகளும் நிறைந்து காணப்படுகின்றன. அறியாமை, தெளிவின்மை, பிடிவாதம் போன்ற பல காரணங்களினால் இத்தவறுகளும் குறைபாடுகளும் வெளிப்படுகின்றன.

நாம் அன்றாடம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே தொழுகைக்கு முன்பு வுழூச் செய்வதாகும். இந்த வுழூவை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த முறை ஹதீஸ் கிரந்தங்களில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது. அவ்வாறிருந்தும்கூட சில சகோதர, சகோதரிகள் வுழூச் செய்யும்போது தவறுவிடுகின்றனர் என்பது பெரும் கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

எனவே, வுழூச் செய்யும்போது நிகழக்கூடிய சில தவறுகளை இங்கு குறிப்பிட்டிருக்கின்றோம். இவற்றை அறிந்து நாமும் அத்தவறுகளிலிருந்து விலகி, பிறருக்கும் இத்தவறுகளை உணர்த்துவோம், இன்ஷாஅல்லாஹ்!

 

1. வுழூச் செய்யும்போது ஒவ்வொரு உறுப்புக்களை கழுவும்போதும் திக்ர் செய்தல்

சில சகோதரர்கள் வுழூச் செய்யும்போது ஒவ்வொரு உறுப்புக்களை கழுவும்போதும் ஏதோ ஒரு துஆவைக் கூறுவதை நாம் கண்டிருக்கின்றோம். நிச்சயமாக இது நபிவழிக்கு முரணான ஒரு செயல் என்பதில் ஐயமில்லை. சில நேரம் இட்டுக்கட்டப்பட்ட சில ஹதீஸ்களை ஆதாரமாக அவர்கள் எடுத்திருக்கலாம்.

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்: ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும்போது திக்ர் செய்வது குறித்து வரக்கூடிய இட்டுக்கட்டப்பட்ட செய்தியானது பொய்யான ஒரு செய்தியாகும். (அல்மனாருல் முனீப்: 45)

இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும்போது திக்ர் செய்வதற்கு எந்த அடிப்படையான ஆதாரமும் கிடையாது. (அல்புதூஹாதுர் ரப்பானிய்யா: 2/27, 29)

எனவே, இவ்வாறு வுழூச் செய்பவர்களை நாம் கண்டால் அவர்களுக்கு உண்மையைக் கற்றுக் கொடுத்து, அவர்களது தவறை அவர்களுக்கு உணர வைப்பதும் எமது பொறுப்பாகும்.

 

2.வுழூவைப் பூரணமற்ற முறையில் நிறைவேற்றல்

வுழூவைப் பூரணமற்ற முறையில் நிறைவேற்றுவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செய்யக்கூடிய தவறுகளில் ஒன்றாக மாறிவிட்டது. சிலர் முகங்களைக் கழுவும்போது காதோடு இருக்கக்கூடிய ஓரப்பகுதியை கழுவ மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கைகளைக் கழுவும்போது முழங்கைப் பகுதியில் நீர் படாமல் இருக்கக்கூடிய காட்சிகளை நாம் பார்த்திருக்கின்றோம். இன்னும் சிலர் கால்களைக் கழுவுகின்றபோது காலின் பிற்பகுதியை சரியான முறையில் கழுவமாட்டார்கள். இவ்வாறு பல குறைபாடுகளைக் குறிப்பிடலாம்.

சில பகுதிகளில் நீர் படாமல் பூரணமற்ற முறையில் வுழூச் செய்வது அவ்வுழூ அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

ஒரு மனிதர் வுழூச் செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். அவர் தனது காலில் ஒரு நகமளவுக்கு கழுவாமல் விட்டிருந்தார். அவரைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்கள் திரும்பிச் சென்று மீண்டும் அழகான முறையில் வுழூச் செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அம்மனிதர் திரும்பிச் சென்று வுழூச் செய்துவிட்டுத் தொழுதார். (முஸ்லிம்: 243)

ஒரு சிறுபகுதியில் கூட நீர் படாமல் இருப்பது அவ்வுழூவை பாழாக்கிவிடும் என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்துகிறது.

