பெண்பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதின் சிறப்புகள் – 02

بسم الله الرحمن الرحيم

3. நரகில் இருந்தும் பாதுகாக்கும் திரையாக அவர்கள் இருப்பார்கள்.

"ஒரு முறை ஒரு பெண்மணி தன்னுடன் தனது இரு மகள்களை அழைத்துக் கொண்டு ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தாள். தனக்கு ஏதாவது உணவு தருமாறு வினவினாள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது வீட்டில் தேடிப்பார்த்ததில் ஓர் ஈச்சம் பழத்தைத் தவிர வேறு எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே, அதனை எடுத்து அவருக்குக் கொடுத்துவிட்டார். அப்பெண்மணி அதனை இரண்டாகக் கிழித்து தனக்கென்று ஏதும் வைத்துக் கொள்ளாமல் தனது பிள்ளைகள் இருவருக்கும் வழங்கிவிட்டாள். அப்பெண்மணி வீட்டைவிட்டு புறப்பட்டதும் நபிவர்கள் ஆயிஷா நாயகியின் வீட்டில் பிரவேசித்தார்கள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நடந்த சம்பவத்தை அப்படியே கூறினார்கள். அதற்கு நபியவர்கள்: யார் இப்படியான பெண்பிள்ளைகளின் மூலம் ஏதாவது ஒன்றைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கப்படுகிறாரோ, அத்தகையவருக்கு அப்பெண்பிள்ளைகள் நரகத்தைவிட்டும் பாதுகாக்கும் திரையாக இருப்பார்கள் எனக் கூறினார்கள்". (புகாரி)

மேலும், முஸ்லிம் எனும் கிரந்தத்தில்: "நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வாஜிபாக்கி விட்டான் அல்லது, நரகத்தைவிட்டும் விடுதலை செய்துவிட்டான்" என்றார்கள்.

இன்னும், நபியவர்கள் கூறினார்கள்: "யாருக்கு மூன்று பெண்குழந்தைகள் இருந்து, அவர்கள் விடயத்தில் பொறுமையுடன் செயற்பட்டு, தனது வசதிக்கேற்ப அவர்களுக்கு உண்ணவும், பருகவும், ஆடை அணியவும் கொடுக்கிறாரோ, அத்தகைவருக்கு மறுமைநாளில் நரகத்தில் இருந்தும் பாதுகாக்கும் திரையாக அவர்கள் இருப்பார்கள்". (இப்னுமாஜா)

இத்தகைய மகிமை வெறுமனே பெண்பிள்ளைகளை வளர்க்கக் கூடியவர்களுக்கு மாத்திரமில்லை மாறாக, சகோதரிகள், தாய் தந்தையரின் சகோதரிகள் போன்றோரைப் பொறுப்பேற்று பராமரிப்பவர்களுக்கும் உள்ளது.

நபியவர்கள் கூறினார்கள்: "யாருக்கு மூன்று பெண்குழந்தைகள் அல்லது, சகோதரிகள் அல்லது, இரு பெண்குழந்தைகள் அல்லது, சகோதரிகள் இருந்து, அவர்களுடன் நல்லவிதத்தில் சேர்ந்து பழகி, அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு சுவனம் உள்ளது". (ஸஹீஹுத் தர்கீப்)

மற்றோர் அறிவிப்பில்: "அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு இரக்கம் காட்டி, அவர்களைப் பொறுப்பேற்று நடக்கிறாரோ அவருக்கு நிச்சயமாக சுவனம் வாஜிபாகிவிட்டது" என்றார்கள். (அஹ்மத்)

பிரிதோர் அறிவிப்பில்: "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இருவராக இருந்தாலுமா? எனக் கேட்க, அவர்கள் இருவராக இருந்தாலும் தான் என்றார்கள். நபியவர்களிடத்தில் ஒருவராக இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டிருந்தால், ஒருவராக இருந்தாலும் சரியே! என்று செல்லியிருப்பார்கள் என்று அங்கு குழுமியிருந்த கூட்டத்தினர் கருதக்கூடியவர்களாக இருந்தார்கள்".

இன்ஷா அல்லாஹ் தொடரும்...