பெண்பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதின் சிறப்புகள் – 03

بسم الله الرحمن الرحيم

பெண்பிள்ளைகளுக்கு நல்லுபகாரம் செய்வதென்பது, அவர்களது அத்தியவசியத் தேவைகளுக்கு அதிகமாக வசதிகளைச் செய்து கொடுப்பதாகும். ஆயினும், அவ்வாறு நல்லுபகாரம் செய்தலானது மார்க்க வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

பொதுவாக, பெண்குழந்தைகளுக்காக செலவு செய்தலானது இரு வகைப்படும்.

  1. அவர்களது உடல் சார்ந்த தேவைகளுக்காக செலவு செய்தல்.
  2. அவர்களது ஆத்மா சார்ந்த தேவைகளுக்காக செலவு செய்தல்.

அவர்களது உடல் சார்ந்த தேவைகளுக்காக செலவு செய்வதில் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியன உள்ளடங்குகின்றன. அதேபோன்று, அவர்களுடைய ஆத்மாவுக்குச் செய்கின்ற செலவீனமானது, அவர்களுக்குத் தேவையான மார்க்க அறிவை வழங்குவதும், ஒழுக்கத்தைக் கற்பித்து வழிகாட்டுவதும், நன்மையைக் கொண்டு ஏவுவதும், தீமையை விட்டும் தடுப்பதுமான காரியங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "பெண்குழந்தைகளுக்கு நல்லுபாகாரம் செய்தலானது, அவர்களுக்குத் தேவையான போதனைகளை வழங்குவதில் தங்கி நிற்கின்றது. அந்தவிதத்தில், அவர்களுக்கு இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக் கொடுத்தல், சத்தியத்தில் அவர்களை வளரச் செய்வதல், அவர்களது பேணுதல், பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு செயற்படுதல், அவர்கள் விடயத்தில் ரோஷம் கொள்ளுதல், அவர்களை அல்லாஹ் ஹராமாக்கியவற்றை விட்டும் தூரப்படுத்துதல் போன்ற அம்சங்கள் இதனில் உள்ளடக்கியிருக்கின்றன".

உண்மையில், எமது சந்ததியின் காவர்ச்சியானது மார்க்கத்தைக் கொண்டும் நல்லொழுக்கத்தைக் கொண்டுமே பூர்த்தி செய்யப்படுகின்றது.

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினர்கள்: "யார் தனது பிள்ளைக்குப் பிரயோசனமளிக்கும் கல்வியில் பொடுபோக்காக இருக்கின்றாரோ, மேலும், தனது பிள்ளையை வீணாக விட்டுவிடக் கூடியவராக இருக்கின்றாரோ, அவர் தீங்கிழப்பதில் உச்ச நிலையில் தீங்கிழைத்தவராகக் கருதப்படுவார். இன்னும், அதிகமான பிள்ளைகள் நாசமாகிப் போவது அவர்களுடைய பெற்றோரின் பொடுபோக்குத் தனத்தினாலும், அவர்களின் பிள்ளைகளுக்கு வேண்டிய மார்க்க கடமைகளையும், வழிகாட்டல்களையும் கற்றுக் கொடுக்காமையுமாகும். இதன் காரணமாக, அப்பிள்ளைகள் சிறுபராயத்தில் இருக்கின்ற நிலையில் அவர்களை வீணடித்துவிட்டார்கள். எனவே, அவர்கள் தங்களுக்குத் தாங்களே பிரயோசனத்தைப் பெற்றுக் கொள்ளவுமில்லை. முதிய வயதில் அவர்களின் பெற்றோருக்கு பிரயோசனம் அளிக்கவுமில்லை".

எனவே, அம்பார்ந்த பெற்றோர்களே! இக்கருத்தை நல்ல முறையில் கவனத்தில் கொள்ளுங்கள்! குறிப்பாக, பெண்பிள்ளைகளை வளர்க்கின்ற விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டுங்கள்! இன்று பெண்கள் சமூகம் கற்பனை பன்னிக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு மாற்றமடைந்துள்ளது. இந்நிலை மீண்டும் அவர்கள் மத்தியில் ஜாஹிலியா கால சமூக அந்தஸ்தை உருவாக்கிவிடுமோ என்று அச்சப்பட வேண்டிய நிலையைத் தேற்றுவித்துள்ளது. அல்லாஹ் எம் சமூகத்தைப் பாதுகாப்பானாக!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!