ரமழானோடு தொடர்புடைய பிரபல்யம் வாய்ந்த பலவீனமான ஹதீஸ்கள்.

بسم الله الرحمن الرحيم

இன்ஷா அல்லாஹ் நாம் இத்தொகுப்பில் ரமழான் மாதத்தோடு தொடர்புடைய மக்கள் மன்றத்தில் பிரபல்யமடைந்துள்ள சில பலவீனமான நபிமொழிகள் குறித்த விமர்சனத்தை தரவுள்ளோம்.

1.    ரமழானின் முதல் பகுதி அருளாகும் நடுப்பகுதி பாவமன்னிப்பாகும் அதன் இறுதிப்பகுதி நரகிலிருந்தும் விடுதலை பெறுதலாகும்.

இச்செய்தி முன்கர் எனும் பலவீனமான ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும். இது தொடர்பான விரிவான தகவல்களை அல்ளுஅபா 2/162, அல்காமில் பி ளுஅபாஇர் ரிஜால் 1/165, இலலுல் ஹதீஸ் 1/249, ஸில்ஸிலதுல் அஹாதீஸில் ளஈபா வல் மவ்ழூஆ 2/262 ஆகிய நூட்களில் பெற்றுக் கொள்ளலாம்.

2.    நீங்கள் நோன்பு பிடியுங்கள்! ஆரோக்கியம் அடைவீர்கள்.

இச்செய்தியும் பலவீனமான செய்தியாகும். மேலும் விரிவான விளக்கங்களைப்பெற தஹ்ரீஜுல் இஹ்யா 3/75, அல்காமில் பி ளுஅபாஇர் ரிஜால் 2/357, அஷ்ஷத்ரா பில் அஹாதீஸில் முஷ்தஹிரா 1/479, அல்பவாஇதுல் மஜ்மூஆ பில் அஹாதீஸில் மவ்ழூஆ 1/259, அல்மகாஸிதுல் ஹஸனா 1/549, கஷ்புல் ஹபா 2/539, ஸில்ஸிலதுல் அஹாதீஸில் ளஈபா வல் மவ்ழூஆ 1/420 ஆகிய நூட்களை நாடவும்.

3.    யார் ரமழானில் ஒரு தினத்தை எவ்வித தடங்கலும் நோயும் இன்றி விட்டுவிடுகிறாரோ அவர் காலம் பூராகவும் அதனைத் கலாச் செய்தாலும் அவை ஈடாகாது.

இச்செய்தியும் பலவீனமானது. விரிவான தகவல்களை அறிய பத்ஹுல் பாரி 4/161, மிஷ்காதுல் மஸாபீஹ் தஹ்கீகுல் அல்பானி 1/626, ளஈப் ஸுனன் திர்மிதி ஹதீஸ் இல: 115, அல்இலலுல் வாரிதா பில் அஹாதீஸ் ஆகிய நூட்களை நாடவும்.

4.    நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒவ்வொரு நோன்பு விடுதலின் போதும் நரகில் இருந்து விடுதலையாகக்கூடியவர்கள் இருப்பார்கள்.

இச்செய்தி பலவீனமானதாகும். இது தொடர்பான விரிவான தகவல்கள் தன்ஸீஹுஷ் ஷரீஆ 2/155, அல்பவாஇதுல் அல்மஜ்மூஆ பில் அஹாதீஸில் மவ்ழூஆ 1/257, அல் கஷ்புல் இலாஹீ அன் ஷதீதில் ளஃப் வல்மவ்ழூஇ  வல்வாஹி 12/230, தஹீரதுல் ஹுப்பாழ் 2/956, ஷுஅபுல் ஈமான் 3/304, அல்காமில் பில் ளுஅபாஇர் ரிஜால் 2/455 ஆகிய நூட்களில் பதிவாகியுள்ளன.

5.    அடியார்கள் ரமழானில் இருப்பதை - நலவுகள் - அறிந்து கொள்வார்களென்றால் என்னுடைய உம்மத்தினர் வருடம் பூராகவும் ரமழான் இருக்க ஆதரவு வைப்பார்கள்.

இச்செய்தி பலவீனமானது என்ற தகவலை அல்மவ்ழூஆத் 2/188, தன்ஸீஹுஷ் ஷரீஆ 2/153, அல்பவாஇதுல் மஜ்மூஆ பில் அஹாதீஸில் மவ்ழூஆ 1/254, மஜ்மஉஸ் ஸவாஇத் 3/141 ஆகிய நூட்களில் கண்டு கொள்ளலாம்.

6.    இறைவா எங்களக்கு ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களில் அருள்புரிவாயாக! மேலும் ரமழான் மாதத்தை அடையச் செய்வாயாக!

இச்செய்தி பலவீனமானது என்பதை அல்அத்கார், மீஸானுல் இஃதிதால் 3/96, மஜ்மஉஸ் ஸவாஇத் 2/165, ளஈப் அல்ஜாமிஇ ஆகிய நூட்களில் காணலாம்.

7.    நபியவர்கள் நோன்பு திறக்கும் போது:

اللهم لك صمت وعلى رزقك أفطرت

பொருள்: இறைவா உனக்காக வேண்டி நான் நோன்பு நோற்றேன். மேலும் உன் ஆகாரத்தைக் கொண்டே நோன்பு திறந்தேன் - என்ற கருத்துப்படவுள்ள துஆவை - ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். மேலும் இது குறித்த தகவல்களை ஹுலாஸதுல் பத்ரில் முனீர் 1/327 ஹதீஸ் இல: 1126, தல்ஹீஸுல் ஹபீர் 2/202 ஹதீஸ் இல: 911, அல்அத்கார் பக்கம்: 172, மஜ்மஉஸ் ஸவாஇத் 3/156, ளஈபுல் ஜாமிஇ ஹதீஸ் இல: 4349 ஆகிய நூட்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! இவை போன்ற செய்திகள் ரமழான் மாதம் நெருங்குகையில் பலரின் நாவுகளில் இருந்து வெளிப்படும். இவற்றை ஹதீஸ்கள் என்று நம்பி ஏனையோருக்கு எத்திவைத்துவிடாதீர்கள்! நபியவர்கள் மீது யார் வேண்டுமென்று பொய்யுரைக்கிறாரோ அவர் ஒதுங்கும் தளம் நரகமாகும் - புகாரி - என்ற நபிமொழியை என்றும் மனதில் கொண்டு செயற்படுவோமாக!

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-     தொகுப்பு: அபூஹுனைப்