ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 05

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மை பற்றி ஸலபுகளின் கருத்துக்கள்

1. ஸஹ்ல் இப்னு அப்தில்லாஹ் என்பவர் கூறுகின்றார்: “உளத்தூய்மையைவிட உள்ளத்திற்கு மிகவும் கடினமான ஓர் அம்சம் இருக்க முடியாது. ஏனென்றால், உளத்தூய்மைக்கு உள்ளத்தில் எந்தப் பங்கும் இல்லை”.

2. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “உளத்தூய்மையின்றியும் சுன்னாவுடைய வழிகாட்டலின்றியும் அமல் செய்வது தனது பயணப் பொதியை மணலால் நிரப்பியவாறு பிரயாணம் மேற்கொள்பவனைப் போலாவான். அது அவனுக்கு பாரமாகவும் இருக்கின்றது. மேலும், அதில் அவனுக்கு எவ்விதப் பயனும் இருக்காது”.

3. மேலும் அவர்கள் கூறினார்கள்: “ஒரு விசுவாசியுடைய உள்ளத்தில் உளத்தூய்மையும் புகழை எதிர்பார்க்கின்ற தன்மையும் ஒன்று சேராது”.

4. அல்ஹஸன் அல்பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனக்குத் தானே கூறிக் கொள்கின்றார்கள்: “நீ நல்லோர்களினதும் வளப்பட்டவர்களினதும் வணக்கசாலிகளினதும் பேச்சுக்களைப் பேசுகின்றாய், ஆனால் மோசமானவர்களினதும் நயவஞ்சகர்களினதும் முகஸ்துதியுடையவர்களினதும் செயல்களைச் செய்கின்றாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உளத்தூய்மையுடையவர்களின் பண்பல்ல”.

5. இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “உளத்தூய்மையின்றி நிறைவேற்றப்படக்கூடிய அமல் பிரயோசனம் தருமென்றால் அல்லாஹ் நயவஞ்சகர்களை இழிவுபடுத்தியிருக்கமாட்டான்”.

6. இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “ஓர் அடியானுடைய மார்க்கம் முழுவதும் அல்லாஹ்வுக்காக இருந்தாலே அன்றி உள்ளத்தைவிட்டும் பித்னாக்கள் நீங்கிவிடமாட்டாது”.

உளத்தூய்மை விடயத்தில் ஸலபுகளின் செயற்பாடுகள்

1.   அபூஅய்யூப் அஸ்ஸிஹ்தியானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவு முழுவதுமாக நின்று வணங்குவார்கள். பஜ்ருடைய நேரம் வந்துவிட்டால் அவர் தற்போதுதான் எழும்பிவிட்டவர் போன்று சத்தத்தை உயர்த்தி அடையாளப்படுத்துவார்.

2. அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது வீட்டில் தொழுபவராக இருப்பார். எவராவது வருவதை அவர்கள் உணர்ந்தால் நபிலான தொழுகையைத் துண்டித்துவிட்டுத் தனது விரிப்புக்குச் சென்று தூங்குபவரைப் போன்று  பாசாங்கு செய்வார். எவராவது அவர்களிடம் நுழைந்தால் “இவர் தூக்கத்திலிருந்து சோர்வடையமாட்டாரா? இவரது பெரும்பாலான நேரம் இவருடைய படுக்கை விரிப்பில்தான் தூங்கிய நிலையில் கழிகின்றது” என்று கூறுவார். ஆனால், அவர் தொழுதுவிட்டு அத்தொழுகையை அவர்களுக்கு மறைத்துள்ளார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்.

2.   இப்னு உயைனா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவரது சபையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஹதீஸ்களை கூறும்போது கடுமையாக அவருக்கு அழுகை ஏற்படும். அவர் தனது தலைப்பாகையை கண்களின் பக்கம் இழுத்துச் சென்று  (கண்களை துடைத்தவர்களாக) “தடிமன் மிகக் கடுமையாக இருக்கின்றது, தடிமன் மிகக் கடுமையாக இருக்கின்றது” எனக் கூறுவார்கள்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்