நாம் யாரிடம் தெளிவை நாடிச் செல்ல வேண்டும்?!

بسم الله الرحمن الرحيم

மனித சமுதாயம் நேர்வழிபெறும் பொருட்டு தனது தூதை எத்திவைப்பதற்காக அதி உத்தமம் பெற்றவர்களையே அல்லாஹுத்தஆலா தேர்ந்தெடுத்துள்ளான். வானவர்களில் உத்தமரான ஜிப்ரீலையும், தூதர்களில் தலைசிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் சமுதாயங்களில் உன்னதமான ஸஹாபாக்களையும் இம்மகத்தான பணிக்காக அவன் தேர்ந்தெடுத்திருப்பது இவ்வமானிதம் எக்காலத்திலும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடக்கூடாது என்பதற்கான வழிகாட்டலே அன்றி வேறில்லை. இவ்வழிகாட்டலின் பிரதிபலிப்பே அன்று முதல் இன்று வரை இவ்வமானிதத்தை இந்த உம்மத்தின் வாய்மையும் தூய்மையும் நிறைந்த அறிஞர் சமுதாயம் தாங்கி நிற்பதாகும். மார்க்கத்தில் ஆழமான அறிவு, கொள்கையில் தெளிவு, தடம்புரளாத போக்கு, சமூகத்தின் மீது உள்ளம் கனிந்த அக்கரை, அனைத்திற்கும் மேலால் அல்லாஹ்விடம் பொறுப்புக்கூற வேண்டிய உணர்வு என அனைத்துத் தகுதிகளும் ஒருசேர அவர்கள் இப்பணியை மேற்கொண்டதால் மார்க்கத்தைப் பறிகொடுத்த முன்னைய சமுதாயங்களைப் போன்று நிர்க்கதியான நிலைக்கு இந்த சமூகம் தள்ளப்படவில்லை. வழிகெட்ட கொள்கைகள் அவ்வப்போது சமூகத்தில் ஊடுருவியபோது அவற்றை சல்லடைபோட்டு தோலுரித்தார்கள்.

என்றாலும் பிற்பட்ட காலங்களில் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதிலும் கற்பிப்பதிலும் மேற்கொள்ளப்பட்ட பிழையான அணுகுமுறைகள் பாரிய விபரீதங்களை எமது சமுதாயத்திற்குத் தேடிக் கொடுத்தன. இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கைகளைச் சுமந்தவர்கள் சமூகத்தை வழிநடாத்தும் பொறுப்புக்களில் அமர்ந்து கொண்டனர். கல்வித் தேடலை ஒரு சில வருடங்களுக்கு வரையறுத்து அதில் நுனிப்புல் மேய்ந்தவர்கள் மார்க்க மேதைகளானார்கள். CD களாலும் மாதாந்த சஞ்சிகைகளாலும் ஆலிம்களாக சமைந்தவர்களுக்கு மிம்பர்களும் மேடைகளும் தாரை வார்த்தன. பீரங்கிப் பேச்சாற்றலும் வாதத்திறமையும் அறிவுடமையின் அடையாளங்களாகக் கருதப்பட்டன. ஈற்றில் அதன் விபரீதங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையே உதைக்க ஆரம்பித்தன. யாரிடம் தெளிவை நாடிச் செல்வதெனத் தெரியாது திகைக்கின்றனர். இந்த சமூகத்தை விட்டும் ரப்பானிய அறிஞர்கள் அஸ்தமிக்கின்றபோது அறிவிலித் தலைவர்கள் உதயம் பெற்று தாமும் வழிகெட்டு பிறரையும் வழிபிறழச் செய்வார்களென்ற இறைத்தூதரின் எச்சரிக்கை இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, மார்க்கத்தில் தெளிவற்றுத் தவிக்கும் எமது சமூகம், மார்க்கத்தை ஆழ அகலமாக கற்றுத் தேர்ந்த அறிஞர்களை அடையாளம் காணவேண்டும், சீரிய கொள்கைப் போக்குள்ள ஆசான்களையும் அழைப்பாளர்களையும் இனம் கண்டு கொள்ள வேண்டும். அத்தகைய அறிஞர் பெருந்தகைகள் உலகின் பல பாகங்களிலும் இன்றும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருப்பது அல்லாஹ் எமக்களித்த பாக்கியமாகும். தலைசிறந்த உலமாக்களை விட்டும் சமூகத்தை அகல விலக்கி அவர்களின் அறிவுப் பொக்கிஷங்களில் பற்றற்ற போக்கை உருவாக்கி தமது சொந்த உற்பத்திகளை கனகட்சிதமாகப் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கும் வழிப்பறிக் கொள்ளையர்கள் விடயத்தில் நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும். மார்க்க அறிவைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் இத்தகையதோர் அணுகுமுறையை நோக்கி எமது சமூகம் மீள்நடைபோடுவது இன்றைய காலத்தின் தேவையும் சமூகத்தில் தலைதூக்கியுள்ள குழப்ப நிலைகளுக்கான பரிகாரமுமாகும். இத்தகைய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எமது சமூகத்திற்கு நல்குவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

-  சில்மி இப்னு ஷம்சிலாப்தீன்