பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 2

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்

உலகத்தாரைப்படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கே புகழ் அனைத்தும், அவன் பின்பற்றுவதைக் கொண்டு எமக்கு ஏவியுள்ளான், மேலும் பித்அத்களை விட்டும் நம்மைத் தடுத்துள்ளான். இன்னும் பின்பற்றுவதற்கும் பின்பற்றப்படுவதற்குமாக அல்லாஹ் அனுப்பிய எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் அவர்களின் தோழர்கள் இன்னும் பின்துயர்வோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டுமாக!

இப்பாடங்கள் பித்அத்தின் வகைகள், அதனை விட்டும் தடுத்தல் பற்றியவையாகும். அல்லாஹ்வுக்காக , அவனின் வேதத்திற்காக , அவனின் தூதருக்காக , முஸ்லிம்களின் தலைவர்களுக்காக மற்றும் பொது மக்களுக்காக உபதேசம் செய்வது கட்டாயக்கடமையானதாகும் என்பதால் இதனை எழுதுவது இன்றியமையாததாகும்.

முதல் பாடம்:

பித்அத்தின் வரைவிலக்கணம், அதன் வகைகள், இன்னும் அதன் சட்டங்கள்

வரைவிலக்கணம்

பித்அத் என்றால் அரபுப்பாஷையில் بَدَعَ என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அதாவது, முன்னுதாரணம் இன்றிய உருவாக்கமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : (அவனே) வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன் (2:117) எந்த வித முன்னுதாரணமும் இன்றியே அவைகளை உருவாக்கினான். இன்னுமொரு வசனத்தில் இறைவன் இப்படிக் கூறுகின்றான்: நபியே! நீங்கள் சொல்லுங்கள் நான் தூதர்களில் புதியவனாக இல்லை (46:9) அதாவது அல்லாஹ்விடமிருந்து அடியார்களுக்கு தூதுத்துவத்தை முதலில் கொண்டு வந்தவர் நானல்ல, என்றாலும் தூதர்களில் அனேகமானவர்கள் என்னை முந்தி வந்துள்ளனர். ஒருவன் ஒரு பித்அத்தை உருவாக்கினான் என்று கூறப்படுவது, எந்த வித முன்னுதாரணங்களும் இன்றி ஒரு வழியை அவன் ஆரம்பித்தான் என்பதாகும்.

பித்அத் என்பது இரண்டு வகைப்படும்

  1. நடைமுறைகளில் உருவாக்குதல், புதிய கண்டுபிடிப்புக்கள் இவ்வகை கூடுமானது. ஏனெனில் இதன் அடிப்படை ஆகுமானதாகும். அதாவது அனுமதியானது ஆகும்.
  2. மார்க்கத்தில் பித்அத்களை உருவாக்குதல், இது ஹராமாகும். ஏனெனில் நிச்சயமாக அதன் அடிப்படை வஹியாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நமது வழிமுறைகளில் இல்லாத ஒன்றை உண்டு பண்ணுகின்றாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும். (புகாரி - 3- 167) (முஸ்லிம்- 1718)

பித்அத்தின் வகைகள்

மார்க்கத்தில் பித்அத் இரண்டு வகையாகும்

முதல் வகை :

நம்பிக்கைச் சார்ந்த கொள்கை ரீதியான பித்அத்தாகும், ஜஹ்மியா, முஃதஸிலா, ராபிழா போன்ற வழிகெட்ட பிரிவுகளும் கொள்கைகளுமாகும்.

இரண்டாம் வகை :

வணக்கங்களை அல்லாஹ்வுக்காக என்று வணக்கமாக செய்தல். இவை பல வகையாகும்:

    1. இபாதத்துகளின் அடிப்படைகளில் ஏற்படுத்தல் -ஷரீஅத்தில் இல்லாத ஒரு புதிய வணக்கத்தைச் செய்தல், மார்கத்தில் இல்லாத ஒரு தொழுகையைத் தொழுதல், அல்லது நோன்பு நோற்றல், அல்லது கொண்டாட்டங்களைச் செய்தல், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றன.
    2. ஷரீஅத்தான வணக்கங்களில் அதிகரித்தல், ளுஹர், அஸர் தொழுகைகளை ஐந்து ரக்அத்தாக தொழுதல்.
    3. இபாதத்துக்கள் ஷரீஅத் ஆக்கப்பட்ட முறையல்லாத வேறு முறைகளில் செய்தல், கூட்டு திக்ர், நபியவர்களின் வழி முறையிலிருந்து வெளியேறும் வகையான வணக்கங்களில் நீடிப்பு.
    4. ஷரீஅத் வணக்கங்களுக்கு நேரம் குறிப்பிடாத போது வணக்கங்களுக்கு நேரம் குறிப்பிட்டு வைத்தல், ஷஃபான் பதினைந்தாம் இரவை நின்று வணங்கியும் பகலை நோன்பு வைத்தும் விஷேடப்படுத்தல், நிச்சயமாக நோன்பு , இரவு வணக்கம் இவைகளுக்கு ஷரீஅத்தில் அடிப்படை உண்டு, ஆனால் இவைகளைக் குறிப்பிட்டு செய்வதானால் ஆதாரங்கள் அவசியமாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU MUAAD JAMALUD DEEN (GHAFOORI)