ரியாளுஸ் ஸாலிஹீன் விளக்கவுரை – 09

بسم الله الرحمن الرحيم

ஹதீஸ் விளக்கம்

இந்த ஹதீஸ் குறித்து மார்க்க அறிஞர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. இந்த ஹதீஸ் இஸ்லாத்தின் மூன்றில் ஒரு பகுதியாகும் என ஷாபிஈ, அஹ்மத், அலி இப்னுல் மதீனி, அபூதாவூத், திர்மிதி, தாரகுத்னி, ஹம்ஸா ஆகிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். (பத்ஹுல் பாரி)

2. இந்த ஹதீஸ் மார்க்க அறிவில் 30 பாடங்களில் நுழைவதாக அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இந்த ஹதீஸ் ஒவ்வொரு பாடத்தின் போதும் தலையாய அம்சமாகக் குறிப்பிடப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். (பத்ஹுல் பாரி) அறிவைத் தேடும் மாணவனுக்கு அவனது நிய்யத்தை சரிப்படுத்தும் நோக்கில் புத்தகங்களைத் தொகுப்பவர்கள் இந்த ஹதீஸைக் கொண்டே தமது புத்தகங்களை ஆரம்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். (ஷர்ஹு முஸ்லிம்)

3. இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "இஸ்லாத்தின் அடிப்படைகள் மூன்று ஹதீஸ்களின் மீது அமையப்பெற்றிருக்கின்றன. அவை: "செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்” என்ற உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீஸும், 'எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவர் புதிதாக உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்படும்” என்ற ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களது ஹதீஸும், 'நிச்சயமாக ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது” என்ற நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஹதீஸுமாகும்.) (தபகாதுல் ஹனாபிலா)

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமையும்” என்ற இந்த வார்த்தை குறுகிய வார்த்தையாக இருப்பினும் விரிவான விளக்கங்களைக் கொண்டிருக்கின்றன.

அஷ்ஷெய்ஹ் ஸலீம் அல்ஹிலாலி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நற்காரியங்களுக்கு நிய்யத் அவசியமாகும். அவை தொழுகை போன்ற தனிப்பட்ட வணக்கமாகவும் இருக்கலாம். அல்லது மற்றொரு வணக்கத்திற்கு சாதனமாக அமையக்கூடிய சுத்தம் போன்ற வணக்கமாகவும் இருக்கலாம். ஏனென்றால், நிய்யத் இன்றி உளத்தூய்மையின் தோற்றம் வெளிப்பட மாட்டாது.” (பஹ்ஜதுந் நாளிரீன்)

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நிய்யத் என்பது நற்காரியங்களை அளந்து பார்க்கும் ஓர் அளவு என்பதை இந்த ஹதீஸ் அறிவித்துவிட்டது. நிய்யத் சீராகினால் நற்காரியங்கள் சீராகிவிடும். நிய்யத் கெட்டுவிட்டால் நற்காரியங்கள் கெட்டுவிடும்.” (ஷர்ஹுல் அர்பஈன் அந்நவவிய்யா)

நிய்யத்துடன் சேர்ந்த நற்காரியங்களை மூன்று நிலைமைகளாகப் பிரிக்கலாம்.

1. அல்லாஹ்வுக்காக அந்நற்காரியத்தை மேற்கொள்வது.

2. சுவனத்தையும் கூலியையும் எதிர்பார்த்து அந்த நற்காரியத்தை மேற்கொள்வது.

3. அல்லாஹ்வுக்கு முன்னிலையில் வெட்கப்பட்ட நிலையிலும் அவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தை உரிய முறையிலும் நிறைவேற்றுதல். மேலும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் என்ற காரணத்திற்காக அந்நற்காரியத்தை மேற்கொள்வதாகும்.

அவரைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய உரிமைகளில் தன்னிடம் குறைபாடு உள்ளது என்றே கருதுவார். அத்தோடு அவரது உள்ளமும் அஞ்சக்கூடிய உள்ளமாக இருக்கும். ஏனெனில், அவரது நற்காரியம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பதை அவர் அறியமாட்டார். இக்கருத்தையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் தனது பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்கியபோது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: "உங்களுடைய முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்ட போதும் நீங்கள் இவ்வாறு சிரமப்படுகின்றீர்களே!?” என வினவியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்கக்கூடாதா?!” எனக் கேட்டார்கள்.

