பித்அத் பற்றிய ஆய்வு

முன்னுரை

நாம் இப்பாடத்தை அஷ்ஷைய்க் ஸாலிஹ் பின் பௌஸான் அல் பௌஸான் ஹபிழஹூல்லாஹ் அவர்களின் “அகீததுத் தவ்ஹீத்” என்ற புத்தகத்தின் பித்அத் பற்றிய விளக்கம் என்ற பகுதியை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இப்புத்தகத்தைப் பொறுத்தவரை பல முக்கிய பாடங்களையும் தெளிவுகளையும் ஒரு முஸ்லிம் கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய பல அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. இன்றைய எமது முஸ்லிம் உம்மத் மிகவும் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய அகீதாவில் உறுதியற்று ஈமானில் தளம்பல் நிலை கொண்டு அந்நிய சக்திகளுக்குத் தலை சாய்த்து நாமும் அவர்களுக்கு ஏற்றாற்போல வாழ்ந்து எமதுயிரைக் காத்துக் கொள்வோம் என்ற ஈமானில் தள்ளாடும் நிலையிலும் மார்க்கம் என்ற போர்வையில் இணைவைப்பும் அகீதாவைத் தகர்க்கும் பல அம்சங்ளைக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான ஒரு தருணத்தில் இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்கள் மிகவும் முக்கியமானதாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே முஸ்லிம் உம்மத் இதனை அறிந்து கொள்வது அவசியமாகும்.

அதன் அடிப்படையில் தான் இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப இப்புத்தகத்தின் இறுதிப்பகுதியான பித்அத் பற்றிய விளக்கம் என்ற பகுதியை நாம் தெரிவு செய்து இந்த உம்மத்திற்கு விளக்கப்படுத்த வேண்டும் என்று முன்வந்தோம். இதனடிப்படையில் நாம் அத்தார் அஸ்ஸலபிய்யாவின் மஸ்ஜிதில் இப்பாடத்தை ஒவ்வொரு வாரமும் பிரதி செவ்வாய்க் கிழமைகளில் நடாத்தி வருகின்றோம். இப்பாடம் பின்வரும் உள்ளடக்கத்தைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது:

பித்அத் பற்றிய ஆய்வு

முதல் பாடம் :
பித்அத் பற்றிய விளக்கம்

இரண்டாம் பாடம் :
முஸ்லிம்களின் வாழ்வில் பித்அத்தின் தோற்றமும் அதற்குரிய காரணங்களும்

மூன்றாம் பாடம் :
பித்அத் வாதிகளின் விடயத்தில் இஸ்லாமிய உம்மத்தின் நிலைப்பாடும் அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஅத்தினரின் போக்கும்

நான்காம் பாடம் :
நவீன பித்அத்களுக்கான சில உதாரணங்கள்

எனவே பித்அத் பற்றிய சரியான விளக்கத்தை இச்சமூகத்திற்கு முன்வைப்பது இன்றியமையாத் தேவை என்ற அடிப்படையில் இதனை ஒரு முக்கிய பாடமாகச் செய்து வருகின்றோம். இன்ஷா அல்லாஹ் நீங்களும் தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இப்பாடத்தின் ஒலி மற்றும் எழுத்து வடிவிலான தொகுப்புகளை உங்களுக்கு தரவிருக்கின்றோம் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதோடு இப்பணி இனிதே இறுதி வரை தொடர எல்லாம் வல்ல ரஹ்மானைப் பிரார்த்திப்போமாக!

பித்அத் பற்றிய ஆய்வு தொடர்பான தலைப்பின் கீழ் இடம்பெறவிருக்கும் நான்கு பாடங்கள் தொடர்பான விரிவான தகவல்களை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் தொடர்களில் எதிர்பாருங்கள்.

by: ABU MUAAD JAMALUD DEEN (GHAFOORI)