நாம் ஏன் காரூணின் வரலாற்றில் இருந்து படிப்பினை பெறக்கூடாது…?! – 02

بسم الله الرحمن الرحيم

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்ட பிரகாரம் நிலையான நற்கருமங்களே என்றும் மனிதனுக்குப் பிரயோசனம் அளிக்கக்கூடியனவாக உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்த விதத்தில்:

سُبْحَان الله وَالحَمْد لله ولا إله إلا الله وَالله أكبَر

என்று கூறுவது, சூரியன் உதயமாகும் நாட்களைவிடச் சிறந்ததாகவும், (முஸ்லிம்) பஜ்ருத் தொழுகையின் இரு ரக்அத்துகள் இந்த உலகம் மற்றும் இதில் உள்ளவற்றைவிடச் சிறந்ததாகவும் உள்ளது (முஸ்லிம்) போன்ற செய்திகள் நிலையான நற்கருமங்களுக்கு அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன.

மாறாக, இவ்வுலகத்தைப் பொறுத்தளவில் இதற்கு அல்லாஹ்விடத்தில் எப்பெறுமதியும் கிடையாது. அதனால் தான் நபியவர்கள்: "இவ்வுலகமானது அல்லாஹ்விடத்தில் ஓர் ஈயின் இறக்கைக்குப் பெறுமதியானதாக இருக்குமென்றால் அவன் காபிருக்கு ஒரு சொட்டு நீரைக்கூட வழங்கியிருக்க மாட்டான்" (திர்மிதி) என்றும், "மறுமையில் இவ்வுலகமானது உங்களில் ஒருவர் தனது விரலைக் கடலில் நுழைத்து வெளியே எடுக்கும் போது அவ்விரலில் படிந்திருக்கும் நீரைப்போன்றதாகும்" (இப்னு மாஜா) என்றும் கூறியுள்ளார்கள்.

இப்படிப் பல்வேறுபட்ட அமைப்புக்களில் அகங்கார வார்த்தைகளைக் கூறி பெருமையடித்த காரூணுக்கு அல்லாஹ் தண்டனை வழங்கும் முகமாக அவனை நிலத்தினுள் புதையுறச் செய்தான். இதனை பின்வருமாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.

"எனவே, அவனையும் அவனுடைய மாளிகையையும் பூமிக்குள் நாம் அழுந்தச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய எந்தக் கூட்டமும் இருக்கவில்லை. (தன்னிலிருந்தோ மற்றவரிடமிருந்தோ) அவன் உதவிபெறுபவர்களிலும் இருக்கவில்லை". (அல் கஸஸ்:81)

இத்தகைய அழிவில் இருந்து அவனைக் காப்பாற்ற அவனுடைய பணத்திற்கோ, அந்தஸ்திற்கோ,படைப்பலங்களுக்கோ முடியவில்லை.

காரூணுடைய சொத்து செல்வங்களைப் பார்த்து ஆசைப்பட்டவர்கள், அவனும் அவனுடைய மாளிகையும் பூமியில் அழுத்தப்பட்டதைக் கண்டு, "அந்தோ நாசமே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு சம்பத்துகளை ஏராளமாகக் கொடுக்கின்றான். தான் நாடியவர்களுக்கு அளவோடும் கொடுக்கின்றான். அல்லாஹ் நம்மீது பேருபகாரம் செய்திருக்காவிட்டால் நிச்சயமாக நம்மையும் பூமிக்குள் அழுந்தச் செய்திருப்பான் என்பதைப் பார்க்கவில்லையா? அந்தோ நாசமே! நிச்சயமாக அல்லாஹ்வின் நன்றியை மறுப்போர் வெற்றியடையவே மாட்டார்கள் என்பதைக் காணவில்லையா?"(அல் கஸஸ்: 82) என்று கூறியவர்களாக காலைப் பொழுதை அடைந்தார்கள்.

