நின்று கொண்டு தலைவாரக் கூடாதா?

بسم الله الرحمن الرحيم

சமூக வலைதளங்களில் நபியவர்களின் பெயரால் பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. பொதுமக்கள் மாத்திரமின்றி சில ஆலிம்களும் இப்படியான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களுக்குப் பிரச்சாரம் செய்து அவற்றை சமூக வலைதளங்களிலும் பதிவிடுகின்றனர். அதனை உண்மை என நம்பிக்கை கொண்ட மக்கள் அதை தமது வாழ்வில் செயலாற்றிக்கொண்டும் இருக்கின்றனர்.

இவ்வாறு சமூக வலைதளங்களில் வலம் வருகின்ற ஒரு செய்தி நின்றுகொண்டு தலைவாரக் கூடாது என்று வரக்கூடிய செய்தியாகும். நின்று கொண்டு தலைவாருவது அதிலும் குறிப்பாக பெண்கள் இவ்வாறு செய்வது வீட்டில் முஸீபத்தை ஏற்படுத்தும், வறுமையை உண்டாக்கும், கடன் தொல்லைகளை அதிகரிக்கும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
நின்றுகொண்டு தலைவாருவது கடன் தொல்லைகளை அதிகரிக்கும் என்ற செய்தி இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும். இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் ஜுவைபாரீ மற்றும் அபுல்பஹ்தரீ ஆகியோர் இடம்பெறுகின்றனர். இவர்கள் இருவருமே ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்கள் என்று இமாம் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது 'அல்மவ்ழூஆத்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நின்று கொண்டு தலைவாருவது வறுமைய உண்டாக்கும் என்ற செய்தி அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரில் புனையப்பட்டு அறிவிக்கப்படுகின்றது. இதுபோன்று வீடுகளில் சிலந்தி வலை இருப்பது, குளிப்புக் கடமையான நிலையில் உண்பது, வீட்டில் குப்பைகூழங்களை அகற்றாமல் இருப்பது போன்ற காரியங்களும் வறுமையை உண்டாக்கும் என்றும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ளன.
இவைகளில் எதுவுமே ஆதாரபூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளல்ல. ஹதீஸ்களை தொகுத்த அறிஞர்கள் இவற்றை ஆதாரபூர்வமான செய்தியாகக் குறிப்பிடவில்லை. இந்த செய்திகளை அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரில் அறிவிக்கப்படுவதை ஷீஆக்களுடைய இணையதளங்களில் நாம் காணலாம். அவர்களே இவ்வாறு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் பல கட்டுக்கதைகளையும் வலுவற்ற செய்திகளையும் புனைந்து பரப்பி வருகின்றனர்.
எனவே, எமது சகோதர, சகோதரிகள் இப்படியான செய்திகள் சொல்லப்படும் போது அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவர்களது கடமையாகும். சில தாய்மார்கள் தமது பெண் பிள்ளைகள் நின்று கொண்டு தலைவாருவதைக் கண்டால் கண்டிப்பதை சில வீடுகளில் நாம் பார்க்கலாம். அது முஸீபத்தை உண்டாக்கும் என்பது அவர்களது எண்ணமாகும்.
நின்று கொண்டு தலைவாருவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்பதும் அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதுமல்ல என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வோம்.
தலைவாருவதற்கு சில ஒழுங்குகளை நபியவர்கள் கற்றுத்தந்தார்கள். தலை முடி வைத்திருப்பவர் அதை வாரி கண்ணியப்படுத்தட்டும் என்று கூறினார்கள். மேலும், தலைவாரும் போது வலது கையைப் பயன்படுத்துவது, மேலும், தலை முடியை சீர் செய்வதில் அதிக கவனம் செலுத்தக்கூடாது போன்ற வழிகாட்டல்களை நபியவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஹதீஸ்களில் நாம் பார்க்கலாம். ஆனால் நின்று கொண்டு தலைவாருவதை அவர்கள் ஒருபோதும் தடைசெய்யவில்லை.
எனவே, எமக்கு நபியவர்களின் பெயரால் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அவற்றை ஆராய்வது, அல்லது நம்பத்தகுந்த அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதே எமது கடமை. அதை விட்டுவிட்டு கிடைக்கப் பெறுகின்றவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்வது எம்மை நபியவர்களின் பெயரில் இட்டுக்கட்டிய பாவத்தில் தள்ளிவிடும் என்பதைப் புரிந்து நடந்து கொள்வோம்.