‘லாமியா’ எனும் நூலுக்கான விளக்கவுரை – 02

بسم الله الرحمن الرحيم

'லாமியா' நூல் பற்றிய அறிமுகம்

நூலின் பெயர்: லாமியா

தொகுத்தவர்: ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்

உள்ளடக்கம்: இந்நூல் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினருடைய கொள்கையைத் தெளிவுபடுத்தும் வகையில் கவிதை அடிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய அகீதாவின் அனைத்து விடயங்களையும் இத்தொகுப்பு பொதிந்திருக்காவிட்டாலும் மிக முக்கியமான 15 விடயங்களை இத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கின்றது.

அவையாவன:

1. ஸஹாபாக்களுடைய விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு.

2. நல்லமல்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது பற்றிய குறிப்பு.

3. குர்ஆன் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கை.

4. குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்துமே அகீதா எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கம்.

5. அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கோட்பாடு.

6. மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்க முடியும் என்பது தொடர்பான தகவல்கள்.

7. அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் என்பது குறித்த செய்திகள்.

8. மீஸானுடைய விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் நம்பிக்கை.

9. ஹவ்ள் பற்றிய தெளிவு.

10. ஸிராத் என்ற பாலம் குறித்த கருத்துக்கள்.

11. சுவர்க்கம் பற்றிய வர்ணணை.

12. நரகத்தின் கொடூரம்.

13. கப்ரின் இன்பங்கள், வேதனைகள் பற்றிய உண்மையான நிலைப்பாடு.

14. மத்ஹபுடைய நான்கு இமாம்களின் அகீதாவின் நிலவரம்.

15. ஸலபுகளைப் பின்பற்றுதலின் அவசியமும் பித்அத் குறித்த எச்சரிக்கையும்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்

பெயர்: அஹ்மத் இப்னு அப்தில் ஹலீம் இப்னு அப்திஸ்ஸலாம்

இடுகுறிப் பெயர்: அபுல் அப்பாஸ்

சிறப்புப் பெயர்: ஷெய்ஹுல் இஸ்லாம்

குடும்ப அந்தஸ்து: அல்ஹர்ரானி, அந்நுமைரி

பிறப்பு: ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பத்தாவது தினம் திங்கட்கிழமை ஹர்ரான் என்ற பிரதேசத்தில் பிறக்கின்றார்கள். மொங்கோலியர்கள் ஹர்ரான் பிரதேசத்தை ஆக்கிரமித்து மக்களுடன் அநீதியான முறையில் நடந்து கொள்ளும் ஒரு காலத்திலே இவர் பிறக்கிறார்.

பின்பு இவர்கள் ஹிஜ்ரி 667ம் ஆண்டு தனது தந்தையுடன் திமிஷ்க் - டமஸ்கஸ் - நகரத்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். அங்கே அவர் வளர்ந்து கல்வியை ஆரம்பிக்கின்றார்.

கல்வி: இவர் சிறிய வயதில் அல்குர்ஆனை மனனம் செய்தார். பின்பு ஹதீஸ், தப்ஸீர், அறபு ஆகிய துறைகளில் எழுதப்பட்ட நூட்களை வாசிக்க ஆரம்பித்தார். இப்பருவத்திலிருந்தே இவர் நூட்களை எழுதவும் ஆரம்பித்தார்.

இவர் 17 வயதை அடைந்த போது மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பணியைத் திறம்படச் செய்தார். இவருடைய தந்தை அப்துல் ஹலீம் அவர்கள் அல்ஜாமிஉல் உமவி என்ற பள்ளிவாசலில் மனிதர்களுக்கு கற்பிப்பவராக இருந்தார்கள். அவர் ஹிஜ்ரி 682ம் ஆண்டு மரணித்த போது அப்பணியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஈடுபடுகின்றார்கள். அப்போது அவருக்கு 21 வயதாக இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆத் தொழுகையின் பின் மக்களுக்கு அல்குர்ஆன் விரிவுரை பற்றிய பாடத்தை நடாத்தினார்.

இவர் யுத்தங்களிலும் சத்தியத்தை எடுத்துரைப்பதிலும் தைரியசாலியாகக் காணப்பட்டார். அதன் காரணமாக அவருடைய எதரிகள் அதிகரித்தனர். பித்அத்வாதிகள் அவரை நோவினைக்கு ஆளாக்கினர். பல தடவைகள் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆசிரியர்கள்:

1. அப்துல் ஹலீம் இப்னு தைமியா

2. ஸைனுத்தீன்

3. மஜ்துத்தீன் இப்னு அஸாகிர்

மாணவர்கள்:

1. ஷம்சுத்தீன் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்சிய்யா

2. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் அத்தஹபீ

3. இஸ்மாஈல் இப்னு உமர் இப்னு கஸீர்

4. முஹம்மத் இப்னு அப்தில் ஹாதி அல்மக்திஸி

5. ஸைனுத்தீன்

6. இல்முத்தீன்

எழுதிய நூட்கள்:

1. அல்இஸ்திகாமத்

2. இக்திளாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்

3. பயானுல் பிர்கதின் நாஜியா

4. பயானு தல்பீஸில் ஜஹ்மிய்யா

5. தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி

6. அத்தத்முரிய்யா

7. ரப்உல் மலாம் அனில் அஇம்மதில் அஃலாம்

8. அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா

9. ஷர்ஹு ஹதீஸின் நுஸூல்

10. அஸ்ஸாரிமுல் மஸ்லூல் அலா ஷாதிமிர் ரஸூல்

11. அல்அகீததுல் வாஸிதிய்யா

12. அல்புர்கான் பய்ன அவ்லியாஇர் ரஹ்மான் வஅவ்லியாஇஷ் ஷைத்தான்

13. முஃதகதாது அஹ்லில் ளழால்

14. மின்ஹாஜுஸ் ஸுன்னதின் நபவிய்யா

மரணம்:

