பெருநாள் குத்பாவை தக்பீரைக் கொண்டு ஆரம்பிக்க முடியுமா?

بسم الله الرحمن الرحيم

வினா: பெருநாள் குத்பாவை நிகழ்த்துபவர் தக்பீரைக்கொண்டு தனது குத்பாவை ஆரம்பிப்பதின் சட்டம் என்ன?  இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?

விடை: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் இது விடயத்தில் எந்த ஆதாரமும் உறுதியாகவில்லை. இப்னுல் கைய்யிம் மற்றும் அவருடைய ஆசிரியராகிய இப்னு தைமியா ரஹிமஹுமல்லாஹ் அவர்களும் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது அனைத்து குத்பாக்களையும் அல்லாஹ்வைப் புகழ்வதைக்கொண்டுதான் ஆரம்பித்திருக்கின்றார்கள்” என்று கூறினார்கள்.

இதன்படி ஏனைய ஜும்ஆ குத்பாக்கள், இரண்டு பெருநாள் குத்பாக்கள், மழைவேண்டித் தொழுதலின் குத்பா, கிரகணத் தொழுகையின் குத்பா, உரைகள், மற்றும் ஏனைய நிலைகளிலும் அல்லாஹ்வைக் புகழ்வதைக் கொண்டு மட்டுமே ஆரம்பிக்கப்பட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'தஷஹ்ஹுத் - அல்லாஹ்வைப் புகழ்ந்து, அல்லாஹ்தான் இறைவன் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி - கூறப்படாத ஒவ்வொரு குத்பாவும் விரல்கள் துண்டிக்கப்பட்ட கையைப்போன்றதாகும்” என்று கூறினார்கள். (அபூதாவூத், அஸ்ஸஹீஹுல் முஸ்னத்)

எனவே, இரு பெருநாள் குத்பாக்களும் தக்பீரைக் கொண்டு ஆரம்பிக்கப்படுவது அவசியமற்றது. ஏனென்றால், அது விரல்கள் துண்டிக்கப்பட்ட கையைப்போன்றதாக ஆகிவிடும். தக்பீரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களுக்கு இந்த ஸஹீஹான ஹதீஸ் மறுப்பாக அமைகிறது.

-    பார்க்க: அல்கன்ஸுஸ் ஸமீன்: அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி அவர்களுக்குரியது