நோன்பு திறக்கும் போது எந்த துஆவை ஓதுகின்றீர்கள்?

بسم الله الرحمن الرحيم

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆக்கள் தொடர்பாக சரியான எச்செய்தியும் பதிவாகவில்லை. மாற்றமாக, சில துஆக்கள் ஹதீஸ்களில் பதிவாகிக் காணப்பட்டாலும் அவை பல்வேறுபட்ட விமர்சனங்களைத் தாங்கியதாகவே காணப்படுகின்றன. அத்தகைய துஆக்களையும் அவை தொடர்பான விமர்சனங்களையும் இங்கு தருகின்றோம்.

1.  اللهم لك صمت وعلى رزقك أفطرت فتقبل منا إنك أنت السميع العليم

இந்த துஆ தாரகுத்னி என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல் மலிக் இப்னு ஹாரூன் இப்னி அன்தரா என்பவர் இடம் பெறுகின்றார். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களினால் விடப்பட்டவராகக் கருதப்படுகின்றார். மேலும், இவர் இச்செய்தியைத் தன்னுடைய தந்தையைத் தொட்டு அறிவித்துள்ளார். இவருடைய தந்தையும் பலவீனமானவராவார்.

2.   بسم الله اللهم لك صمت وعلى رزقك أفطرت

இந்த துஆ அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் தபரானி அல்அவ்ஸத் மற்றும் அஸ்ஸகீர் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இதனுடைய அறிவிப்பாளர் வரிசையிலும் குளறுபடி காணப்படுகின்றது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இஸ்மாயீல் இப்னு அம்ர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவராகக் கருதப்படுகின்றார். மேலும், இதன் அறிவிப்பாளர் வரிசையில் தாவூத் இப்னு அஸ்ஸிப்ரிகான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களினால் விடப்பட்டவராகக் கருதப்படுகின்றார்.

3.   ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله تعالى

இந்த துஆ அபூதாவூத் எனும் கிரந்தத்தில் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதுவும் பலவீனமான செய்தியாகவே கருதப்படுகின்றது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் மர்வான் இப்னு ஸாலிம் இப்னில் முபக்கிஃ என்பவர் இடம்பெறுகின்றார். இவரின் நிலை யாது என்று அறியப்படாததாக உள்ளது.

4.   إن للصائم عند فطره دعوة لا ترد

இச்செய்தி இப்னு மாஜா எனும் கிரந்தத்தில் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் இஸ்ஹாக் இப்னு உபைதில்லாஹ் இப்னி அபில் முஹாஜிர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என்று அறியப்படாதவராக உள்ளார். மேலும் இச்செய்தி அத்தயாலிஸி என்ற கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது. அதனுடைய அறிவிப்பாளர் வரிசையிலும் ஒரு பலவீனமான நபர் இடம்பெறுகிறார். அவர் அபூமுஹம்மத் அல்முலைக்கி ஆவார். இவர் தொடர்பாக இமாம் நஸாயி அவர்கள் கூறுகையில்: இவர் உறுதியானவர் அல்ல என்றும் இவருடைய ஹதீஸ்கள் விடப்பட்டாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், இவர் தொடர்பாக அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்இர்வாஃ எனும் நூலில் கூறும் போது: "நானறியேன், சிலவேளை அவர் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர் இப்னி உபைதில்லாஹ் இப்னி அபீமுலைகா அல்மதனியாக இருக்கலாம். உண்மையில் அவராக இருந்தால் தக்ரீப் எனும் நூலில் கூறப்பட்டுள்ள பிரகாரம் அவர் பலவீனமானவராகக் கருதப்படுவார்” என்கிறார்கள்.

எனவே, இது விடயத்தில் உறுதியான செய்தியாகப் பின்வரும் ஹதீஸை இனங்காட்டலாம்.

"மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அவர்களது துஆக்கள் மறுக்கப்படாது ஏற்றுக் கொள்ளப்படும். அவர்கள், நீதம் மிக்க தலைவரும், நோன்பு திறக்கும் வரை பிரார்த்தனை செய்யும் நோன்பாளியும், பிரார்த்தனை செய்யும் அநியாயம் இழைக்கப்பட்டவரும் ஆவார்கள். இவர்களின் துஆக்களை அல்லாஹ் மறுமைநாளில் மேகத்திற்கு மேலால் உயர்த்துவான். மேலும், அவற்றுக்காக வானத்தின் கதவுகளைத் திறந்து கொடுப்பான். அப்போது அவன் அவை குறித்துக் கூறும் போது: என்னுடைய கன்னியத்தின் மீது ஆணையாக நான் உனக்கு உதவி புரிவேன்” என்பான்.

-    அபூஹுனைப்