‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வுடைய சிறப்புமிகு மாதமொன்று நம்மை வந்தடைந்து இருக்கின்றது. அதுதான் பரகத் பொருந்திய ரமழான் மாதமாகும். அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. (புஹாரீ:1899)

அதேபோன்று இந்த மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஓர் இரவு இருக்கின்றது. அது பல சிறப்புகள் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. அந்த இரவு சம்பந்தமாகப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். எனவே, நாம் இந்தக்கட்டுரையை பல உபதலைப்புக்களின் கீழால் பார்க்க இருக்கின்றோம்.

இந்த இரவு லைலதுல் கத்ர் என்று பெயர் சொல்லப்படுவதற்கான காரணம்

அறிஞர்கள் இது சம்பந்தமாகப் பல காரணங்களைக் கூறுகின்றார்கள். அதிலும் மிக முக்கியமான இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன.

முதற்காரணம்: இந்த இரவு மிக கண்ணியமும் மகத்துவமும் அபிவிருத்தியும் பொருந்திய இரவாகும். அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அதை அபிவிருத்தி செய்யப்பட்ட ஓர் இரவில் இறக்கினோம். (அத்துகான்:3)

இரண்டாவது காரணம்: அந்த இரவில்தான் அவ்வருடத்தில் நடக்கவிருக்கின்ற மனிதர்களின் கால வரையறைகளையும் உணவு விஸ்தீரணங்களையும் மனிதனுக்கு அல்லாஹ் நிர்ணயித்த அனைத்தையும் மலக்குமார்கள் எழுதுவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அந்த இரவில்தான் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் பிரிக்கப்படுகின்றன. (அத்துகான்:4)

அந்த இரவு தற்போதும் உள்ளதா? அல்லது அது உயர்த்தப்பட்டுள்ளதா?

அந்த இரவு தற்போதும் இருக்கின்றது என்பதே மிகச் சரியான கருத்தாகும். ஆனாலும், ஒரு சிலர் புஹாரி, முஸ்லிம், பஸ்ஸார் போன்ற கிரந்தங்களில் உபாதத் இப்னு சாமித், அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத்தொட்டும் வருகின்ற ஹதீஸை முன்வைத்து இந்த இரவு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார்கள்.

அதாவது, நபியவர்கள் அந்த இரவு எப்போது வரும் என்று கூறுவதற்கு வெளியானபோது இரண்டு ஸஹாபாக்கள் வாக்குவாதப்படுகின்றார்கள். அந்த நேரம் நபியவர்கள் அந்த இரவு எப்போது வரும் என்பதை மறந்துவிடுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: 'லைலதுல் கத்ர் இரவு எப்போது வரும் என்பதை அறிவிப்பதற்கு நான் வெளிப்பட்டேன். இரண்டு நபர்கள் வாக்குவாதப்பட்டார்கள். எனவே, அது உயர்த்தப்பட்டது' என்றார்கள். ஆனாலும் இந்த ஹதீஸின் உள்ரங்கமான கருத்தைப் பொருத்தவரையில் அந்த நாள் எதுவென்பதை குறிப்பிடுவதே உயர்த்தப்பட்டுள்ளதாகும். ஏனெனில், இதன் பிற்பகுதியில் நபியவர்கள் கூறுகின்றார்கள்: 'உயர்த்தப்பட்டது உங்களுக்கு சிறப்பாக இருக்கக்கூடும். ஆகவே, அந்த இரவை 29, 27, 25 போன்ற இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள்.'

அந்த இரவு உயர்த்தப்பட்டிருந்தால் அதை முன்னால் கூறிய இரவுகளில் தேடும்படி நபியவர்கள் கூறமாட்டார்கள். (மஜ்மூஃ : 2/402, அஷ்ஷரஹுல் மும்திஃ :6/391, அல்பத்ஹ்: 2023)

லைலதுல் கத்ர் எந்த இரவில் ஏற்படும்?

இந்த விடயத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். இமாம் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய பத்ஹுல் பாரியில் நாற்பது கூற்றுக்களைக் கொண்டுவந்துள்ளார்கள். ஆனாலும் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் அல்பஸ்ஸாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவைகள் அனைத்தையும் நான்கு கூற்றுக்குள் உற்படுத்தியுள்ளார்கள்.

முதலாவது கூற்று: லைலதுல் கத்ர் என்பது அடிப்படையிலே இல்லாத ஒன்றாகும். அல்லது உயர்த்தப்பட்டுள்ளது என்பதாகும். இந்தக்கருத்து மறுக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.

