வியாபாரஸ்தலங்களில் இடம்பெறும் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

3. பொய்யும் பொய் சத்தியமும்

வியாபாரஸ்தலங்களில் காணப்படும் மற்றுமொரு தவறான அம்சம் பொய்யும் பொய் சத்தியமுமாகும். இத்தவறான அம்சங்களை கொடுக்கல் வாங்கலின் போது வெளிப்படுத்துவது அவற்றில் காணப்படும் அபிவிருத்தியை அற்றுப்போகச் செய்யக் கூடியனவாக இருக்கின்றன என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்: "மூன்று நபர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் மறுமைநாளில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை பார்க்கவும் மாட்டான். (அவர்களில் ஒருவர்,) அஸருக்குப் பின் ஒரு பொருள் குறித்து பொய் சத்தியம் செய்து முஸ்லிமான ஒரு மனிதனின் செல்வத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பவராவார்". (புகாரி)

மேலும் நபியவர்கள் நவின்றார்கள்:"வியாபாரத்தில் ஈடுபடும் இருவரும் அவர்கள் அவ்விடத்தைவிட்டும் விலகிச் செல்லும் வரை தெரிவுச் சுதந்திரத்திற்கு உட்பட்டவர்களாவர். எனவே, அவர்கள் உண்மை பேசி வியாபாரப் பொருள் குறித்த தெளிவை வழங்குவார்களென்றால் அவர்கள் இருவரினதும் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்யப்படும். மேலும்,அவ்விருவரும் ஒருவருக்கொருவர் வியாபாரப் பொருள் குறித்த குறைகளை மறைத்துக் கொண்டு பொய் பேசுவார்களென்றால் அவ்விருவரினதும் வியாபாரத்தில் அபிவிருத்தி அழிக்கப்பட்டுவிடும்". (புகாரி)

4. மோசடி செய்தல்

நபியவர்கள் கூறினார்கள்: "யார் எங்களை ஏமாற்றுகிறாரோ அவர் எங்களைச் சார்ந்தவரல்ல. மேலும் தந்திரம், சூழ்ச்சி ஆகியன நரகில் உள்ளன". (இப்னு ஹிப்பான்)

5. பொய் சாட்சி கூறுதல்

"நபியவர்களிடத்தில் பெரும் பாவங்களைப் பற்றி வினவப்பட்ட போது, இணைவைப்பையும் கொலையையும் பெற்றோருக்கு நோவினை செய்வதையும் குறிப்பிட்டார்கள். பின்னர் பெரும் பாவங்களில் மிகப்பெரியது எது என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என வினவிட்டு, பொய்யான வார்த்தை அல்லது பொய் சத்தியம் எனக் கூறினார்கள்". (முஸ்லிம்)

6. வெள்ளிக்கிழமையில் அதன் கூறப்பட்ட பிறகு வியாபாரம் செய்தல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:"விசுவாசங்கொண்டோரே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக (அதான் சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால்,அப்போது அல்லாஹ்வை நினைவு கூறுவதின் பால் நீங்கள் சென்றுவிடுங்கள்!"(அல்ஜுமுஆ: 9)

7. வட்டி கலந்த வியாபாரம்

வியாபாரஸ்தலங்களில் காணப்படுகின்ற மற்றுமொரு தவறான அம்சம் வட்டியுடனான தொடர்பாகும். பொதுவாக, எம்மில் பலர் வட்டி விடயத்தில் எச்சரிக்கையாக இருந்தாலும், அது குறித்த சரியான தெளிவு இல்லாததன் காரணமாக வட்டியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் நவீன கொடுக்கல் வாங்கல் முறைகளுக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்த அடிப்படையில்:

  • தங்கத்தை கடனுக்கு விற்றல்,
  • பழைய தங்கத்திற்கு புதிய தங்கத்தை விற்றல்,
  • நாணயமாற்றின் போது அதன் நிபந்தனைகளைப் பேணாமை,
  • இலாபம் நாடி வியாபாரத்திற்காக பணங்களை முதலீடு செய்யும் போது அதன் சட்டதிட்டங்களை கருத்திற்கொள்ளாமை,

என்று அடுக்கிக் கொண்டே பேகலாம். வட்டி ஹராம் என்பது தொடர்பாக இடம்பெறக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும் இவை போன்ற கொடுக்கல் வாங்கல்களுக்கும் குறித்த தீர்ப்பை அளிக்கும் என்பதை நினைவில் கொள்க!