இவர்கள் ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 726ம் ஆண்டு சிறைச்சாலையில் நுழைகின்றார்கள். இவர்கள் நபிமார்கள், ஸாலிஹான அடியார்களின் கப்ருகளைத் தரிசிக்கப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார்கள். அதன் காரணமாகவே இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையில் இவர்கள் நோய்வாய்ப்படுகின்றார்கள். ஹிஜ்ரி 728ம் ஆண்டு துல்கஃதா மாதம் இருபதாவது தினம் திங்கட்கிழமையன்று இவர்கள் மரணிக்கின்றார்கள். அப்போது அவருடைய வயது 67ஆகக் காணப்பட்டது.

மனிதர்கள் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு நோய் ஏற்பட்டதை அறிந்திருக்கவில்லை. அவருடைய மரணச் செய்தியை அம்மக்கள் செவிமடுத்த போது அவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் அந்த சிறைச்சாலையில் ஒன்று சேர்ந்தனர். ளுஹருக்குப் பின் அவருக்கு ஜனாஸா தொழுவிக்கப்பட்டது. இவருடைய ஜனாஸாவில் 50,000 முஸ்லிம்கள் கலந்துகொண்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அஸருக்குச் சற்று நேரத்திற்கு முன் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி ஏனைய அறிஞர்கள் கூறிய கருத்துக்கள்

1. இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு விடயத்தை ஒன்று சேர்த்தால் அதனை உடனடியாக மனனமிடுவார்கள். அவர் விவேகமுடையவராகவும் அதிகம் மனனம் செய்தவராகவும் இருந்தார். தப்ஸீர் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கலைகளில் இமாமாகவும் இருந்தார். பிக்ஹுடைய விடயத்தில் அறிவுடையவராக இருந்தார்.... அறிஞர்களின் கருத்து முரண்பாடுகளை நன்கறிந்தவர்களாக இருந்தார். மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள், கிளை அம்சங்கள், அறபு இலக்கணம், அறபு மொழி போன்ற துறைகளிலும் மிக்க அறிவுள்ளவராக இருந்தார்.'

2. இப்னு தகீக் அல்ஈத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நான் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடன் இணைந்த போது அனைத்துவகையான அறிவுகளும் அவருடைய இரு கண்களுக்கு மத்தியில் காணப்பட்ட ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன். அவர் விரும்புவதை எடுப்பார். அவர் விரும்பாத விடயத்தை விட்டுவிடுவார்.'

3. அல்மிஸ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'அல்லாஹ்வுடைய வேதம், அவனுடைய தூதுருடைய சுன்னா பற்றி மிக அறிந்தவராகவும் அவ்விரண்டையும் நன்றாகப் பின்பற்றுபவராகவும் நான் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தவிர வேறுயாரையும் காணவில்லை.'

4. இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விவேகத்திலும், விரைவாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்வதிலும் அத்தாட்சியாக இருந்தார்கள். குர்ஆன், சுன்னா, கருத்து முரண்பாடு பற்றிய அறிவில் தலையாகக் காணப்பட்டார்கள்.'

5. அஸ்ஸுப்கி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக. இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களை ஒரு மடையனைத் தவிர அல்லது மனோ இச்சையைப் பின்பற்றுபவனைத் தவிர வேறுயாரும் வெறுக்கமாட்டார்கள்.'

6. இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஓர் இமாமாவார். பிக்ஹ் விடயத்தில் தேர்ச்சி பெற்றவரும் ஆராய்ச்சியாளரும் ஹதீஸ் கலைவல்லுநரும் மனனம் செய்தவரும் விரிவுரையாளரும் அடிப்படை அறிவுள்ளவரும் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவருமாவார்.'

7. அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இந்த மனிதர் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் ஸலபுகளின் அடிச்சுவடுகளிலிருந்தும் ஒளிமயமான புத்தியுடன் அறிவை ஒன்று சேர்க்கின்ற விடயத்தில் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஓர் அத்தாட்சியாகவும் இருந்தார்.'

குறிப்பு: இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய 'லாமியா' என்ற இக்கவிதைத் தொகுப்புக்கு பல அறிஞர்கள் விரிவுரை செய்திருக்கின்றார்கள். அவற்றில் பிரதான மூன்று விரிவுரை நூட்களை அடிப்படையாக வைத்தே இக்கவிதைத் தொகுப்பை உங்களுக்கு நான் விளக்கியிருக்கின்றேன். அவையாவன:

1. அத்தஃலீகாதுல் ஹிஸான்: அஷ்ஷெய்ஹ் அப்துல் ஹமீத் அவர்களுக்குரியது.

2. தன்பீஹுல் அனாம்: அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் அவர்களுக்குரியது.

3. அல்பவாஇதுல் பஹிய்யா: அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஹிஸாம் அவர்களுக்குரியது.

இவர்கள் மூவரும் யமனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆலிம்களில் ஒருவராகிய அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் மாணவர்களாவர்.

-           அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

Lesson_01

[audio:http://www.salafvoice.org/audio_db/48802960.mp3]

Click Here to Download