இரண்டாவது கூற்று: அந்த இரவு ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியில்தான் இருக்கின்றது. இந்தக்கூற்றும் பலவீனமானதாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: 'ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் இந்தக் குர்ஆன் இறக்கப்பட்டது.' (அல்பகறா:185)

மற்றுமோர் இடத்தில் 'இதை நாம் லைலதுல் கத்ர் என்ற இரவில் இறக்கி வைத்தோம்' (அல்கத்ர்:1)

இந்த இரண்டு அல்குர்ஆன் வசனங்களை வைத்துப் பார்க்கும்போது அது ரமழான் மாதத்தில்தான் வருகிறது என்பது தெளிவாகின்றது.

மூன்றாவது கூற்று: அந்த இரவு ரமழான் பிற்பகுதியல்லாத மற்றைய நாட்களில் ஏற்படும். இந்தக்கருத்தும் வலுவற்றதாகும்.

நான்காவது கூற்று: இந்தக்கருத்தே மிக வலுவானதாகும். அந்த இரவு ரமழானின் கடைசி பத்து இரவுகளில் தோன்றும் என்பதாகும். இதற்கு ஆதாரமாக முன்னால் கூறிய புஹாரீ, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் வருகின்ற ஹதீஸ் அமைந்துள்ளது. நபியவர்கள் கூறுகின்றார்கள்: 'அந்த இரவை கடைசி பத்து நாட்களிலும் தேடிக்கொள்ளுங்கள்'.

கடைசி பத்து இரவுகளிலும் ஒற்றைப்படை நாட்களில் ஏற்படும் என்பது மிக எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. நபியவர்கள் கூறுகின்றார்கள்: 'அந்த இரவை கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்களில் தேடிக்கொள்ளுங்கள்'. (புஹாரீ:2015, முஸ்லிம்:1165)

அதிலும் இருபத்தி ஏழாவது நாளில் ஏற்படுவது அதிகம் எதிர்பார்க்க முடியுமானதாக இருக்கின்றது. ஆனாலும், குறிப்பாக அந்த நாளில் மாத்திரம்தான் ஏற்படும் என்பது பிழையான கூற்றாகும். ஒரு சிலர் அந்த நாளில்தான் ஏற்படும் என்று நினைத்து அன்று மாத்திரம் இரவு வணக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில், 21 ஆம் இரவில் ஏற்பட்டது என்பதற்கு புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

அத்தோடு 23 ஆம் நாளில் ஏற்பட்டது என்பதற்கும் அப்துல்லாஹ் இப்னு உனைஸ் ரழியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபியின் வாயிலாக முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

அத்தோடு 25, 27 தினங்களில் ஏற்படலாம் என்பதற்கும்  ஆதாரமாக புஹாரியில் உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. எனவே, இந்த செய்திகளை வைத்துப் பார்க்கின்றபோது இருபத்தி ஏழாவது நாளில் மாத்திரம் ஏற்படும் என்தபற்கு மாறாக ஒற்றைப்படை நாட்களில் ஏற்படலாம் என்பது தெளிவாகின்றது.

இருபத்தி ஏழாவது நாளில் ஏற்படுவதற்கு மிக வாய்ப்புள்ளது என்பதற்கு ஆதாரமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (2149) என்ற கிரந்தத்தில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.

அதாவது, ஒரு மனிதர் நபிகளாரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நின்று தொழுவது கடினமாக உள்ளது. எனவே, எனக்கு ஓர் இரவை ஏவுங்கள். அந்த இரவில் அல்லாஹ் எனக்கு லைலதுல் கத்ருடைய பாக்கியத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நபியவர்கள் கூறினார்கள்: 'நீ ஏழாவது நாளை பற்றிப்பிடித்துக்கொள்!

அத்தோடு உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருபத்தி ஏழாவது தினத்தில்தான் வரும் என்று சத்தியம் செய்பவராக இருந்தார்.' (முஸ்லிம்:762)

இந்தக்கருத்தை அல்ஹாபிழ் இப்னு ஹஜர், அபூஸவ்ர், இப்னு குஸைமா, இப்னு தகீக் அல்ஈத், இப்னு தைமியா, அஷ்ஷவ்கானீ, இப்னு உஸைமீன் போன்ற அறிஞர்கள் ஆதரித்துள்ளார்கள்.

-        இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-        தொகுப்பு: அஸ்ஹர் இப்னு அபீஹனீபா