‘லாமியா’ எனும் நூலுக்கான விளக்கவுரை – 03

بسم الله الرحمن الرحيم

முதல் கவிதைவரிக்கான விளக்கம்

يا سائلي عن مذهبي وعقيدتي   رزق الهدى من للهداية يسئل

'என்னுடைய போக்கைப் பற்றியும் அகீதாவைப் பற்றியும் கேட்பவனே!

நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்'

விளக்கம்:

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கே இக்கவிதை அடிகளின் மூலம் பதிலளித்திருக்கிறார்கள். அந்த அமைப்பில் எத்தனையோ புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன: தத்முரிய்யா, அல்வாஸிதிய்யா, அல்ஹமவிய்யா, அத்தபூதகிய்யா, ஸஹீஹ் முஸ்லிம், அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா, ஜாமிஉ பயானில் இல்ம் வபள்லிஹீ, இப்னு அபீஸமனைன் என்பவருடைய உஸூலுஸ்ஸுன்னா போன்ற நூற்களாகும்.

கேள்வி கேட்பது அறிவைத்தேடுகின்ற மற்றும் மார்க்கத்தில் விளக்கத்தைப் பெறுகின்ற சாதனங்களில் ஒரு சாதனமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' (அந்நஹ்ல்: 43)

மத்ஹப் என்ற சொல்லின் விளக்கம்

இங்கு குறிப்பிடப்பட்ட மத்ஹப் என்ற சொல்லின் நாட்டம் ஒரு மனிதன் மார்க்கத்தை விளங்குவதின்பால் செல்லக்கூடிய பாதை ஆகும். மாறாக, அறியப்பட்ட நான்கு மத்ஹபுகளுமல்ல. ஏனென்றால், நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவதற்கு குர்ஆனிலோ, சுன்னாவிலோ ஆதாரம் இல்லை. மாற்றமாக, குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்ற வேண்டும் என்பதையே ஆதாரம் தெரிவிக்கின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்.' (அல்அஃராப்: 03)

சிலர் கூறுவதுபோல் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது அவசியம் என்று நாம் கூறினால் அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ - ரழியல்லாஹு அன்ஹும் - , தாபிஈன்கள் ஆகியோர் நேர்வழியில் இருக்கவில்லை என்று கூறுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். ஆதாரத்திற்கு மாற்றமானதாக இருந்தாலும் ஒரு மத்ஹபைப் பின்பற்ற வேண்டும், அதிலிருந்து வெளியேற முடியாது என்று யாராவது நம்பிக்கை கொண்டால் அது மகத்தான ஒரு வழிகேடாகும்.

அதேபோன்று, ஒருவர் நான் ஹனபீ, நான் ஹன்பலீ, நான் ஷாபிஈ, நான் மாலிகீ என்று கூறுவதைவிடுத்து நான் எங்கு சத்தியத்தையும் ஆதாரத்தையும் கண்டு கொள்வேனோ அதை எடுத்துக் கொள்வேன் என்று கூறுவதே மிகச் சரியான நிலைப்பாடாகும்.

இமாம்களான அபூஹனீபா, மாலிக், ஷாபிஈ, அஹ்மத் ஆகிய அனைத்து இமாம்களும் 'ஹதீஸ் சரியாக இருந்தால் அதுவே எனது மத்ஹபாகும்' என்று கூறியதாக அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஒருவர் அறிவிப்பாளர் வரிசையையும் அது சரியானது என்பதையும் அறிந்து கொண்ட பின்பும் ஸுப்யானுடைய கூற்றை எடுத்துக்கொள்வது குறித்து நான் ஆச்சரியப்படுகின்றேன்.'

அஷ்ஷெய்ஹ் இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் மத்ஹப் என்ற வார்த்தை குறித்து பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'இப்னு மன்ழூர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மத்ஹப் என்றால் ஒரு மனிதன் பயணிக்கக்கூடிய ஒரு கொள்கையாகும்' என்று கூறியுள்ளார்கள்.

அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் மத்ஹப் என்ற வார்த்தை குறித்துப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள். 'மத்ஹப் ஒரு மனிதன் செல்லக்கூடிய கொள்கையும் வழியுமாகும்.'

அத்தோடு, இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை அடியில் 'அகீதாவைப் பற்றியும்' என்ற வார்த்தையைக் கூறியிருக்கின்றார்கள்.

அகீதா என்ற வார்த்தை குறித்து அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'அரபுமொழி அடிப்படையில் அகீதா, அல்இஃதிகாத் என்ற வார்த்தை இணைத்தல், கட்டுதல் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றது.'