எனவே, நாம் எந்த ஒரு புதிய வியாபார முறையில் உட்புக நாடினாலும் அது குறித்த உலமாக்களின் ஆளோசனைகளைப் பெறுவது எமது கடமையாகும்.

8. மார்க்கத்திற்கு முரணான வழியிலான சம்பாத்தியங்கள்

அந்தவிதத்தில் பலவகைப்பட்ட வியாபார முறைகளை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

  • போதைப்பொருள் விற்பனை,
  • அற்ககோள்,பண்றி கொழுப்பு கலந்த பொருட்கள் விற்பனை,
  • உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள்,பெண்கள் வெளியில் அணியத் தடைசெய்யப்பட்ட ஆடைகள் விற்பனை,
  • விபச்சாரத்தை தொழிலாகக் கொள்ளுதல்,
  • தாடி வழித்தல் மற்றும்,ஆண்களுக்கும் பெண்களுக்குமாக தடைசெய்யப்பட்ட சிகை அலங்கார முறைகளை செய்துவிடல்,
  • மஸாஜ் சென்டர்,முக அலங்கார இஸ்தலங்கள் ஆகியவற்றை நடாத்தல்,
  • ஹராமான சம்பாத்தியத்திற்கு துணைபோகும் விதத்தில் கடைகளை வாடகைக்கு வழங்குதல்,
  • ஹராமான பொருட்களை வினியோகிப்பதற்கு உதவியாக கூலிக்கு வாகனங்களை ஓட்டுதல்,
  • இறை நிராகரிப்பு,இணைவைப்பு,  நூதன அனுஷ்டானம் போன்றவற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாக்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,
  • வியாபாரம் செய்வதற்குத் தடை செய்யப்பட்ட பொருட்களான சிலைகள்,காபீர்களுடைய பெருநாட்களுடன் தொடர்புடைய பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதும்,  அவை குறித்து விலைக்கழிவுகளை மேற்கொள்வதும்,

இப்படி பட்டியல் படுத்திக்கொண்டே போகலாம்.

9. ஒலி பெருக்கி மற்றும் ஒலிப்பதிவு நாடாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பொதுமக்களைத் தொந்தரவு செய்தல். மற்றும், அவர்களைத் திடுக்கிடச் செய்தல். அவ்வாறே, பகிரங்கமாகத் திறைகளை ஏற்படுத்தி அவற்றில் அரைகுறை நிர்வாணிகளின் படங்களை விளம்பரம் என்ற பெயரில் ஓடவிடுதல்.

10. ஆண் பெண் கலப்பு

ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களை நோக்கி: “நாங்கள் இக்கதவை பெண்களுக்கென்று விட்டுவைத்தால் நன்றாக இருக்குமே!” என்று கூறினார்கள். நாபிஉ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் மரணிக்கும் வரை அக்கதவால் நுழையவேயில்லை” (அபூ தாவுத்)

11. ஹராமான பார்வை

நபியவர்கள் கூறினார்கள்: “கண் விபச்சாரம் செய்கின்றது. அதனுடைய விபச்சாரம் பார்வையாகும்”. (அஹ்மத்)

12. பெண்களுடைய பித்னாக்கள்

பெண்கள் மஹ்ரமின்றி பிரயாணம் மேற்கொள்ளல், அவர்கள் தம்மை அலங்கரித்து வெளியாகிச் செல்லல், சத்தத்தை உயர்த்திக் கதைத்தல், சமுக வலையமைப்புக்களில் தம்மை ஈடுபடுத்தல் போன்ற பல செயற்பாடுகள் அவர்கள் மூலம் பித்னாக்கள் உண்டாவதற்குக் காரணங்களாக அமைகின்றன.

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! நாங்கள் காபீர்கள் செறிந்து வாழும் நாட்டில் வாழ்கின்றோம் என்பதைக் காரணமாகக் கூறி இவை போன்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்தக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் எமது சக்திக்கு உட்பட்ட விதத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்வது கடமையாகும். ஏனெனில், நிர்ப்பந்தமென்பது நிர்ப்பந்திக்கப்பட்ட அளவுக்குத் தக்கவிதத்தில் தடைசெய்யப்பட்டவற்றை அனுமதிக்கின்றது என்ற கோட்பாட்டை எப்போதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

الحمد لله رب العالمين