உண்மையில் இப்படிப்பட்டவர்கள் எந்த விடயத்தையும் வெளிப்படையான தோற்றத்தை வைத்தே பார்க்கிறார்கள். தான் காணக்கூடிய விடயம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவுக்கு உடன்படுகின்றதா?என்பதைப் பார்க்க மாட்டார்கள். இதனால் தான் இறுதியை தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

அதிகமான மனிதர்களுக்கு மார்க்கத்திலோ, மார்க்க அறிவிலோ எந்த ஒரு பற்றும் கிடையாது. மார்க்கம் எப்படிப்போனாலும் பரவாயில்லை நாம் நமது காரியத்தை மனம் விரும்பும் அமைப்பில் செய்துவிடுவோம் என்ற போக்கில் செயற்படுகின்றார்கள். அல்லாஹ் போதுமானவன்! யாராவது ஒருவர் பணம் கொடுத்தால் அவருடன் சேர்ந்து கொள்கிறார்கள். அவன் எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும் சரியே! பணம் ஒன்றே இத்தகையவர்களின் உயரிய நோக்கமாக இருக்கும். மாறாக, சரியான ஒரு முஸ்லிம் எப்போதும் எல்லா விடயங்களையும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் போதனைகளைக் கொண்டே அளவிடக்கூடியவனாக இருப்பான்.

ரிஸ்கானது அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தே தவிர இல்லை". (ஹூது: 6)மேலும், நபியவர்கள் கூறினார்கள்: "எந்த ஓர் ஆத்மாவும் தனது ரிஸ்கையும் வாழ்நாளையும் பூர்த்தி செய்யாமல் மரணத்தைத் தழுவமாட்டாது." (ஸஹீஹுல் ஜாமிஉ)

எனவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உங்களது தேடல்களை நல்ல முறையில் ஆக்கிக் கொள்ளுங்கள்!

நபியவர்கள் கூறினார்கள்: "எவருடைய முழுநோக்கமும் இவ்வுலகமாக இருக்கின்றதோ, அவருடைய விடயத்தை அல்லாஹ் பிளவுபடுத்திவிடுவான். மேலும், அவருடைய வறுமையை அவர் கண் முன்னிலையில் நிறுத்துவான். அவரிடத்தில் உலகம் அவருக்கென்று எழுதப்பட்டதைக் கொண்டேயன்றி வந்து சேரமாட்டாது. இன்னும், எவருடைய நோக்கம் மறுமையாக இருக்கின்றதோ, அவருடைய விடயத்தை அல்லாஹ் அவருக்கு கைகூட வைப்பான். மற்றும், அவருடைய செல்வத்தை அவரின் உள்ளத்தில் ஏற்படுத்துவான். மேலும், அவரிடத்தில் உலகம் இழிவடைந்த நிலையில் வந்து சேரும்". (இப்னு மாஜா)

எனவே, அல்லாஹ்வின் திருப்பொறுத்தமே அவசியமானது. எம்முடைய முழுநோக்கமும் மறுமையாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நாம் செயற்பட்டால் நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு இவ்வுலகத்தை அல்லாஹுத்தஆலா எம் காலடியில் கொண்டுவந்து சேர்ப்பான். எவ்வளவுதான் மனிதர்கள் சொத்து செல்வங்களுக்குப் பின்னாலும், பட்டம் பதவிகளுக்கும் பின்னாலும் சென்றாலும் சரியே!

இறுதியாக காரூணுடைய விடயத்தில் அல்லாஹ் எமக்குச் செய்யும் இரு உபதேசங்களை இச்சந்தர்ப்பத்தில் நாம் பதிய வைக்கின்றோம்.

"மறுமையின் அந்த வீடாகிறது அதை பூமியில் அகம்பாவத்தையும், குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே நாம் சொந்தமாக ஆக்கிவிடுவோம். இன்னும் நல்ல முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான். யார் நன்மையைக் கொண்டு வந்தாரோ, அவருக்கு அதைவிடச் சிறந்தது (கூலியாக) உண்டு. இன்னும், யார் தீமையைக் கொண்டுவந்தாரோ (அப்போது) தீமையைச் செய்தோர் அவர்கள் எதைச் செய்து கொண்டிருந்தார்களோ அதையல்லாது (வேறு எதையும்) கூலியாகக் கொடுக்கப்படமாட்டார்கள்". (அல் கஸஸ்: 83, 84)

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

-    அபூ ஹுனைப் (மதனி)