பெண்கள் அலங்காரம் – 07

بسم الله الرحمن الرحيم

வாடகைக்குக் கொடுக்கப்படும் முடியை வாங்கித் தலையில் அணிவதின் சட்டம்

வாடகைக்கு வாங்கிய முடியைத் தலையில் சூடலாமா? என்பது தொடர்பாக அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது பின்வருமாறு பதிலளித்தார்கள்.

"வாடகைக்கு வாங்கும் முடி ஹராமானதாகும். மேலும், இச்செயலில் ஈடுபடுவது மேலதிகமாகத் தலையில் முடியை இணைத்த குற்றத்திற்கு நிகராக அமைகிறது. இவ்வாறு சூடுவது தலையினுடைய எதார்த்தமான அமைப்புக்கு மாற்றமாக கூந்தலில் மிக நீளமான ஓர் அமைப்பைக் காட்டுகின்றது. இப்படி கூந்தலில் மேலதிகமாக முடியைச் சேர்த்துவிடும் பெண்ணையும் சேர்த்துவிடுமாறு வேண்டிக் கொள்ளும் பெண்ணையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள். என்றாலும், அடிப்படையில் ஒரு பெண்மணியின் தலையில் முடி இல்லாமல் காணப்படுமிடத்து அல்லது, குறித்த பெண் வலுக்கைத் தலையுடையவளாகக் காணப்படுமிடத்து இக்குறையை மறைப்பதற்காக வேண்டி வாடகைக்கு வாங்கிய முடியை அணிவதில் குற்றம் ஏதும் கிடையாது. ஏனெனில், குறைகளை அகற்றிக் கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். இதனால் தான் நபியவர்கள் ஒரு யுத்தத்தில் மூக்கு துண்டிக்கப்பட்ட ஒரு தோழருக்குத் தங்கத்திலான ஒரு மூக்கைச் செய்து கொள்ளுமாறு பணித்தார்கள்”. (பதாவா ஸீனா வதஜ்மீலிந் நிஸா: 23)

பிறிதொரு சமயம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் இவ்வாறு வினவப்பட்டது:  "அமெரிக்காவில், வலுக்கை ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் முடி வளருவதற்கான சத்திர சிகிச்சை முறை காணப்படுகின்றது. இச்சிகிச்சை முறையின் போது தலையின் பிற்பகுதியில் காணப்படும் முடியை எடுத்து வலுக்கை ஏற்பட்டுள்ள இடத்தில் நட்டி மீண்டும் அவ்விடத்தில் முடியை வளரச் செய்கிறார்கள். இந்நடவடிக்கை மார்க்கத்தில் அனுமதிக்கத்தக்கதா?"

அதற்கு ஷெய்க் அவர்கள்: "ஆம். அனுமதிக்கத்தக்கதாகும். ஏனெனில், நிச்சயமாக அது அல்லாஹ் படைத்ததை மீட்டியெடுப்பதாகும். மேலும், குறையை அகற்றுவதுமாகும். மாற்றமாக, இச்செயன்முறை அலங்கரித்தல் அல்லது, அல்லாஹ் படைத்ததில் மேலதிகமாக ஒன்றைச் சேர்த்தல் என்ற விடயத்தில் உள்வாங்கப்பட மாட்டாது. மேலும், அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்வதாகவும் அமையாது. மாற்றமாக, இச்செயல் குறைவுண்டானதை மீட்டியெடுப்பதும், குறையை அகற்றுவதுமாகும். அதேபோன்று, ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று நபர்களின் சம்பவம் யாவரும் அறிந்ததே! அச்சம்பவத்தில் மூவரில் ஒருவர் வலுக்கைத் தலையுடையவராகக் காணப்பட்டார். அவர் தன்னிடத்தில் வந்த மலக்கிடம் அல்லாஹ் அவருக்களித்த முடி மீண்டும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். அம்மலக்கும் அவரைத் தடவி விடவே, அல்லாஹ் அவருடைய முடியை மீட்டிக் கொடுத்தான். முன்பைவிட மிக அழகான முடி அவருக்குக் கொடுக்கப்பட்டது” என்றார்கள். (பதாவா ஸீனா வதஜ்மீலிந் நிஸா: 76)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அபூஹுனைப்