‘லாமியா’ எனும் கவிதைத் தொகுப்புக்கான விளக்கவுரை – 01

بسم الله الرحمن الرحيم

முன்னுரை

அல்லாஹுத்தஆலா இவ்வுலக வாழ்க்கையையும் மரணத்தையும் படைத்த நோக்கம் யார் மனிதர்களில் நல்லமல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதைச் சோதித்துப் பார்க்கவேயாகும் என்பது அல்குர்ஆன் வழங்குகின்ற போதனையாகும். எனவே, அல்லாஹ் எதிர்பார்க்கின்ற முறையில் நல்லமல்களில் ஈடுபட்டு அவனுடைய சுவனத்தை அடைந்து கொள்வது எமது பொறுப்பாகும்.

நல்லமல்களைச் செய்வதாயின் அதற்கான அடிப்படை அறிவுகள் எம்மிடத்தில் காணப்பட வேண்டும். எப்பொழுது ஒரு முஸ்லிம் அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஸலபுகளின் வழிமுறையில் விளங்கி அதனை அமுல்படுத்துகின்றானோ நிச்சயமாக அவனுடைய அமல்கள் சீராகும் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ் எமக்குப் புரிந்த அருள்களில் ஒன்றாகப் பலகத்துறை எனும் கிராமத்தில் அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஸலபுகளின் விளக்கத்தில் பிரச்சாரம் செய்வதற்கான அத்தார் அஸ்ஸலபிய்யா என்ற ஒரு பள்ளிவாசலை அமைத்துத் தந்திருக்கின்றான். தொடர்ந்தேர்ச்சியாக இப்பள்ளிவாசலில் இப்பிரச்சாரம் இடைநிறுத்தப்படாமல் அல்லாஹ்வின் உதவியுடன் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. குறிப்பாக அகீதா துறையில் பல வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

இத்தொகுப்பைப் பொறுத்தவரையில் இது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மக்ரிப் தொழுகைக்குப் பின் அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் நடைபெற்றுவந்த அகீதா வகுப்பின் எழுத்து வடிவமாகும். இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கவிதை அமைப்பில் தொகுத்த 'லாமியா' என அழைக்கப்படக்கூடிய சிறு நூலுக்கான விளக்க வகுப்பே இதுவாகும். இந்நூலிலே இமாமவர்கள் இஸ்லாமிய அகீதாவுடன் தொடர்புபட்ட பல அம்சங்களை இடம்பெறச் செய்திருக்கின்றார்கள்.

அகீதா என்பது இஸ்லாமியத் துறைகளிலே மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஏனைய துறைகளைவிட பல விஷேடத் தன்மைகளை அகீதாக் கல்வி பொதிந்திருக்கின்றது. ஒரு முஸ்லிம் வழிகேட்டில் இருக்கின்றானா? நேர்வழியில் இருக்கின்றானா? என்பதைத் தீர்மானிக்கும் ஒரேயொரு கல்வி அகீதாவாகும். மேலும், அது ஒரு முஸ்லிம் இஸ்லாத்தில் இருக்கின்றானா? அல்லது குப்ரில் இருக்கின்றானா? என்பதைப் பிரித்துக் காட்டும் ஒரு கல்வியாகும். இதுபோன்ற அம்சங்களை வரலாறு, பிக்ஹ், ஹதீஸ் போன்ற ஏனைய துறைகள் பொதிந்திருக்கமாட்டாது. எனவே, இதன் மூலம் அகீதாவின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் தனது மார்க்கக் கல்வியை ஆரம்பமாக அகீதாவைக் கற்பதைக் கொண்டே ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், எமது முன்னோர்களாகிய நபிமார்கள், ஸஹாபாக்கள் அவர்களது பிரச்சாரத்தை அகீதாவிலிருந்தே ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனால், இன்று சில முஸ்லிம் சகோதரர்கள் அகீதாவை ஓர் இடத்தில் வைத்துவிட்டு ஸஹாபாக்கள் முதல் நவீன அறிஞர்களின் காலம்வரை கருத்து முரண்பாடுகள் காணப்பட்ட பிக்ஹ் விடயங்களை தலையாய அம்சமாக எடுத்து அதிலிருந்தே தனது கல்வியையும் அழைப்புப் பணியையும் ஆரம்பிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எதிர்த்தரப்புவாதிகளுக்கு எவ்வாறு மறுப்பு வழங்குவது? அவர்களுடைய ஆதாரங்களுக்கு எவ்வாறு பதில் கொடுப்பது? போன்ற சிந்தனைகளிலும், எதிர்த்தரப்புவாதிகளுடன் விரோதத்தை வெளிப்படுத்திக் கொண்டும் இவர்கள் காலத்தை கடத்துகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வுடைய விடயத்திலும் தூதருடைய விடயத்திலும் எனது கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும்? ஸஹாபாக்கள், அல்குர்ஆன், சுவர்க்கம், நரகம், மறுமை நாள், கப்ரு வாழ்க்கை ஆகிய விடயங்களில் நாம் எவ்வாறு ஈமான் கொண்டிருக்க வேண்டும் என்பதை அறியாதவர்களாக பல முஸ்லிம் சகோதரர்கள் காணப்படுகின்றார்கள்.

