‘லாமியா’ எனும் நூலுக்கான விளக்கவுரை – 04

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகைகளில் ஆரம்பத் தக்பீருக்குப் பின்பு ஓதக்கூடிய துஆவிலே பின்வருமாறு கூறுவார்கள்: "சத்தியத்திலிருந்தும் எந்த விடயங்களில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டதோ அந்த விடயங்களில் உனது அனுமதியின் பிரகாரம் எனக்கு நேர்வழி வழங்குவாயாக! நிச்சயமாக நீ நாடியவருக்கு நேரான பாதையின் பால் வழி காட்டுகின்றாய்.” (முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்வருமாறு ஒரு துஆவைக் கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள்: "எனது இரட்சகனே! எனக்கு நேர்வழி வழங்குவாயாக! இன்னும் என்னை நேர்வழிப்படுத்தி சீர்திருத்துவாயாக!” (முஸ்லிம்)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ஹஸன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்கு வித்ர் தொழுகையின் குனூத்தில் ஓதுமாறு கற்றுக்கொடுத்த துஆவில் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "என் இரட்சகனே! நீ நேர்வழிப்படுத்தியவர்களில் எனக்கும் நேர்வழி வழங்குவாயாக!...” (அஹ்மத், அஸ்ஸஹீஹுல் முஸ்னத்)

இந்த ஆதாரங்கள் யாவும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் நேர்வழியைக் கேட்டு துஆச் செய்ய வேண்டும் என்பதை தூண்டியிருக்கின்றன. இன்னும், அவ்வாறு கேட்பவர்களுக்கு நேர்வழி வழங்கப்படும் என்பதற்கும் இவ்வாதாரங்கள் சான்றாக அமைந்திருக்கின்றன.

நேர்வழியின் வகைகள்

நேர்வழி நான்கு வகைப்படும்:

1. பொதுவான நேர்வழி: இது அனைத்துப் படைப்பினங்களையும் பொதிந்து கொள்ளக்கூடிய நேர்வழியாகும். இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், சடப்பொருட்கள் யாவற்றுக்கும் வழங்கப்பட்ட நேர்வழியை இது குறிக்கும். இவ்வுலகில் எவ்வேலையைச் செய்வதற்கு உயிரினங்கள் யாவும் படைக்கப்பட்டனவோ அவ்வேலையைச் செய்வதற்கு அல்லாஹ் அவைகளுக்கு வழங்கக்கூடிய நேர்வழியே இதுவாகும். நாவின் மூலம் பேசுவதற்கும், கையின் மூலம் பிடிப்பதற்கும், காலின் மூலம் நடப்பதற்கும் அல்லாஹ் நேர்வழி வழங்கியிருக்கின்றான் என்பது இதன் உதாரணங்களில் உள்வாங்கப்படக்கூடியனவாகும்.

2. எத்திவைக்கப்படுதல், தெளிவுபடுத்தப்படல் ஆகியவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் நேர்வழி: அதாவது, பிறருக்கு நல்லவற்றையும் தீயவற்றையும் அறிவித்துக் கொடுத்தல் இதன் மூலம் நாடப்படுகின்றது. இந்த நேர்வழி அனைத்துப் படைப்பினங்களுக்கும் சென்றடையக்கூடிய ஒரு பூரணமான நேர்வழியன்று.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "ஸமூத் கூட்டத்தாருக்கு நாம் நேர்வழி வழங்கினோம். ஆனால், அவர்கள் நேர்வழியைவிட குருட்டுத்தன்மையை விரும்பிக் கொண்டார்கள்.” (புஸ்ஸிலத்:17)

நாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம், நேர்வழி காட்டினோம், அவர்களுக்கு நல்லவற்றை அறிவித்துக் கொடுத்தோம் ஆனால் அவர்கள் அவைகளின் மூலம் நேர்வழி பெறவில்லை என்பது இதன் விளக்கமாகும்.

மேலும், இந்த நேர்வழிக்கு ஆதாரமாக பின்வரும் அல்குர்ஆன் வசனமும் முன்வைக்கப்படுகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) நிச்சயமாக நீங்கள் நேரான பாதையின் பால் நேர்வழி காட்டுகின்றீர்கள்.” (அஷ்ஷூரா: 52)

3. அனுகூலம், உள்ளுணர்வு ஆகியவைகளின் மூலம் கிடைக்கும் நேர்வழி. இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் குறிப்பானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நேர்வழியின் பால் அழைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு நேர்வழி வழங்குவது அல்லாஹ்வுடைய பொறுப்பாக உள்ளது. இதனையே பின்வரும் அல்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) நீங்கள் விரும்பியவர்களையெல்லாம் உங்களுக்கு நேர்வழிப்படுத்த முடியாது.” (அல்கஸஸ்: 56)

4. சுவர்க்கம் மற்றும் நரகம் நுழைவதற்கு வழங்கப்படும் நேர்வழி.