பரிபாசையில் அகீதா என்றால் புத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுதியான ஒரு சட்டமாகும். அது நடைமுறைக்கு உடன்பட்டால் சரியான கொள்கையாகவும் நடைமுறைக்கு முரண்படுமாயின் மோசமான கொள்கையாகவும் காணப்படும். (ஷர்ஹுல் வாஸிதிய்யா: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்)

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்.'

ரிஸ்க் என்ற வார்த்தை குறித்த சில விளக்கங்களை அஷ்ஷெய்ஹ் இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்: 'ரிஸ்க் இரண்டு வகைப்படும்.

1.         பொதுவான ரிஸ்க்: இது எந்தவித விதிவிலக்கும் இல்லாத பொதுவான ரிஸ்க்காகும். உதாரணம்: அல்லாஹ் மனிதர்களுக்கு காற்று, உணவு, குடிபானம் போன்றவற்றை ரிஸ்க்காக வழங்கியிருக்கின்றான். இந்த வகையான ரிஸ்க் காபிர், முஸ்லிம், மிருகங்கள், பறவைகள் ஆகிய அனைத்தையும் பொதிந்து கொள்ளும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இன்னும் உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுள்ள நிலைமையிலே அன்றி எந்தவோர் உயிரினமும் பூமியில் இல்லை.' (ஹூத்: 06)

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு இரட்சகன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக! 'நீங்கள் உண்மையாளராக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.' (அந்நம்ல்: 64)

2.         குறிப்பான ரிஸ்க்: இதுவே உலகிலும் மறுமையிலும் தொடர்ந்தேர்ச்சியாகப் பயனளிக்கக்கூடிய பிரயோசனம் அளிக்கும் ரிஸ்க்காகும்.

இவ்வகையைச் சார்ந்த ரிஸ்க் இரண்டு விடயங்களைப் பொதிந்து கொள்கின்றது.

முதலாவது: உள்ளங்களுக்கு அல்லாஹ் அறிவையும் ஈமானையும் ரிஸ்க்காக வழங்குதல்.

இரண்டாவது: உடலுக்கு அல்லாஹ் ஹலாலான ரிஸ்க்கை வழங்குதல்.

இவ்வகையான ரிஸ்க்கிற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது. தாரிக் இப்னு அஷ்யம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்குப் பின்வருமாறு கற்றுக் கொடுப்பார்கள்: 'என் இரட்சகனே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு இரக்கமளிப்பாயாக! எனக்கு நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு ரிஸ்க் அளிப்பாயாக!' பின்பு அவர்கள் 'இந்த வார்த்தைகள் உமக்கு உமது உலக வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் ஒன்று சேர்த்துவிடும்' என்று கூறுவார்கள்.' (முஸ்லிம்)

நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும் என்று இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதன் மூலம் நாடப்படுவது இரண்டாவது வகையைச் சார்ந்த ரிஸ்க்கேயாகும்.

தனக்கு ரிஸ்க் வழங்குமாறு ஓர் அடியான் அல்லாஹ்விடம் துஆச் செய்தால் இந்த இரண்டாவது வகையான ரிஸ்க்கையே உள்ளத்தில் கொண்டுவரச் செய்து துஆச் செய்வது அவசியமாகும்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்.'

இக்கவிதை அடியில் இமாமவர்கள் எவர் அல்லாஹ்விடத்தில் நேர்வழியைக் கேட்கிறாரோ அவர் அதைப் பெற்றுக்கொள்வார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இது குறித்து அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'நேர்வழியைப் பெற்றுத்தரும் காரணங்களில் ஒன்றே அதை அல்லாஹ்விடம் வேண்டுவதும், கேட்பதுமாகும் என்பதை இந்தக் கவிதை வரி சுட்டிக்காட்டியுள்ளது.'

நேர்வழியைக் கேட்பவர்களுக்கு நேர்வழி வழங்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள் மார்க்கத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத்தஆலா கூறியதாகக் கூறுகின்றார்கள்: 'எனது அடியார்களே! எவருக்கு நான் நேர்வழி வழங்கியிருக்கின்றேனோ அவரைத் தவிர நீங்கள் அனைவரும் வழிதவறியவர்களே! எனவே, என்னிடம் நீங்கள் நேர்வழியைக் கேளுங்கள். நான் உங்களுக்கு நேர்வழி அளிப்பேன்.' (முஸ்லிம்)

-           இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-           அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

Lesson_02

[audio:http://www.salafvoice.org/audio_db/59883191.mp3]

Click Here to Download