‘லாமியா’ எனும் நூலுக்கான விளக்கவுரை – 08

بسم الله الرحمن الرحيم

சென்ற தொடரில் குறிப்பிடப்பட்ட கவிதை அடியின் இரண்டாவது பகுதியில் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நபியுடைய உறவினர்களை நேசிப்பதைக் கொண்டு நான் வஸீலாத் தேடுகின்றேன்."

இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உறவினர்களை நேசிப்பது நற்காரியங்களில் ஓர் அம்சமாகும். நற்காரியங்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது மார்க்கம் அனுமதித்த வஸீலா முறையாகும்."

இக்கவிதை அடியின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தாரை நேசிப்பது அவசியம் என்பது மார்க்கம் கூறக்கூடிய ஒரு விடயம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தார் விடயத்தில் மனிதர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளை முன்பு குறிப்பிட்டிருக்கின்றோம். அவர்களது குடும்பத்தாரை நேசிப்பது மார்க்கத்தில் உள்ள காரியம் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களைப் பார்த்து: "நான் உங்களுக்கு எனது குடும்பத்தார் விடயத்தில் அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்" என்று மூன்று முறைகள் கூறினார்கள். (முஸ்லிம்)

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "எனது ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! எனது குடும்பத்தாருடன் சேர்ந்திருப்பதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தார் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் ஆவார்கள்." (புஹாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிமார்களும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நபியுடைய குடும்பத்தினர்களே! நிச்சயமாக அல்லாஹ் அசுத்தத்தை உங்களை விட்டும் போக்கிவிடவே விரும்புகின்றான். மேலும், உங்களை பரிசுத்தப்படுத்தவும் அவன் விரும்புகின்றான்." (அல்அஹ்ஸாப்: 33)

இவ்வசனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிமார் குறித்துப் பேசுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தாருக்கு நாம் செய்ய வேண்டிய உரிமைகளில் மிக மகத்தானது அவர்கள் மீது ஸலவாத் கூறுவதாகும். தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் அவர்கள் மீது ஸலவாத் ஓதுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "நான் வஸீலாத் தேடுகின்றேன்" என்று இக்கவிதை அடியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏதாவது ஒரு காரியத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் நெருக்கத்தை தேடுவதையே வஸீலா என்ற வார்த்தையின் மூலம் நாடப்படுகின்றது. இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தாரை நேசிப்பதைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடியுள்ளார்கள். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கும்பத்தாரை நேசிப்பது ஒரு வணக்கமாகும். வணக்க வழிபாடுகள் மற்றும் நற்காரியங்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவர்கள் எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் ஈமான் கொண்டு விட்டோம். எனவே, எங்களுக்கு எமது பாவங்களை மன்னித்தருள்வாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக! என்று கூறுவார்கள்." (ஆலுஇம்ரான்: 53)

மூன்று நபர்கள் இரவில் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தபோது ஒரு பெரிய கல் அவர்களது குகையை மூடிக்கொண்டது. அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்த நற்காரியங்களை அல்லாஹ்விடம் முன்வைத்து துஆச் செய்தார்கள். அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலாத் தேடுகின்ற முறைகளில் ஒன்றே அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் கொண்டு வஸீலாத் தேடுவதாகும். மேலும், ஸாலிஹான மனிதர்களது துஆவைக் கொண்டும் வஸீலாத் தேடலாம். வஸீலா பற்றிய விரிவான தகவல்களை அறிந்து கொள்ள இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களது "அத்தவஸ்ஸுல் வல்வஸீலா" என்ற நூலையும் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களது "அத்தவஸ்ஸுல் அன்வாஉஹு வஅஹ்காமுஹு" என்ற நூலையும் பார்க்கவும்.

-        இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-        அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்