இந்த நாட்டில் காபிர்களுக்கு முஸ்லிம்கள் அடிமைப்படுத்தப்படுவது போன்ற நிலைமைகளை நாம் அவதானிக்கின்றோம். இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனை நம்பி வாழக்கூடிய முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக இருக்கக்கூடிய காபிர்களிடம் உதவிக்கரம் நீட்டி, அவர்களை அஞ்சி, மார்க்கம் மற்றும் அல்லாஹ்வின் திருப்தி ஆகியவற்றை சற்றும் பாராது அவர்களைத் திருப்திப்படுத்த முயல்வதாகும். இவர்களை சீர்திருத்த வேண்டிய இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்ற பெயரில் செயற்படக்கூடிய சகோதரர்கள் அல்லாஹ்வின் எதிரிகளாகிய காபிருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாது அவர்கள் எமது சகோதரர்கள், அவர்களுடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும், அவர்களது வைபவங்களில் நாம் கலந்து கொண்டு இனநல்லுறவை வலுப்படுத்த வேண்டும் எனக்கூறி அந்நிய மதத்தவர்களின் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு இவ்வழைப்பாளர்களின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. முஸ்லிம் தலைவர்களே முஸ்லிம்களை மேலும் வழிகேட்டில் நுழைவிக்கக்கூடிய ஒரு காட்சி எமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சரியான அகீதாவை இலங்கை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ளாதது தான் இதற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றது. லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை விரும்பும் முஸ்லிம்களோடு எவ்வாறு அன்பாக நடந்து கொள்ள வேண்டும்? அவ்வார்த்தையை மறுக்கும் அதனுடைய எதிரிகளாகிய காபீர்களுடன் எவ்வாறு விரோதமாகச் செயற்பட வேண்டும் என்பதை அகீதா கல்வி போதிக்கின்றது. இதனைச் சரியான முறையில் கற்று அதனை எமது வாழ்வில் நாம் அமுல்படுத்தினால் காபிர்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது என்பதில் இரண்டாவது கருத்துக் கூற எவருக்கும் முன்வர முடியாது.

மேலும், ஒரு சாரார் அல்லாஹ்வைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளாததின் காரணமாகப் பாவச் செயல்களிலும், மோசமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய ஒரு நிலையை நாம் கண்டு வருகின்றோம். ஆண் பெண் கலப்பு, விபச்சாரம், ஆடல் பாடல்கள், அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுதல் போன்ற பயங்கரமான பாவகாரியங்களில் எமது சமூகம் மூழ்கியிருக்கின்றது. அல்லாஹ் கேட்கிறான், பார்க்கிறான், அறிகிறான் என்பதை சிறிதுமே எண்ணிப் பார்க்காதவர்களாக இவர்களுடைய வாழ்க்கை கழிகின்றது.

இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் இப்படியான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் அகீதாக் கல்வியை முற்படுத்த வேண்டும். அதனைக் கற்றுக் கொள்ள நாம் முயற்சியெடுக்க வேண்டும்.

அதனடிப்படையில், மக்களை சீர்திருத்தும் நோக்கில் பல அகீதா வகுப்புக்கள் அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் பொதுமக்களுக்காக நடாத்தப்படுகின்றன. அதில் ஒன்றே 'லாமியா' என்ற நூலுக்கான விளக்கவுரை வகுப்பாகும். இதனை எழுத்துவடிமாக இங்கு நாம் தொகுத்து தந்திருக்கின்றோம். இதனைக் கொண்டு அல்லாஹ் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வின் கூலி நாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக இதனை அவன் ஆக்கிவைப்பானாக!

-           அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்