பொறாமை வேண்டாம்! – 01

بسم الله الرحمن الرحيم

பொறாமை என்பது பொறாமைப்படக்கூடியவரிடத்தில் காணப்படுகின்ற அருட்கொடைகள் இல்லாமல் போக வேண்டும் என்று பொறாமைப்படுபவர் ஆசைப்படுவதாகும் என்று ஜுர்ஜானி என்ற அறிஞர் அத்தஃரீபாத் என்ற நூலில் வரைவிலக்கணமாகக் கூறியுள்ளார்.

இப்பொறாமையானது ஒரு மனிதன் பாதுகாப்புத் தேடக் கூடிய விடயங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் தான் அல்லாஹுத்தஆலா பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படக்கூடிய தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு சூரத்துல் ஃபலக்கில் கட்டளையிட்டுள்ளான்.

ஹூஸைன் இப்னு ஃபத்ழ் என்ற அறிஞர் இவ்வசனம் தொடர்பாகக் கூறுகையில்: நிச்சயமாக அல்லாஹுத்தஆலா இவ்வத்தியாயத்தில் அனைத்து வகையான தீங்குகளைப் பற்றியும் கூறியுள்ளான். மேலும், இவ்வத்தியாயத்தை நிறைவு செய்கையில் பொறாமையைக் கொண்டு நிறைவு செய்துள்ளமைக்குக் காரணம் பொறாமையானது மனிதனில் காணப்படுகின்ற மிக மோசமான பண்பு என்பதை உணர்த்துவதற்காகும்.

மேலும், பொறாமை கொள்வது இறை நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பான செயலாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நீங்கள் ஈமான் கொண்ட பிறகு நிராகரிப்பாளர்களாகத் திரும்பிவிட வேண்டும் என்று வேதம் கொடுக்கப்பட்டவர்களில் அனேகமானோர் ஆசை வைக்கின்றனர்.
அவர்களுக்கு சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களிடமுள்ள பொறாமையின் காரணமாக (இவ்வாறு ஆசை வைக்கின்றனர்)". (பகரா: 109)

இவ்வசனம் குறித்து இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: "இவ்வசனமானது பொறாமை கொள்வது ஹராம் என்பதை அறிவிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில், நிச்சயமாக காஃபிர்களுக்கு ஒப்பாக அவர்களுடைய பண்புகளில் நடந்து கொள்வது ஹராமாகும்". (தப்ஸீர் சூரதுல் பகரா)

இன்னும், பொறாமை கொள்வது அல்லாஹுத்தஆலா இழிவாகக் கருதிய ஒரு செயலாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அல்லாஹ் தன் பேரருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்த அவற்றின் மீது மனிதர்களுடன் அவர்கள் பொறாமை கொள்கிறார்களா?" (அந்நிஸா: 54)

இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வசனம் குறித்து தன்னுடைய தப்ஸீர் நூலில் கூறுகையில்: "இதுவே அல்லாஹுத்தஆலா இழிவாகக் கருதிய பொறாமையாகும்" என்கிறார்.

உண்மையில், இஸ்லாம் பிறருக்கு வழங்கப்பட்டிருக்கும் அருட்கொடைகளைப் பார்த்து பேராசை கொள்வதைத் தடுக்கிறது.

மாறாக, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அருட்கொடைகளைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வதையும், அவற்றில் திருப்தி அடைவதையும், தன்னைவிட அந்தஸ்தில் குறைவானவர்களைப் பார்ப்பதையும், அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தையும் கொண்டு வழிகாட்டுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: "உங்களில் சிலரை விட சிலருக்கு அல்லாஹுத்தஆலா சிறப்பாக்கிக் கொடுத்தவற்றில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்". (அந்நிஸா: 32)

மேலும், இவ்வசனத்தின் இறுதிப்பகுதியில் அல்லாஹூத்ஆலா தன்னுடைய பேரருளிலிருந்து கேட்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளான்.

எனவே, இவ்வசனத்தில் கூறப்பட்ட அடிப்படையில் நாங்கள் அல்லாஹுத்தஆலாவுடைய பேரருளிலிருந்து அவனிடத்தில் கேட்க பழகிக்கொள்ள வேண்டும். மாறாக, பொறாமை கொள்ளக்கூடாது!

மேலும், இவ்வசனம் குறித்து அஸ்ஸஜ்ஜாஜ் என்ற அறிஞர் கூறும் போது: "இவ்வசனத்தினுடைய கருத்தாக சொல்லப்படக் கூடிய ஒரு விடயம் தான், ஒருவரை பொறுத்தளவில் அவர் மற்றவருக்குக் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் பார்த்து மற்றும், அவருடைய வீட்டைப் பார்த்து பேராசை கொள்ளக் கூடாது. ஏனெனில், அவ்வாறு பேராசையை கொள்வது பொறாமையைச் சார்ந்ததாகும்" என்கிறார். (மஆனில் குர்ஆன் வஇஃராபிஹி)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.