ரியாளுஸ்ஸாலிஹீன் விளக்கவுரை – 04

بسم الله الرحمن الرحيم

உளத்தூய்மையுடையவர்களின் அடையாளங்கள்

1. உளத்தூய்மையுடையவர்களின் இரகசியமான காரியங்கள் அவர்களது பகிரங்கமான செயற்பாடுகளைவிட மிகச் சிறந்ததாக இருக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக எனது உம்மத்தைச் சேர்ந்த சில கூட்டத்தினரை நான் அறிவேன். அவர்கள் மறுமை நாளில் துஹாமா என்ற இடத்தில் உள்ள வெள்ளை நிற மலைகள் அளவுக்கு நற்காரியங்களைச் செய்த நிலையில் வருவார்கள். அல்லாஹ் அந்நற்காரியங்களை பரவக்கூடிய தூசியைப் போன்று ஆக்கிவிடுவான். அப்போது ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அவர்களை எங்களுக்கு வர்ணித்துக் கூறுங்கள், அவர்களை எங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுங்கள், ஏனென்றால் நாம் அறியாமலே அவர்களுடன் ஆகிவிடக்கூடாது.' அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'அவர்கள் உங்களது சகோதரர்கள் ஆவார்கள், உங்களது இனத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் இரவை எடுத்துக் கொள்வது போன்று அவர்களும் இரவை எடுத்துக் கொள்வார்கள். என்றாலும் அவர்கள் தனிமையாக இருக்கும்போது அல்லாஹ் ஹராமாக்கியவைகளை செய்து விடுவார்கள்.” (ஸஹீஹ் இப்னு மாஜா)

2. அவர்கள் அவர்களது அமல்கள் மறுக்கப்படுமோ என்று அச்சம் கொள்வார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கின்றார்களே அவர்களும்” (அல்முஃமினூன்: 60)

இந்த அல்குர்ஆன் வசனத்திற்கு இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்: “நின்று வணங்குகின்ற விடயத்தில் குறையுள்ளவர்களாக நாம் இருப்போமோ என்ற அச்சத்தின் காரணமாக அந்த தர்மம் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதோ என்று அஞ்சியவர்களாக, நடுங்கியவர்களாக தர்மம் செய்வார்கள்.”

3. அவர்கள் எந்தவோர் அமலின் மூலமும் மனிதர்களின் புகழை எதிர்பார்க்கமாட்டார்கள்.

அல்லாஹுத்தஆலா நல்லோர்களைப் பற்றிக் கூறும்போது பின்வருமாறு கூறுகின்றான்: “உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான். உங்களிடமிருந்து யாதொரு பிரதிபலனையோ, அல்லது நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை. மிகக் கடுகடுக்கக்கூடிய நெருக்கடியான ஒரு நாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்” (என்றும் அவர்கள் கூறுவார்கள்.) (அத்தஹ்ரு: 9,10)

இமாம் முஜாஹித், ஸஈத் இப்னு ஜுபைர் ஆகியோர்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் இவ்வார்த்தைகளை அவர்களுடைய நாவுகளால் கூறவில்லை. என்றாலும் அதை அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அறிந்து கொண்டான். எனவே, இதுவிடயத்தில் ஆசைப்படுபவன் ஆசைகொள்வதற்காக வேண்டி அவர்களைப் புகழ்ந்து கூறினான்” என்று விளக்கமளித்துள்ளார்கள்.

4. மனிதர்கள் ஏளனமாகக் கருதுகின்றார்கள், எம்மைப் அவர்கள் பொருந்திக்கொள்வதில்லை என்பதற்காக வேண்டி அவர்கள் செய்து வந்த அமல்களை இடை நிறுத்திவிடமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மனிதர்களுக்காக நற்காரியங்களில் ஈடுபடவில்லை. மாறாக, அல்லாஹ் ஒருவனுக்காக மாத்திரமே அவர்கள் அதைச் செய்து வந்தார்கள். அவர்கள் எப்போதும் அவர்களது அமல்களிலும் அல்லாஹ்வுக்கு வழிபடுகின்ற விடயங்களிலும் அவனது திருப்பொருத்தத்தைத் தேடுகின்ற காரியங்களிலும் தொடர்ந்தேர்ச்சியாக செயற்படுவார்கள். அவர்களுடன் எவர் கோபம் கொண்டாலும் சரியே!

அலீ இப்னுல் புளைல் என்பவர் தனது தந்தையாகிய புளைல் இப்னு இயாள் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “எனது தந்தையே! நபித்தோழர்களின் வார்த்தைகள் எவ்வளவோ இனிமையானது” என்று கூறினார். அதற்கு அவரது தந்தை புளைல் இப்னு இயாள் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “மகனே! அவை ஏன் இனிமையானவை என்பதை நீ அறிவாயா?” என வினவினார்கள். அதற்கு அவரது மகன் “தெரியவில்லை” என்று பதில் வழங்கினார். புளைல் இப்னு இயாள் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ஏனென்றால் அவர்கள் அவ்வார்த்தைகளின் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையே எதிர்பார்த்தார்கள்.”

உளத்தூய்மையை ஏற்படுத்தும் காரணங்கள்

உளத்தூய்மையை உள்ளத்தில் தரிபடுத்திக்கொள்ள பல வழிமுறைகளை நாம் கையாளலாம். அவையாவன:

1. முகஸ்துதியுடையவர்களுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்படும் தண்டனைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முகஸ்துதிக்காக அமல் செய்தவர்களின் நிலை மறுமை நாளில் எவ்வாறு இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியதாக முன் சென்ற ஒரு ஹதீஸை நாம் குறிப்பிட்டோம். முகஸ்துதியுடையவர்கள் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஹதீஸில் எங்களுக்கு கூறியுள்ளார்கள்.

2. அல்லாஹ் எமது அனைத்துக் காரியங்களையும் அறிந்தவனாக, பார்த்தவனாக, நாம் பேசக்கூடியவற்றை செவிமடுத்தவனாக இருக்கின்றான் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “இஹ்ஸான் என்றால் நீ அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று அவனை வணங்குவதும் நீ அவனைப் பார்க்காவிட்டால் நிச்சயமாக அவன் உன்னைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றான் (என்ற எண்ணத்தில் வணங்குவதுமாகும்)” (புஹாரீ, முஸ்லிம்)

3. நாம் எப்பொழுதும் அல்லாஹ்விடம் முகஸ்துதியை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும்.

இதுபோன்ற காரியங்களை செய்வதினூடாக உளத்தூய்மையை இலகுவாக எமது உள்ளங்களில் நாம் தரிபடுத்திக்கொள்ளலாம்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்