வுழூவை அழகாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுவது எமது சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்யும்போது அவரது (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெறியேறிவிடுகின்றன. முடிவில் அவருடைய நகங்களுக்கு கீழேயிருந்தும் அவரது பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. (முஸ்லிம்: 245)

 

3.தண்ணீரை வீண்விரயம் செய்தல்

வுழூச் செய்யும்போது நீரை வீண்விரயம் செய்வது பலருக்கும் தவிர்க்க முடியாத ஒரு செயலாக மாறியுள்ளது. பொதுவாகவே வீண்விரயம் என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு குற்றமாகும்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். இன்னும் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண்விரயம் செய்பவர்களை விரும்புவதில்லை. (அல்அஃராப்: 31)

வீண்விரயம் செய்வதை தடுத்த அல்லாஹுதஆலா வீண்விரயம் செய்பவர்களுக்கு தனது நேசத்தையும் தடை செய்திருக்கின்றான். எனவே, வுழூச் செய்வதில்கூட தேவைக்கு அதிகமான நீரைப் பயன்படுத்துவது வீண்விரயம் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்யும்போது எந்தளவுக்கு நீரை சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை ஹதீஸ்களிலே நாம் பார்க்கலாம்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முத்து (مد) அளவு நீரைப் பயன்படுத்தி வுழூச் செய்பவர்களாக இருந்தார்கள். (புஹாரீ: 201, முஸ்லிம்: 325)

ஒரு முத்து என்பது நடுத்தரமான ஒரு மனிதர் தனது இரு கைகளினாலும் அள்ளக்கூடிய அளவேயாகும். இவ்வளவு நீரைக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்திருக்கின்றார்கள். ஆனால், எம்மில் பலர் நீர்க்குழாயை வேகமாகத் திறந்து தேவைக்கும் அதிகமான நீரை வீண்விரயம் செய்துகொண்டிருக்கின்றனர் என்பது கவலையூட்டக்கூடிய ஒன்றாகும்.

நாம் கடற்கரை அருகில் இருந்தாலும் கடல் நீரைக்கூட வீண்விரயம் செய்யக்கூடாது என அறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

அஷ்ஷெய்ஹ் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் (ஹபிளஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்: கடற்கரை அருகில் இருந்தாலும் நீரை வீண்விரயம் செய்யக்கூடாது என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளனர். (ஷர்ஹு ஸுனனி அபீதாவூத்)

 

4.கைகளைக் கழுவும்போது விரல் நுனியிலிருந்து ஆரம்பிக்காமலிருத்தல்

சிலர் முகத்தைக் கழுவியதன் பின்பு கைகளைக் கழுவுகின்ற சமயத்தில் விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து உள்ளங்கையையும் சேர்த்துக் கழுவாமல் வெறும் கைகளை மாத்திரம் கழுவக்கூடியவர்களாக உள்ளனர். இது தவறான ஒரு செயலாகும். கைகள் எனும்போது விரல் நுனியிலிருந்து அது ஆரம்பிக்கின்றது. எனவே, கைகளைக் கழுபவர்கள் விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரைக்கும் கழுவ வேண்டும் என்பதே சரியான ஒரு நிலைப்பாடாகும்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்: அதிகமான மனிதர்கள் கவனமற்றிருக்கக்கூடிய ஒரு விடயத்தை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகின்றோம். அவர்களோ முகத்தைக் கழுவ முன்பு ஏற்கனவே விரல்களைக் கழுவி விட்டோம் என்ற எண்ணத்தில் வுழூச் செய்யும்போது கைகளை மனிக்கட்டிலிருந்து முழங்கை வரைக்கும் கழுவிகின்றனர். இது சரியான ஒன்றல்ல. மாறாக கைகள் விரல் நுனிகளிலிருந்து முழங்கை வரைக்கும் கழுவப்பட வேண்டும். (அல்லிகாஉஷ் ஷஹ்ரீ: 3/330)

 

5.தலையின் சில பகுதிகளை மாத்திரம் தடவுதல்:

தலையை மஸ்ஹு செய்யும்போது அதன்  முன்பகுதியை அல்லது மேல்பகுதியை மாத்திரம் தடவிக்கொள்வது பலரிடம் காணப்படக்கூடிய தவறுகளில் ஒன்றாகும். இவ்வாறு மஸ்ஹு செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வுழூவுக்கு மாற்றமான அமைப்பாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்யும்போது எவ்வாறு தலையைத் தடவினார்கள் என்பது தெளிவாகவே ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூச் செய்தார்கள்? என்பதை எனக்கு நீங்கள் செய்து காட்ட முடியுமா? எனக் கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஆம்' என்று கூறித் தண்ணீர் கொண்டு வரக் கூறினார். அவர் தலையை மஸ்ஹு செய்யும்போது தம் கைகளை தலையில் வைத்து முன்னே கொண்டு சென்று பின்பு கைகளைப் பின்னே கொண்டு வந்து தலையைத் தடவினார். அதாவது தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தாரோ அந்த இடத்திற்கு திரும்பக் கொண்டு வந்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கழுவினார். (புஹாரீ: 185, முஸ்லிம்: 398)

தலையை முழுவதுமாக மஸ்ஹு செய்வதே நபிவழி என்பதை அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்துகாட்டியுள்ளார்கள். இதற்கு மாற்றமாக பலர் செய்வது போன்று தலையின் முன்பகுதியை அல்லது மேல்பகுதியை மாத்திரம் தடவிக்கொள்வதானது நபிவழிக்கு முரணான ஒரு செயலாகும்.

இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்: தலையின் சில பகுதிகளை மாத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஹு செய்ததாக அவரிடமிருந்து எந்தவொரு ஆதாரபூர்வமான செய்தியும் ஒருபோதும் இடம்பெறவில்லை.  (ஸாதுல் மஆத்: 1/193)

 

6.கழுத்தை தடவுதல்

சில சகோதரர்கள் வுழூச் செய்யும்போது கழுத்தையும் நீரால் தடவிக்கொள்பவர்களாக இருக்கின்றனர். முகங்களை கழுவிவிட்டு அவ்வாறே கழுத்தையும் தடவிக்கொள்வார்கள்.

கழுத்து என்பது வுழூச் செய்யும்போது கழுவப்பட வேண்டிய உறுப்பல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்யும்போது கழுத்தை கழுவக்கூடியவர்களாகவோ, தடவக்கூடியவர்களாகவோ இருக்கவில்லை.

இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூச் செய்யும்போது கழுத்தைத் தடவியதாக அவரிடமிருந்து எந்த செய்தியும் பதிவாகவில்லை. அது மாத்திரமன்று ஒரு ஸஹீஹான ஹதீஸில் கூட அவர்கள் அவ்வாறு செய்ததாக இடம்பெறவில்லை. (மஜ்மூஉல் பதாவா: 21/127)

அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்: கழுத்தை தடவிக்கொள்வது விரும்பத்தக்கதுமல்ல, மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுமல்ல. குர்ஆன், ஸுன்னாவுடைய ஆதாரத்தின் படி தலையும் இரு காதுகளும் மாத்திரமே மஸ்ஹு செய்யப்பட வேண்டும். (மஜ்மூஉ பதாவா இப்னிபாஸ்: 10/102)

 

7.விரல்களுக்கிடையில் குடைந்து கழுவாமலிருத்தல்

வுழூச் செய்கின்றபோது மறக்கடிக்கப்பட்ட நபிவழிகளில் ஒன்றே விரல்களுக்கிடையில் குடைந்து கழுவிக்கொள்வதாகும். இதனைப் பலர் செய்வதில்லை. இவ்வாறு குடைந்து கழுவாமலிருப்பதால் விரல்களுக்கிடையில் நீர் படாமல் இருக்கலாம். எமது வுழூவும் ஏற்றுக்கொள்ளப்படாமலிருக்கலாம்.

வுழூச் செய்யும்போது கை விரல்களுக்கிடையிலும் கால் விரல்களுக்கிடையிலும் குடைந்து கழுவிக்கொள்வதே நபிவழியாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் வுழூவைப் பூரணமாகச் செய்யுங்கள். இன்னும், விரல்களுக்கிடையில் குடைந்து கழுவிக்கொள்ளுங்கள். (திர்மிதீ: 788)

மேலும், கூறினார்கள்: நீங்கள் வுழூச் செய்தால் உங்கள் கைகளின் விரல்களுக்கிடையிலும் உங்கள் கால்களின் விரல்களுக்கிடையிலும் குடைந்து கழுவிக்கொள்ளங்கள். (திர்மிதீ: 39)

எனவே, மேலோட்டமாக கைகளையும் கால்களையும் கழுவாமல் விரல்களுக்கிடையில் குடைந்து கழுவிக்கொள்வதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 

8.குதிகால்களைக் கழுவாமலிருத்தல்

வுழூச் செய்கின்றபோது பலருக்கும் ஏற்படக்கூடிய தவறுகளில் ஒன்றே கால்களைக் கழுவுகின்றபோது குதிகால்களை கழுவாமலிருப்பதாகும். குதிகால்களும் கட்டாயம் கழுவப்பட வேண்டிய பகுதியாகும். குதிகால்களைக் கழுவாமலிருப்பது எச்சரிக்கை செய்யப்பட்ட குற்றங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சரியாகக் கழுவப்படாத குதிகால்களுக்கு நரக வேதனை தான். (புஹாரீ: 60, முஸ்லிம்: 405)

சகோதர, சகோதரிகளே! இங்கு நாம் குறிப்பிட்டது வுழூச் செய்கின்றபோது நிகழக்கூடிய ஒருசில தவறுகளேயாகும். இங்கு குறிப்பிடப்படாத பல தவறுகள் வுழூச் செய்கின்றபோது ஏற்படுகின்றன.

எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு வுழூச் செய்தார்கள் என்பதைத் தெளிவாகக் கற்று அதன்படி வுழூச் செய்து எமது வுழூவுக்குரிய நிரப்பமான கூலியை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!