இதனையே பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் குறித்து நிற்கின்றன. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களோ அவர்களது ஈமானின் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி வழங்குவான். இன்பமான சுவனச் சோலைகளிலே அவர்களுக்குக் கீழால் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.” (யூனுஸ்: 9)

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அநியாயமிழைத்தவர்களையும் அவர்களது மனைவிமார்களையும் அவர்கள் அல்லாஹ்வையன்றி வணங்கிக்கொண்டிருந்தவைகளையும் ஒன்று திரட்டுங்கள். அவர்கள் அனைவரையும் நரகத்தின் பாதையின் பால் நேர்வழிப்பத்துங்கள்” (அஸ்ஸாப்பாத்: 22,23)

அல்லாஹ்விடத்தில் இஸ்லாத்தையும் ஈமானையும் அடைந்து கொள்தவற்கான நேர்வழியைப் பெற்றுத்தருமாறு துஆச் செய்வது எமது கடமையாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

நேர்வழியைப் பெற்றுத்தரும் காரணங்கள்

அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் நேர்வழியைப் பெற்றுத் தரக்கூடிய ஐந்து காரணங்களை ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவைகளை இங்கு சுருக்கமாக முன்வைக்கின்றோம்.

1.   அல்குர்ஆனை ஓதுதல், அதனை ஆராய்ச்சி செய்தல், அதைக் கொண்டு நற்காரியங்களைப் புரிதல், அதனுடைய கருத்துக்களை விளங்குதல், அதன் கட்டளைகளுக்குத் தாழ்ந்து செல்லல், விரிந்த உள்ளத்துடன் அதனைச் செவிமடுத்தல் ஆகியன உள்ளங்களுக்கு நேர்வழியைப் பெற்றுத்தரக்கூடிய, இன்னும் உள்ளங்களை சீராக்கக்கூடிய விடயங்களாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இது வேதமாகும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது பயபக்தியுடையவர்களுக்கு நேர்வழிகாட்டக்கூடியதாக உள்ளது.” (அல்பகறா: 2)

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மனிதர்களே! நிச்சயமாக உங்களிடத்தில் உங்கள் இரட்சகனிடமிருந்து நல்லுபதேசமும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியதும், விசுவாசிகளுக்கு நேர்வழி வழங்கக்கூடியதும், அருள் புரியக்கூடியதும் வந்துவிட்டது.” (யூனுஸ்: 57)

இந்த வசனம் அல்குர்ஆன் குறித்தே இவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றது.

இதுபோன்ற ஆதாரங்கள் குர்ஆனை ஓதி அதனை விளங்கி செயற்படுவதின் மூலம் நேர்வழியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

2.   அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவது, அதன் பால் திரும்புவது ஆகியன ஒரு முஸ்லிமுக்கு நேர்வழியைப் பெற்றுத் தரும் காரியங்களில் உள்ளவைகளாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவனுடைய தூதர் உங்களிடத்தில் இருந்து கொண்டு, அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.” (ஆலுஇம்ரான்: 101)

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்துவிட்டது. தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு அவ(ன் அருளிய நேர்வழியி)னைப் பலமாகப் பிடித்துக் கொள்கிறாரோ அவர் தன் இரக்கத்திலும், அருளிலும் அவன் புகச் செய்வான். இன்னும், தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.” (அந்நிஸா: 174,175)

இது போன்ற வசனங்கள் அல்லாஹ்வினது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நேர்வழியின் பால் சென்றடைவார் என்பதை உணர்த்துகின்றன.

3. அல்லாஹ்வுக்கு வழிப்படுகின்ற விடயத்தில் முயற்சியெடுத்தல் ஒரு முஸ்லிமுக்கு நேர்வழியைப் பெற்றுத்தரும் காரணங்களில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எவர்கள் எமது விடயங்களில் முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்கு திட்டமாகவே நாம் எமது பாதைகளின் பால் நேர்வழி செலுத்துவோம். மேலும், நிச்சயமாக அல்லாஹ் நன்மை புரிவோருடன் இருக்கின்றான்.” (அல்அன்கபூத்: 69)

4. நபிமார்கள், நல்லோர்கள் ஆகியோரின் வரலாற்றைக் கற்றுக் கொள்வதும், அவைகளை முன்மாதிரியாகவும், படிப்பினையாகவும் நோக்கி செயற்படுவதும் நேர்வழியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவர்களுடைய சரித்திரங்களிலே புத்தியுடையோருக்கு நிச்சயமாக படிப்பினை இருக்கிறது. இது கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை. மாறாக, இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விடயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.” (யூஸுப்: 111)

5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டுப்படுவதும் நேர்வழியைப் பெற்றுத் தரும் அம்சங்களில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நீங்கள் அவருக்கு வழிப்பட்டால் நேர்வழி அடைவீர்கள், அத்தூதருக்குத் தெளிவாக எத்திவைப்பதையன்றி வேறெதுவும் கடமையாக்கப்படவில்லை.” (அந்நூர்: 54)

இந்த ஐந்து விடயங்களுமே அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் முன்வைத்த நேர்வழியைப் பெற்றுத் தரும் காரணங்களில் உள்ளடங்கக்கூடியவையாகும்.

எனவே, இது போன்ற நற்கருமங்களில் நாம் எம்மை ஈடுபடுத்தி அல்லாஹ்வினது நேர்வழியைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்