அஷ்ஷெய்ஹ் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்” என்ற இந்த வாசகத்தின் விளக்கமாவது: நிய்யத் இன்றி எந்த நற்காரியமும் சீராக அமையாது. மாறாக, எல்லா நற்காரியங்களும் நிய்யத்தை கொண்டே இருக்கின்றன.” (பஹ்ஜதுல் குலூபில் அப்ரார்)

"ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் நாடியதே உண்டு: என்பதன் விளக்கமாவது, ஓர் அடியானுடைய நிய்யத்தைப் பொருத்தே அவனது நற்காரியம் சீரானதா, சீரற்றதா, பூர்த்தியானதா, குறையுள்ளதா எனத் தீர்மானிக்கப்படும். எவர் அல்லாஹ்வின் பக்கம் தன்னை நெருக்கிவைக்கக்கூடிய உயர்ந்த நோக்கங்களுக்காக நலவு செய்வதை நாடுகிறாரோ, அவருக்கு நிரப்பமான கூலி வழங்கப்படும். எவருடைய நிய்யத்தில் குறை ஏற்படுகிறதோ, அவருடைய கூலியிலும் குறை ஏற்பட்டுவிடும். எனவே, மகத்தான நோக்கங்களை விட்டும் எவருடைய நிய்யத் வேறு திசைகளில் திரும்புகின்றதோ அவருக்கு நலவுகள் தவறிப்போய்விடும்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும். ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் நாடியதே உண்டு” என்ற ஹதீஸின் ஆரம்பப் பகுதியை பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

"முதலாவது வாசகம் ஒரு காரணத்தைப் பற்றிக் கூறுகின்றது. ஒவ்வொரு நற்காரியத்திற்கும் நிய்யத் அவசியமாகும். தெரிவுச் சுதந்திரமுடைய, புத்தி சுயாதீனமான நிலையில் ஒரு மனிதன் செய்யக்கூடிய அனைத்துக் காரியங்களுக்கும் நிய்யத் அவசியமாகும். தெரிவுச் சுதந்திரமுடைய, புத்தி சுயாதீனமான எந்த மனிதருக்கும் நிய்யத் இன்றி ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. சில அறிஞர்கள் கூறுகின்றனர்: "நிய்யத் இன்றி ஒரு காரியத்தைச் செய்யுமாறு அல்லாஹ் எம்மைப் பணித்திருந்தால் அது எமக்குச் சக்தியில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ் பணித்ததில் உள்ளடங்கிவிடும்.”

இது முற்றிலும் உண்மையானதே. நாம் புத்தி சுயாதீனமான, தெரிவுச் சுதந்திரமுடைய, பிறரால் நிந்திக்கப்படாதவர்களாக இருக்கும்போது எவ்வாறு எம்மால் நிய்யத் இன்றி ஒரு காரியத்தைச் செய்ய முடியும்? இது சாத்தியமற்றதாகும்.

எனவே, எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதற்கு நிய்யத் அவசியம் என்பதே முதல் வாசகத்தின் விளக்கமாகும். என்றாலும் ஒவ்வொருவருடைய நிய்யத்தும் வித்தியாசப்படும். வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரமளவு தூரமாகியிருக்கும்.

அடியார்களின் நிய்யத் நான்கு வகைப்படும்.

1. சிலர் அல்லாஹ்வுக்காக வேண்டி தூய்மையாக நற்காரியத்தில் ஈடுபடுவர்.

2. சிலர் அல்லாஹ்வுக்காகவும் மற்றொருவருக்காவும் நற்காரியத்தில் ஈடுபடுவர்.

3. சிலர் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நற்காரியத்தில் ஈடுபடுவர்.

4. சிலர் மனிதர்களுக்குக் காண்பிக்க நற்காரியத்தில் ஈடுபடுவர்.”

"ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் நாடியதே உண்டு” என்பதற்கு இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்.

"ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எதனை நாடுகின்றாரோ அதனை அவர் பெற்றுக் கொள்வார். மார்க்கம் கூறிய நற்காரியங்களின் மூலம் எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமை நாளையும் நாடுகின்றாரோ அது அவருக்குக் கிடைத்துவிடும். மாறாக, அவர் இவ்வுலகத்தை அதன் மூலம் நாடினால் அது சிலவேளை அவருக்குக் கிடைக்கலாம், அல்லது சிலவேளை அவருக்குக் கிடைக்காமலிருக்கலாம்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'எவர்கள் இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம்.” (அல்இஸ்ராஃ: 18)

அவர் நாடியதை அவருக்கு நாம் கொடுப்போம் என்று அல்லாஹுத்தஆலா கூறவில்லை. மாறாக, நாம் நாடுவதையே அவருக்குக் கொடுப்போம் என அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான். அவர் நாடியதைக் கொடுக்கமாட்டான். மேலும், 'நாம் நாடியவர்களுக்கே கொடுப்போம்” என்றும் அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான். எனவே, அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கும் அவரவர்கள் நாடியதை வழங்கமாட்டான்.

மேலும், அல்லாஹுத்தஆலா அவ்வசனத்தைப் பின்தொடர்ந்து கூறுகின்றான்: 'எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ அத்தகையவர்களின் செயல்கள் அங்கீகரிக்கப்படும்.” (அல்இஸ்ராஃ: 19)

ஆகவே, அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமை நாளையும் எதிர்பார்த்து நற்காரியத்தில் ஈடுபட்டவர் அதன் கூலியைக் கட்டாயமாகப் பெற்றுக் கொள்வார்.”

 (ஷர்ஹு ரியாளிஸ்ஸாலிஹீன்)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்